வெள்ளி, 18 நவம்பர், 2022

போரும் மனிதனும்

 போரொன்று வருவதற்குக் காரணிகள் பலவே

போரில்லா உலகெனலோ  ஓர்கனவாம் உண்மை!


வெற்றியதும் தோல்வியதும் கோள்களினோர் தரவே

பற்றிலன்நான் என்பவனைப் பரிந்தணைத்தல் வேண்டா.


பிறர்தருதல் இன்றிவரும் பிணிநலமென் றெல்லாம்

இறைகருணை என்பார்க்கோ  ஒருதுன்பம் இலதே.


செல்வரைக்கும் பற்றிலராய்  இங்கிருப்பார் தமக்குச்

சொல்வதற்குத் துயரமிலை   சூழ்ந்திருவாழ் மனமே.


உரை:-

காரணி -   ( இதன் அடிச்சொல்:  கரு.  இதிலிருந்து வருவது: கருது-தல்..  இதனால் இது உண்டானது என்று கருதுதலே காரணம், காரணி எல்லாம்.

கரு > கார் + அணம் > காரணம்;  கார் + அணி >  காரணி.

கருதும் எதையும் அண்மி நிற்பது காரணி.  )

இந்த அடிச்சொல்: கரு, --  கருப்பு என்றும் பொருள் உள்ளது.

ஓர் தரவு - ஒரு தரவு. கவிதையில் ஓர் தரவு என்றும் வரும்.

இதற்கான அனுமதி தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

பரிந்தணைத்தல் -  இரக்கமுற்று அரவணைத்தல்

தரவு -  விளைவு.  தரப்படுவது.

பிறர் தருதல் - "மற்றவர்களால் இது வந்தது"  என்று கருதுதல்.

செல் வரை -   இறக்குமட்டும்,  சாகும் வரை

பற்றிலராய் -  யான் எனது என்ற மனத்தொடர்பு இல்லாதவராய்.

சூழ்ந்து -  ஆலோசித்து;  இரு =  இருப்பாயாக;  வாழ் -  வாழ்க.


இதன் கருத்து:

வருகின்ற போரும் நிற்கின்ற போரும் என்றெலாம் நம் செயலால் வரவில்லை, கோள்களினால் வருகின்றன என்றிருப்பவர்க்கு,  துன்பங்களிருந்து தம்மைக் கூறுபடுத்திக்கொண்ட  தன்மையதால்,  எந்தக் கெடுதலும் இல்லை. இத்தகையவனுக்கு இரத்த அழுத்தம் முதலிய துன்பங்கள் விளைவதில்லை.  இவனுக்குப் பிறர்தரும் இரக்கமும் தேவைப்படுவதில்லை. எல்லாம் இறைவன் செயல்  என்பவன் தன்  பாரத்தை வெளியில் எடுத்துவிடுகிறான்.  அவனுக்குத் துன்பமில்லை. பற்றிலனாய் இருக்க.   சொல்வதற்குத் துன்பக் கதைகள் இல்லை.  ஆய்ந்திருந்து வாழ்க என்பது இதன் பொருள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.


கருத்துகள் இல்லை: