வியாழன், 22 அக்டோபர், 2015

இக்கட்டும் இடுக்கணும்

இக்கட்டு  என்ற சொல்லினமைப்பைக் கவனிப்போம்.

இந்தச் சொல்லின் பொருள் :   இடர், இடையூறு  இடுக்கண்,  என்பன .

இ + கட்டு = இக்கட்டு எனவரும் சுட்டுத் தொடக்கத்துத் தொடர் இதுவன்று.

இக்கட்டு  என்று இடையூறு குறிக்கும் சொல்லில் வரும்  "கட்டு "  வேறு.   கட்டுதல் எனும் சொல்லின் ஏவல் வினையாய் வரும் " கட்டு "   என்பது 
 வேறாகும்.  "மூட்டையைக்  கட்டு",   "கடையைக் கட்டு"  "சேலையைக்  கட்டு" என்று ஏவலாய் வரும்.

நாம் எடுத்துக்கொண்ட இக்கட்டு,  இடுக்கண் + து  என்று  பிரியும்.

முதலில் "கண்+து " என்பதை எடுத்துக் கொள்வோம்.

"சுவை ஒளி ஊறோசை  நாற்றம் என்றைந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு" 

என்ற குறள் பாருங்கள்.

இதில்  (கண் + து)  + ஏ  =  கட்டே  என்று வருதல் நீங்கள்  அறிந்தது  
இங்கு  கட்டு + ஏ  =  கட்டே..    ஏகாரம் :  தேற்றேகாரம் . A component showing emphasis.

ஆகவே  இடுக்கண்+ து என்பது  இடுக்கட்டு  ஆகிறது.

நமது பயன்பாட்டுக்கு  இடுக்கண் என்பதிலிருந்து இன்னொரு சொல் கிடைக்கிறது.

ஆனால் இப்போது நம்மிடம் இருக்கும் சொல் இக்கட்டு.   இடுக்கட்டு அன்று.

இது:

இடுக்கட்டு > இக்கட்டு   என்று இடைக்குறைந்து நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது,

இக்கட்டு என்பதை வாக்கியமாக விரித்தால் :

இக்கட்டு <  இடுக்கட்டு <  இடுக்கண் து  <  இடுக்கண் அது  என்று விரித்து மகிழ்க .

இதுபோல் திரிந்த சொற்களில் ஒன்றிரண்டு கண்டு மகிழ்வோம்.

இடுக்கு+ இடைஞ்சல் =  இக்கிடைஞ்சல்.  -   இந்தத்  திரிபு நோக்கி இவ்வண்ண்ணம் திரிதல் கண்டுகொள்க. 


முக்கம் என்ற தெருமுனை குறிக்கும் சொல்  அகரவரிசைகளில் இடம்பெற வில்லை  என்று கருதவேண்டியுள்ளது.  இன்றுள்ள எல்லாவற்றிலும் தேடிப்பார்க்கவில்லை. நாட்டுப்புற மொழியில் உள்ளது.

முடுக்கு >முடுக்கம் >  முக்கம் 

என்ற திரிபாகவிருக்கலாம் :   ஆய்தற்குரியது. 








கருத்துகள் இல்லை: