செவ்வாய், 14 ஜனவரி, 2025

எங்கே செல்லுபடி ஆகவில்லை? மூழ்குதல், அலைகுதல்.

 பண்டைத் தமிழைத் தெளிவாகக் கண்டறிந்து கூறும் ஆராய்ச்சிகள் நம்மிடையே உண்டு என்று கூற முனைவதினும் அஃது இல்லை என்று கூறுவதே உண்மையாகும். எனினும் அதன் தேடல்கள் அவ்வப்போது நம் தமிழரிடையே ஏற்பட்டு ஏற்பட்டு அடங்கிப் போயின. சில எழுதிச்சேர்ப்புகள்  அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கலாம். இதனால் நாமறிவது என்னவென்றால், எதையும் எடுத்துக்காட்ட இயல்வதில்லை என்பதுதான்.

ஓர் இரண்டெழுத்துத் தமிழ்ச்சொல்லை   எடுத்து, அதில் ஏதும் பண்டைத் தமிழ்க் கூறுகள் கிட்டுமா என்று நோக்குவோம்

இன்று  "அலை" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இச்சொல் இன்றுவரை வழக்கில் இருக்கும் சொல்தான். இச்சொல் பழங்காலத்திலும் இருந்த சொல் என்றே இதை நாடுவோம்.  இச்சொல் அலைதல் என்று வினைவடிவத்திலும் இன்று தமிழில் கிட்டுகிறது.  கடல் இன்று ஓயாமல் அலைகிறது என்று சொல்லும்போது  இச்சொல் இன்னும் பொருளுடன் இலங்குசொல் என்பது வேறு சான்றுகள் வேண்டாமலே தெரிகிறது. இச்சொல் மட்டுமேயன்றி,  அலைகுதல்  என்ற சொல்லும் உள்ளது.  அகரவரிசைகள் கோத்தளித்தவர்கள் இதையும் பட்டியற்படுத்தி யிருப்பதால், இச்சொல் இவ்வடிவிலும் உள்ளது என்றே முடிவுசெய்தல் வேண்டும். மூழ் என்ற சொல்  மூழ்கினான் என்றே இறந்தவினை காட்டுவதாய் இன்று இருப்பதால் மூழ்கு(தல்) என்பதே இற்றை வினைவடிவம் ஆகும். ஆனால் மூழ்தல் என்ற சொல்லும் குகரத் துணை இன்றி வருவதால்,  மூழினான் என்று பண்டைத் தமிழில் சொல்லமுடிந்துள்ளது என்பது தெரிகிறது. இன்னும் மூழ்ந்தான் என்று இறந்தகாலம் சொல்வது சரியாகவே கொள்ளப்படும்.  ஆழ்ந்தது என்பது சரி எனின் மூழ்ந்தான் என்பது சரிதான். சொற்கள் போகப்போக துணைச்சொற்கள் பெற்று நீள்வது சிறப்பு ஒன்றுமில்லை.  மொழியானது வீண் ஒலியடுக்குகளில் காலம்கடத்துகிறது என்பதே உண்மை. பேச்சுத்தமிழ் தேவையற்றுச் சொற்களை நீட்டி, மக்கள் மகிழ்வாய் இருந்துள்ளனர். பிறமொழிகளிலும் இவ்வாறு சொற்கள் நீட்சி பெற்று இருத்தல் கூடும். சமஸ்கிருதம் முதல் எல்லா இந்திய மொழிகளிலும் இவ்வாறு நீட்சிகள் ஏற்பட்டிருத்தல் இயல்பு.  ஆனால் மேற்கொண்டு ஆராய்தல் வேண்டும்.

அலைகு என்ற வினையாக்கத்தில்  இன்று   அது என்பவை சென்று இணந்தன. இது நிகழ்காலம் காட்டுதல்.  இன்று என்பது  இடைக்குறைந்து இறு என்று ஆகி, அலைகு+ இறு+ ஆன் > அலைகிறான் என்றானது. இவற்றுள் அலை என்பதை மட்டும் அறிந்துகொண்டு,  கிறான் என்பது தனியாக்கி, கிறு+ ஆன் என்று பிரிந்ததால்,  நிகழ்காலம் கண்டுகொண்டனர். சிலர் கு என்பது இல்லாமல் அலை என்பதை மட்டும் வினையாகக் கையாண்டனர்.

ஆனால் மூழ்கு என்ற சொல்லில் குகரம் எட்டிய ஒட்டு உயர்வை,  அலைகு என்பது அலை என்னும் சொல்லில் பெற்று தக்கவைத்துக்கொள்ள இயல்வில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: