சனி, 9 ஏப்ரல், 2016

கல்லாடனார் குறிக்கும் மரங்கள்

இதைத்  தொடர்வோம்:

http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_8.html


வழையம லடுக்கத்து     
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.=----  கல்லாடனார் 

அவர்தம் குறுந்தொகைப் பாடலில் ஓமை மரம்பற்றிக் குறிப்பிடுகிறார். இதன் குச்சியைப் பல்துலக்க பயன்படுத்தலாம் என்பதால் இதை பல்குச்சி மரம் (tooth brush tree )  என்றும் சொல்வர்.  சல்வடோரா பெர்ஸிகா  1   என்ற
தாவரவியற் பெயரையும் உடையதாகும் இது. கீதா மணவாளன் முதலிய இந்திய அறிவியல் ஆய்வாளர்கள் இதில் மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன என்பதாகவும் குறிப்பிடுவர். நபி நாதர் இதனைப் பலதுலக்க பயன்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளார் என்று அறிகிறோம்.  மேல்விவரங்களுக்கு விக்கிபீடியாவைப் பார்க்கவும்.
ஓமை என்பது மாமரத்தையும் குறிப்பதாகக் கூறப்பட்டாலும்  கல்லாடனார் பாலையைக் குறித்திருப்பதால், இந்தப் பாடலில் மாமரம் பற்றியதொன்றுமில் லை என்று கருதவேண்டும்.

வழை :  gamboge

வழை என்னும் மரத்திலிருந்து காவி நிறப் பிசின் எடுக்கப்பட்டு, துறவிகளில் உடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தையும் புலவர் குறிக்கிறார்.

இவற்றைப் பாடலுடன் அடுத்துக் காண்போம்.

தொடர்ந்து வாசிக்க:

தொண்டைமான்களின் அரசின் சிறப்பு

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_91.html

-------------------------------------------------------------------------------------

1  Salvadora persica (ArakGalenia asiaticaMeswakPeeluPīlu,Salvadora indica, or toothbrush treemustard treemustard bush)

நிமித்தங்கள் (குறுந்தொகை, கல்லாடனார் )

சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம் ,

 குறுந்தொகை கல்லாடனார்


குருகும் இருவிசும்பு இவரும் புதலும்
வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வரு

குருகு என்பது நாரை.  அது உயரப் பறந்தால் பிரிந்து சென்றவர் விரைவில் திரும்பி வருவார் என்பதை முன்னறிவிக்கும் என்ற நிமித்தம் உண்டு என்று இந்தப் பாடல் கூறுகின்றது. நாரைகள் வாழ் இடங்களுக்கு அருகில் இருப்போரிடம் இதைக் கேட்டறிய வேண்டும், இதை இந்தப் பாடல் மூலமே யாம் அறிகிறோம். நாரைகள் என்ன, கோழி வாத்து முதலியவற்றையே இனி விலங்குக் காட்சி சாலையில் தான் காணவேண்டி வரும். தம் பாடல் மூலம் இதை நமக்குத் தெரிவித்த கல்லாடனாருக்கு நாம் நன்றி சொல்வோம்.  'குருகும் இருவிசும்பு இவரும்"  என்று அழகிய தொடரில் இதைக் கூறுகிறார்.

"புதலும் வரிவண்டு ஊத வாய் நெகிழ்ந்தன "  என்பார் புலவர். புதல் என்பது அழகிய தமிழ்ச் சொல்.  அதனடி புது என்பது.  அரும்பைக் குறிக்கும்.  புதல்வி புதல்வர் என்பவும் இச்சொல்லுடன் தொடர்பு உடையன.  பூத்தன என்று வழக்கம்போல் வரணிக்காமல் :வாய் நெகிழ்ந்தன என்பது மிக்க இனிமை பயப்பதாம்,  நெகிழ்ந்ததும் வண்டுகள் வந்து அங்கு ஊதாநின்றன என்பது இன் தமிழால் நமக்கு இன்பம் தருகிறது.  இதுவும் ஒரு நிமித்தம். முன்னறிவிப்பு. அவர் வந்துவிடுவார் என்பதை முன்குறிக்கின்றது.

இவைகளெல்லாம் தலைவியின் நீங்கிய நிமித்தங்கள். தொலைவில்
நடந்து தோழியும் தலைவியும் காண நடப்பன.  தலைவிக்கே தோளில்  ஒரு விம்மல். ஒரு பூரிப்பு. ஒரு துடிப்பு. இது அவளைத்
தொட்டு நிகழும் ‍ அதாவது இடையீடு இன்றி  -  தற்சார்பு நிலையில் -  (personal)  நடைபெறும் நிமித்தம். அதனாலும் அவர் வந்துவிடுவார் என்று முன்குறிப்பாகிறது.

ஆகவே தோழிக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. அதனால்   தேற்றுகிறாள் தலைவியை. சுரிவளை என்பது சங்கு வளையல்.
சுரிவளை அழகுறும்படியாக  (பொலிவு)  தோள்கள் செற்றின. செறிவு பெற்றன. புலவரின் சொற்களால்: " சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்." என்று வருகிறது.

இந்தத் தமிழைச் சிந்தித்து மகிழுங்கள். அடுத்த இடுகையில் தொடர்வோம்.

தொடர்ச்சி


1359 03082021
சில திருத்தங்கள் செய்தோம்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

அத்தான் வருவாக ! என்ற தோழி

காதலர் வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள்  (நிமித்தங்கள்)  சில அவளுக்குத் தோன்றுகின்றன. இவற்றைக் கண்டு அவள் ஆற்றாதவள் ஆகின்றாள். இவற்றின் பொருள்  அவள்  அறியவில்லையோ ?:

என்ன இந்த நிமித்தங்கள்?  குருகுகள் உயரப் பறக்கின்ற‌ன.  மலர்களில் வண்டுகள் ஊதி இசை பரப்புகின்றன.  அவள் தோள்களோ சற்றுத் தடித்துவிடுகின்றன. இவற்றைக் கண்டு  இவற்றின் பொருளையும்  கண்டுகொண்ட  தோழி, கவல்கின்ற தலைமகளுக்குத்  தேறுதல் கூறுகின்றாள்.

இவை கூறும் கல்லாடனாரின் குறுந்தொகைப் பாடலை (260(  பாடி
மகிழ்வோமா?

குருகும் இருவிசும்பு இவரும் புதலும்
வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் !  வாழி தோழி பொருவார்
மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண்தேர்த் தொண்டையர்  வழையம லடுக்கத்து
கன்றில் ஓர் ஆ விலங்கிய
புன்றாள் ஓமைய சுரனிறந்  தோரே.


குருகும் இருவிசும்பு இவரும் --  நாரைகளும் அகன்ற வானில் உயரப் பறக்கின்றன.

புதலும் வரிவண்டு ஊத  வாய் நெகிழ்ந்தனவே!  ‍   அரும்புகளும் வரிகளையுடைய வண்டுகள் வந்து இசைக்க,
அவிழ்ந்து மலராயின;

சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும் :   (உன்)  சங்கு வளையல்களால் அழகு பெற்ற கைகளை யுடைய தோள்களும்
பூரித்துவிட்டன;

பொருவார் மண்ணெடுத்து உண்ணும் அண்ணல் யானை :  தோற்ற பகைவர்
நிலங்களின் விளைச்சலை எடுத்து உணவு கொள்ளும் உயர்ந்த‌
யானையும்;

வண்தேர்த் தொண்டையர்  :  வண்மை பொருந்திய தேரும் உடைய‌
தொண்டைமான்களின்;

வழையம லடுக்கத்து : சுரபுன்னைகள் மிகுந்த மலைத்தொடரில்;

கன்றில் ஓர் ஆ விலங்கிய :  ஒரு "மலட்டு" ( அதாவது இன்னும்கன்று ஈனாத ) ஆனை  அங்குத்  தங்கிவிடச் செய்த  ;

புன் தாள் ஓமைய சுரன் இறந் தோரே.  ‍ புன்மையான அடிகளை உடைய ஓமை மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள  பாலையைக் கடந்து சென்ற உன் தலைவர் ( காதலர் ).

வருவர்கொல் ‍  :  அவர் வந்துவிடுவார்! நீ வருந்தாதே!

என்று தேற்றிய தோழியைத்  தலைமகள் வாழ்த்துகிறாள் :  வாழி தோழி ! 

இதனைக் கொஞ்சம் விரிவாக அடுத்துக் காண்போம் .http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_9.html

தொடர்ச்சி :

நிமித்தங்கள்

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_9.html

கல்லாடனார் குறிக்கும் மரங்கள்

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_81.html

தொண்டைமான்களின் அரசின் சிறப்பு.

http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_91.html


http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_13.html