முன்னர் நாம் சைகை என்ற சொல்லை ஆய்ந்து கண்டுள்ளோம். இதனை நம் நேயர்கள் வாசித்து இன்புற்றுள்ளனர். செய் என்ற சொல் சை என்று திரிதலைப் பற்றி முன்னர் விளக்கியுள்ளோம். தொடர்புடைய இடுக்கைகள் இங்குக் கிடைக்கின்றன:
1. சைகை, சைதன்னியம் :
https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_23.html
2. சைவ உணவு :
https://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_1.html
இவற்றுள் செய் என்ற சொல்தான் சை என்று திரிந்தது என்பது தெளிவிக்கப்பட்டது.
செய் என்ற சொல் விளைநிலம், விளைபொருள் என்ற பொருளில் வருவதுண்டு. எடுத்துக்காட்டு: நன்செய், புன்செய். விளைவித்தல் என்பது மனிதனின் செயல்பாடு ஆதலின், செய் என்ற சொல் இவ்வாறு சொற்களை உண்டாக்கியது நாம் உணர்வதற்கு எளிதானது ஆகும். செய்கை எனற்பாலது சைகை என்று மாறியதும் எளிமையானதே ஆம்.
ஆயினும் சமிக்கை என்பது செய் என்ற சொல்லினின்று தோன்றவில்லை. ஆயினும் செய்கையைக் குறித்து எழுந்ததே ஆகும். தாம் பிறருக்குச் செய்கையால் இடும் குறியே சமிக்கை ஆகும். அதை இவ்வாறு உணரலாம்:
தம் இடுகை > தம்மிடுகை
தகரம் சகரமாய் மாறவல்லது. இவ்வாறு மாறுதல் பல இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: தனி > சனி. ( தனித்தன்மை வாய்ந்த கிரகம்). தங்கு> சங்கு. ( உள் தங்கி வாழும் உயிர்).
வதி ( இடத்தில் வாழ்தல்) > வசி(த்தல்).
மனத்துட் பதிவு:
பதி > வதி > வசி > வசியம்.
எனவே:
தம்மி(டு)கை > ச(ம்)மிக்கை.
வல்லொலியாகிய டு போன்றவை மறையும்.
பீடுமன் > பீமன் > வீமன். ( பீடுடைய மன்னன்).
பீமன் > பீமா.
சம்மிகை என்ற பாலது சமிக்கை என்று வலித்தது.
இதன் திரிபு: சமிஞ்ஞை. இது சமிக்ஞை என்றும் எழுதுவதுண்டு.
சைக்கினை என்பதும் உண்டு. இது குறுகி சைன்னை என்றுமாம்.
அறிக. மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக