சனி, 19 ஏப்ரல், 2014

Words of cleanliness

ஐந்து புலனுணர்ச்சிகளில் "தொட்டறிவு" (sense of touch)  அல்லது "தோலுணர்ச்சி " ஒன்றாகும். இதனை  ஊறு  என்போம்.

ஊறு  என்பதோ உறுதல் என்னும் வினையடியாய்ப் பிறந்த சொல். உறு என்பது  ஊறு என்று முதலெழுத்து நீண்டு பெயர்ச்சொல் ஆயிற்று. இப்படித் திரிந்து பெயரானவை எண்ணிறந்தவை ஆகும்.

உறத்   தக்கது, அதாவது தொடத் தக்கது தூய்மை.  தொடத் தகாதது அழுக்கு அல்லது துப்புரவு இல்லாதது.

குழந்தைப் பருவத்திலேயே நமக்கு இது சொல்லித் தரப்படுகிறது.

எனவே உறுதல் தொடத்தக்கது என்பதையும் அப்புறம் தொடத்தக்கது தூய்மையையு,ம் குறித்தன.

உறு> உது > உத்தம் > சுத்தம் என்று திரிந்தது.

உது+அம்  = உத்தம்.   (இங்கு  து+அம் = த்தம் என்றானது).

உறு + அம்  > உற்றம் > உத்தம் எனினுமாகும்.

உத்தம் > உத்தமர் . (தொடற்குரியவர்,  நல்லவர், நல்ல குணங்களை உடையவர். என்று   பொருள் விரிவு கொள்ளும்).

"தின்மை செய்பவரே --  அண்டித் 
தீண்ட ஒண்ணாதார் "

கவிமணி தேசிக விநாயகம்  பிள்ளை.  



"தீயாரைக் காண்பதுவும் தீதே" என்பதனால்,  தீயார் அல்லது  சுத்தம் இல்லாதவர், மனத்தாலும் கையாலும்  மெய்யாலும் தொடற்குரியர் அல்லர்

மொழி வளர்ச்சி என்பது கருத்து வளர்ச்சியும் அதற்கேற்ற சொல் திரிபும் ஆகும்

உத்தமர் என்பது உ+ தமர் எனவும் பிரியும். உ = முன்னிலை; தமர்  = நம் ஆள்  என்பது.  முன்னிலையாய் உள்ள நம்மவர் என்றும் பொருளாம். இப்படி இச்சொல் இருபொருள் தரும்.

"தான் என்றும் தமர் என்றும் நினைப்பதன்றித் 
தமிழ் நாட்டின் நலத்தினுக்கே உயிர் உடல்கள் 
அமைக "

--  பாரதிதாசன் 



வெள்ளி, 18 ஏப்ரல், 2014

காட்டில் வாழ்ந்த காலத்திலே......




காட்டில் வாழ்ந்த காலத்திலே  ---  பல
கரடிகள் புலிகள் கொன்றன நம்மை
நாட்டில் வாழும் நாளுற்றதும்  --- நலம்
நல்கிடும் உந்துகள் கொல்வன உண்மை !

வேறு சந்தம்


ஏழை இன்பொருள் மேல்பெற்றவன்---- ‍‍‍ ஞாலம்
ஏத்திடும் போற்றிடும் நூல்கற்றவன்
மோழை மூடன் யாரென்கிலும்---  ‍‍‍உந்து
மோதிக் கொல்படை! கூராயுதம்.

மரணம் வருவது காத்தோமா நாம்?  -  பல
மரணப் படைக்கலன் சேர்த்துவைத்தோம்!
கரணம் தப்பினால் மாண்டுவிடும் ---   அந்தக்
காரியம் மாறுமோ?  யாண்டுமில்லை!

விபத்தில் இறந்தார் யாவருக்கும் ---  நெஞ்சு
விம்மிய துயருடன் விடைபகர்வோம்!
சிவத்தில் இணைந்தார் இன்னவர்கள்!---  நம்மின்
சீர்பெறு உலகில் முன்னவர்கள்!.


http://www.nst.com.my/latest/font-color-red-karpal-singh-s-death-font-a-picture-of-grief-at-the-hospital-1.570504


http://www.thehindu.com/news/international/world/eminent-malaysian-lawyer-karpal-singh-dies/article5921311.ece

வியாழன், 17 ஏப்ரல், 2014

முயற்சித்தல்


இந்தச் சொல்லின் அடிச்சொல் எதுவெனின்,  முயலு(தல்) என்பதே ஆகும். அல்லது முயல்தல் எனினும் ஏற்கற்பாலதே. முயலல் என்பதும் சரிதான்.

முயல் என்பதே அடியாய் உள்ள வினைச்சொல்.  "கேள்வி முயல்" என்று ஆத்திசூடியில்   வருகிறது  அன்றோ?.  அப்படி  என்றால்,  கேள்வி  கேட்டு அவற்றின் மூலம்  அறிவை விரிவு படுத்திக் கொள் என்பது பொருள்.

முயல் என்று  ஓர்  உயிரி  உண்டு. இங்கு  நமது கவனத்தில் இருப்பது ஓர்  வினை.  ஓர் உயிரி  (விலங்கு )  அன்று.

முயல் + சி  =   முயற்சி.  சி -  விகுதி.

வினைச்சொல்லினின்றும்  சி விகுதி பெற்று ஓரு தொழிற்பெயர்  அமைந்துள்ளது.

முயற்சி  மீண்டும் வினையாகுமா?

முயற்சித்தல்   என்பது சரியானால், பயிற்சித்தல், உயர்ச்சித்தல்  என்றெல்லாம் வரவேண்டுமே. தொழிற் பெயர்கள் இங்ஙனம் அமையா.

"முயற்சிக்கிறான்" என்று பேசக் கூடாது,  எழுதவும் கூடாது.

தொல்காப்பியத்தில் தொழிற்பெயரிலிருந்து வினை அமைவது காணப்படுகிறது.

"மெய்யி   னி யற்கை  புள்ளியொடு  நிலையல் "   (தொல் 15).

என்ற நூற்பாவைப் பாருங்கள்.

நில்  + ஐ =  நிலை.

நிலை -  நிலையல் மற்றும்  நிலைத்தல் என்று  நிலை என்ற பெயர்ச்சொல்  மீண்டும் வினை ஆகவில்லையா?

பெயரே மீண்டும் வினை ஆனாலும்,  நிற்றல் என்பதன் பொருள் வேறு,  நிலைத்தல் என்பதன் பொருள் வேறு. முயற்சித்தல் என்ற சொல்லமைப்பிலிருந்து இது வேறுபடுவது ஆகும்.
முயலுதல் என்பதும் முயற்சித்தல் என்பதும் பொருள்  ஒன்றுதான். ஆகையால், முயற்சித்தல் என்பது வேண்டாத நீட்சி என்பர்.

எனினும் முயற்சித்தல் என்பது இன்னும் வழங்கவே செய்கிறது  -- தவறென்று ஆசிரியர் கடிந்தாலும்.

muyaRchiththal is a malformation.

கோர்வை, முயற்சிப்பது" என்பவெல்லாம் பிழைகள் என்பதில் ஐயமில்லை.தாளிகைத் துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொல்கிறார்: கோவை என்று எழுதினால் மக்களுக்குப் புரியாது, முயலுதல் என்றால் முயலைப்பற்றிய எண்ணம் வந்துவிடுகிறது என்று! -- சொல்லிப் புன்னகை வேறு புரிந்தார். அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் போலிருக்கின்றது. நாம் நல்லதமிழ் பயில்வோம் ------Sivamala, writing on 18.6.2006