செவ்வாய், 6 அக்டோபர், 2015

நெய்யும் பையும்

ஒரு சமயம் கடைக்குப் போய் ஒரு பையில் சீமையிலந்தைப் பழங்களை (ஆப்பிள்) வாங்கி  ஒரு நெகிழிப் பையில்  (பிளாஸ்டிக்) போட்டுக்கொண்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்

பை கிழிந்து, பழங்களில் ஒன்று சாலையில் உருண்டோடிற்று. வந்த மகிழுந்து அப்பழத்தைச் சப்பட்டையாக்கிவிட்டது. அதாவது பழம் நைந்து போயிற்று,

பாலைக் காய்ச்சித் தயிராக்கி , அதைக் கடைகடை என்று கடைந்து மோராக்கி வெண்ணெய் எடுக்கின்றோம். இதையெல்லாம் செய்யும்போது பால் ஒருவகையில் நைந்துதான் போகிறது. இதை உணர்ந்த நம் முன்னோர், நைந்து உருவாகிய நெய்யை நையிலிருந்தே தோற்றுவித்தனர்.

நை > நெய்.  ( ஐ >  எ )

அல்லது:

ந ய்  > நெ ய்.  (அ -  எ )

பழங்களைப்  பைக்குள் அல்லவோ பெய்து கொண்டு சென்றேன்?   பெய்தல் -  உள்ளே இடுதல்.  இப்படிப் பெய்ய உதவுவதே பை.

பாருங்கள் :

பெய்   > பை.   ( எ > ஐ )

அல்லது 

பெய் > பய் . ( எ  >    அ )

இச்சொற்களை கவனமாக ஒப்பிட்டு நுண்வேறுபாடுகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

செய்ய உதவுவது கை.

ஆனால் 

மேற்சொன்னபடி பார்த்தால்  செய்  > சை என்று வந்திருக்க வேண்டும் அன்றோ?  பழங்காலத்தில்  சையில் தொடங்குவதில்லை.  ஆகையால், அதற்கு ஒத்து நிகழும் "கை"யில்  அது மாறியமைந்தது.  பல மொழிகளில் 
ச - க-வாக மாறும்  என்பதுணர்க.  ஆகவே சை> கை.

சேரலம்  > கேரளம் என்பதுபோல

நெய்யும் பையும் .



கருத்துகள் இல்லை: