புதன், 23 நவம்பர், 2022

உங்களின் போட்டியாளன்யார்? சொல்: சடுத்தம்.

 நீங்கள் வாழுமிடத்திலிருந்து  ஆயிரம் கல்தொலைவில் உங்களை அறியாத ஒருவன் வாழ்கிறான்.  அவனுக்கும் உங்களுக்கும் தொடர்பில்லை.  அவன் உங்கள் எதிரியாக ஆகிவிடமுடியாது. உங்களுடன் கூடித் திரிபவன் தான் உங்களுக்கு எதிரியாக வருவதற்கு மிக்கப் பொருத்தமான இயல்புகளை எல்லாம் வெளிக்காட்டி, நாளடைவில் முழு எதிரியாக மாறத் தக்கவன்.

அடுத்திருக்கும் நண்பனே  உங்கள் எதிரி.  அதற்கான கால நேரம் வந்துவிட்டால் கணவனும் எதிரியாவான்; மனைவியும் எதிரியாவாள்.

ஔவைப் பாட்டி என்ன சொன்னாள் என்பது உங்களுக்குத் தெரியும்.

" உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா;

உடன்பிறந்தே கொல்லும் வியாதி ----- உடன்பிறவா

மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரு முண்டு"

என்றது பாட்டியின் மூதுரை.  

உறவும் பகையாகிவிடும்; நட்பும் நஞ்சாகிவிடுவதுண்டு.   ஆகவே எதையும் ஒருகை நீட்டத்துக்கு எட்டவிருந்து கையாளுதல் எப்போதும் நல்லது.

இந்தக் கருத்து, சொல்லமைப்பிலும் இடம் பிடித்துள்ளது.

"அகலாது அணுகாது தீக்காய்க " என்கின்றார் தேவர்தம் திருக்குறளில்.  அது நண்பனுக்கும் பொருந்தும். 

இதையே தெரிவிக்கிறது சொல்லாய்வு.   

போட்டி பகைமையாகவும் மாறும்.   சடுத்தம்  என்பது அடுத்தியலும் போட்டி.

அடு (த்தல்) >  சடு >  சடுத்து + அம் >  சடுத்தம் ஆகிறது.

ஒரு காலத்தில் இச்சொல்வழங்கி  நல்ல வேளையாக இன்னும் நிகண்டுகளில் உள்ளது.  நம் நற்பேறுதான்.

நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று வீரம் பேசுவதும் சடுத்தம் பேசுதல் எனப்படும்.

இந்தியாவுக்கு அடுத்தது பாகிஸ்தான்.  அதற்கடுத்தது ஆஃப்கானிஸ்தான்.

உக்ரேன் ரஷ்யாவினின்று பிரிந்தது.  அடுத்துள்ளது.

இவையெல்லாம் பிறப்புக்கணிப்புகளின்படி தொடர்வது.

அடு > சடு என்பது உங்களுக்குத் தெரிந்த அகரச் சகரத் திரிபு.   அமணர் > சமணர் என்பது போலும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்




கருத்துகள் இல்லை: