இப்போது சித்து என்பதையும் தொடர்புடைய சொற்களையும் கவனித்து ஆய்வோம்.
முனிவர்கள் பலர் பரத கண்டத்தில் வாழ்ந்துள்ளனர். விசுவாமித்திரர் போலும் முனிவர்கள் பேராற்றல் காட்டிப் பெரும்புகழ் படைத்தவர்கள். இவர்களை நாம் பெரிய முனிவர்கள் என்று சொல்வோமானால் பல்வேறு முனிவர்கள் அத்துணை ஆற்றல் போற்றல்களுக்கு இலக்காக இல்லாமல் சிறுசிறு நிகழ்வுகள் மூலமே தங்கள் இறைத்தொடர்பினை வெளிப்படுத்தியவர்களும் இருந்துள்ளனர். இவர்களைச் சித்தர்கள் என்று மக்கள் போற்றியுள்ளனர்.
இது பேரரசர், சிற்றரசர் என்று அரசர்களை வகைப்படுத்தியது போலவே யாகும். பெருமை சிறுமை என்று வகைப்படுத்தப்பட்ட இறையறிவர்கள் மட்டுமல்லர், மரங்களில் கூட இத்தகைய பாகுபாடுகள் நுழைந்துள்ளன. மா மரம் என்பது ஒரு மரத்தின் பெயரென்றால், அரச மரம் என்பது அரசுமுறையோடு ஒப்பிட்டு வைக்கப்பட்ட பெயராகும் என்பது அறிக. சித்தரத்தை அல்லது சிற்றரத்தை என்ற பெயரையும் காண்க. பெருங்காயம் என்று ஒரு காயப்பொருளுக்குப் பெயர் உள்ளமை நீங்கள் அறிந்தது. இப்படிப் பெயர் புனைவது பெருவழக்கு ஆகும்.
சிறு > சிற்றர் என்பது சித்தர் என்று திரிந்துவிட்டது காணலாம். சித்தர் அறிந்து சொன்ன வைத்தியம் சித்தவைத்தியம் ஆயிற்று. வைத்தியம் என்றால் வைத்து - கொஞ்சம் நீண்ட காலமாகத் தகுந்த சிகிச்சை யளித்துக் குணப்படுத்துவது என்று பொருளாயிற்று.
பார்த்து வியக்கத் தக்க சிறுசிறு வித்தைகளை இந்தச் சித்தர்கள் செய்தார்கள். கொடுத்த உணவினை வீட்டுக் கூரைமேல் எறிந்து "யானுமிட்ட தீ மூள்க மூள்கவே:" என்று சொல்ல, கூரை தீப்பற்றி எறிந்த வியப்புச்செயல் ஒரு வித்தை எனப்பட்டது.
வியத்தல்: விய > வியத்தை> ( இடைக்குறைந்து) வித்தை ஆனது. இது வியப்புக்குரியதைக் குறிக்கும். படிப்பு பற்றிய வித்தை, மற்றொன்று. அது வித்து என்னும் சொல்லினின்று பிறந்தது ஆகும்.
சித்தர் செய் விந்தைகள், சித்து எனப்பட்டது. இது சிறு > சிற்று> சித்து என்று அமைந்த சொல்.
சின்> சிந்து என்பது சிறிய அளவில் கொட்டும் நீர்குறிக்கும் சொல். மனத்துச் சிறிய எண்ணங்கள் சிந்தனை எனப்பட்டது. தொடர்சிந்தனையாக இல்லாம ல் நீண்டு செல்லாத மனவினையாகும்.
சித்தர், சித்து என்பதை இவ்வாறு அறிக.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக