புதன், 17 மே, 2023

கைகோர்ப்பு -- சொல்லில் தவறு என்ன?

 கைகோர்ப்பு என்று பேசுவதும் எழுதுவதும் சரியா?

தெரிந்துகொள்வோம்.

கோத்தல் என்ற சொல் "ஏடுகோத்தல்" என்ற பதத்தில் உள்ளது.  இது பழங்காலத்தில்  ஓலைச்சுவடிகளில் காய்ந்த இலைகளைப் பதப்படுத்திக் கோத்தல் அல்லது தைத்தல் என்று பொருள்படும்.  நாளேறிவிடின்,  ஓலைகள் காய்ந்து மொருகலாகி உடைந்திடும்.  இதற்கு ஒன்றும் செய்யமுடியாமையால்,  புதிய ஓலைகளைத் தயார்ப்படுத்தி,  அவற்றில் பெயர்த்தெழுதினால் நூல்கள் பாதுகாக்கப்படுதல் இயலும்.  பெயர்தெழுதுகிறவர்கள் கவனக்குறைவால் பிழைகள் செய்துவிடின் மொழிமரபு கெடுதலாக நேரிடக்கூடுமாதலின், இவ்வாறு செய்தலில்  பிழையாமை காத்தல் முற்றிலும் இயல்வதில்லை.

செயற்கரிய என்று தொடங்கும் குறளில், ஐந்தாம் சீர் "செயற்குரிய" என்று வந்திருக்க வேண்டும் என்று தமிழறிஞர் ஒருவர் கூறியுள்ளார். நூல்பெயர்தெழுதியவர்கள்  பிழைபட்டிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

கோத்தல் என்பதே வினைச்சொல் ஆதலின்,  கோர்த்தல் என்ற வினை இல்லை. கோ> கோத்தல்;  கோ>கோர்>கோர்ப்பு என்பது இல்லை. ஆதலின், கோர்ப்பு எனற்பாலது பிழையான சொல்லே ஆகும்.

ஆசாரக்கோவை என்ற நூற்பெயரில்,  கோவை என்றுதான் வரும்.  கோர்வை என்று வருதல் இல்லை.   கோ> கோவை.  வை என்பது விகுதி.

கோ> கோவணம்,   உடலை அண்மிக்கும்படியாகக் கோக்கப்படுவதாதலின், கோவணம் ஆகும்.  கட்டணம் என்பதிற்போல, அணம் ஒரு தொழிற்பெயர் விகுதி.

கோப்பு,  கோவை, கோவணம் என்றே எழுதுக.

அரைஞாண் கயிற்றில் கோப்பது ஆதலின்,  கோவணம் ஆனது.

கௌபீனம் என்பது திரிபு.

கோ + பு+  இன் + அம் >  கோபீனம்-  கௌபீனம் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

குறிப்பு:

கோ+ பின் + இன்+ அம்:   கோ -  கோக்குங்கால் ,  பின் - பின்னாலும் கோத்து,  இன்-  இன்னும் ( முன்னும் ) கோத்து,   அம்-  அமையும் சிறு துணி என்பது பொருள். வாக்கியமாக்கச் சரியாக வருகிறது.

காவு + பின் + அம்:  காவ்பீனம் > கௌபீனம். பின் புறம் காத்துக்கொள்ள அணியப்படுவது, ( பூச்சி முதலிய பின்னால் வந்து கடித்தால், கடித்தபின் தான் தெரியும் ஆதலால்,  பின் புறம் முதன்மை வாய்ந்த உடலிடம்  ஆனது. உடலில் நகர்கையில் தெரிந்தாலும் தடுக்க இயலும்,

இருவழிகளிலும் அமையும் சொல் இதுவாகும். இருவழிகளிலும் தமிழ்ச்சொற்கள் அடிச்சொற்களாய் இருத்தலால் இது தமிழ்ச்சொல்.  பூசாரிகள் கோவணம் கட்டிக்கொண்டு நிற்பதில்லை. ஆதலால் இது வயல் தொழிலாளர்களிடையே தோன்றியசொல்.

Anyway,  it is kOvaNam,  not kOrvaNam, that is the point .


கருத்துகள் இல்லை: