சனி, 27 மே, 2023

யௌவன்னம் ( யௌவனம்)

 யௌவன்ன ராணி  நான் 

இசைபாடும் வாணி நான்


என்ற  பாடலொன்றை  கவி கா மு ஷரீப்( 1914  -1994) எழுதியிருந்தார்.

இந்தச் சொல்லும்   ( யௌவனம்) அவ்வப்போது தலைகாட்டுவதுண்டு.  இது என்ன சொல்லென்று அறிந்து இன்புறுவோம்.

எழுத்துக்களிலெல்லாம் அகரமே  மிக்கச் சிறப்புவாய்ந்தது.   அகர முதல எழுத்தெல்லாம்  என்றார் திருவள்ளுவர்.

கள் என்ற பன்மை விகுதி பெரிதும் வழங்காத காலம் அவருடைய காலம்.  கள் என்பது உயர்திணைக்குரிய பன்மை விகுதி அன்று என  அந்நாளைய நற்புலவர்கள் கருதினர். இது நிற்க,  

"அவ்  அன்ன"  என்றால்  அகரத்தைப் போல் மிக்கச் சிறப்பு உடையது என்றே பொருள்.  அன்ன என்பதற்குப்  போல என்று பொருள்.  இஃது ஓர் உவம உருபும் ஆகும்.

ஆனை என்ற சொல்,  யானை என்று திரிந்தது.  இப்போது யானை என்பதே  நாகரிகமான வடிவம் என்று கூட சிலர் நினைக்கலாம்.  ஆண்டு என்ற சொல்லும் அவ்வாறே  யாண்டு என்றும் திரியும்.  பழந்தமிழை அறியாத புதுப் பட்டதாரிகளாக இருந்தால்,  யாண்டு என்பதை ஆண்டு என்று  திருத்தி,  மன நிறைவு கொள்வர்! நாம் சொல்ல வருவது,  அகர வருக்கச் சொற்கள், யகர வருக்கமாகத் திரியும் என்பதுதான்.

எனவே,  அவ்வன்ன  என்பது யௌவன்ன என்று திரியும்.  திரியவே  யௌவன்ன என்ற சொல்லின் பொருளும்  அகரம் நிகர்த்த அழகு உடைத்து  ( உடையது)  என்பதுதான்.

இவ்வாறே  ஆரையடா சொன்னாய்  அது என்றால்,  யாரையடா சொன்னாய் அது என்றுதான் பொருள்.

யௌவன்ன(ம்) என்பது பின்னர் யௌவனம் என்று அம்  விகுதி பெற்று ஒரு சொல்லானது. ஒரு னகர ஒற்று மறைந்த சொல் அது.  வனப்பு என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளிருப்பினும்,  இங்கு அந்தச் சொல் இல்லை.

யௌவ(ன்)னம் என்பது இடைக்குறைந்து  யௌவனம் ஆனது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: