அசடு என்பது இசடு என்று வரும் என்றாலும், இந்த உதாரணம் அல்லது காட்டு, ஓர் அளவிற் பட்டதே. ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால் சொல்லின் முதலெழுத்தில் மட்டும் இங்ஙனம் திரிதலுண்டு என்பதை மட்டுமே இது காட்டுகின்றது. ஆதலின் இது ஓர் எல்லையுட் பட்டதே எனவேண்டும்.
சொல்லின் தலையெழுத்தில் வரும் திரிபினை இலக்கணியர், " மொழிமுதற் றிரிபு" என்பர். இந்தக் குறியீட்டில், மொழி என்ற சொல்லுக்கு, "சொல்" என்பதே பொருள். பாசை ( பாஷை) அல்லது பேச்சு என்பது பொருளன்று.
பேசு > பாசு > பாசை > பாஷை. இதை அறிஞர் பிறரும் கூறியுள்ளனர்.
சொல்லின் நடுவிலும் ( அதாவது சொல்லிடையும் ) இகர - அகர அல்லது அகர- இகரத் திரிபு வரும்.
இப்போது செதிள் என்னும் சொல்லைக் காண்போம். இது சிதள் என்றும் திரியும். இங்கு - தி ( இ ) என்பது த ( அ) என்று திரிந்துள்ளது. இரண்டும் இலக்கியத்துட் காணப்படுவன ஆதலின், கற்றோர் வழக்குடையது ஆகும்.
அசடு என்பது இசடு என்று வரலாம், வரட்டும். அசடு என்பது பிசடு என்றுவரலாமோ எனின், அது வாய்மொழியில் வருகிறது. " அசட்டுப் பிசட்டு" என்று வரலாம். அசட்டுப் பிசட்டு என்று பிதற்றுகிறானெனின், மடத்தனமாகப் பேசுகிறான் என்பதே பொருள்.
செதிள் என்பது செதில் என்றும் வரும். இறுதி மெய்யெழுத்து ளகரம் லகரமாதல்.
பின்னர் செதிலென்பது செலு என்றுமாகுமே! பின்னர் இன்னும் திரிந்து சிலாம்பு என்று இன்னொரு சொல்லாகும். கன்னடம்: சிலு. ( செலு > சிலு).
திரிபுகட்கும் எல்லையுண்டோ? உண்டு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக