வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

அனுமான், அனுமானம்

 அனு என்ற முன்னொட்டு,  அணுகுதல் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு திரிபு  ஆகும். இதில் ணுகரம்  மாறி,  னுகரம் ஆயிற்று.  இது எதையும் மறைப்பதற்காகச் செய்யப்பட்ட திருட்டுத்தனம் என்று நினைக்கவேண்டாம்.  அப்படி நினைப்பதால் சொல்லியல் ஏதும் சிகரத்தில் ஏறிவிடுவதில்லை.  அணுகு என்பது மற்ற வடிவங்களுடன் இணைந்து சொல்லாகும்போது,  முன்னொட்டு வடிவத்தில் நின்று, இருசுழியுடன் திரிவதால், சற்று இலகு  நிலைபெறுகிறது.  அணு என்ற சொல்லின் பொருளையும் அணுகு என்ற சொல்லின் பொருளையும் நினைவுக்குக் கொணர்ந்து மூளைக்குச் சுமை ஏற்றாமல்,  புதிய சொல்லாக்கத்தின் புதுப்பொருளை முழுமையாகப் பெறுவதற்கு நல்ல வழியை வகுக்கின்றது என்பதை உணரவேண்டும்.  

அனுமான் என்ற சொல்லில்,    அணுகு> அனு- (முன்னொட்டு).  இது கூறினோம்.  மான் என்பதில் மகன் என்ற சொல்லானது, மான் என்று திரிந்தது.  இதற்குரிய சொற்பொருள்:   அணுக்கமான மகன் என்பது.  பிறப்பு என்ற பொருளுடைய மக என்ற அடிச்சொல்லிலிருந்து உண்டாவதால்,   அணுக்கப் பிறப்பு என்று பொருள்.  பழங்காலத்திலே, இவர் மனிதனுக்கு மிக நெருங்கிய உருவமைப்புடன் சிறக்கப் பிறந்தவர் என்ற நற்பொருள் கிடைக்கிறது.  அனுமான் என்பது உயர்வுப் பன்மை பெற்று,  அனுமார் என்றபடி வந்திடினும்,  இச்சொல்லை இழிவாக நோக்குவதற்கு எந்தச் சரியான காரணமுமில்லை. இராமபிரானுக்கு மிக நெருக்கமான அவர்,  மனிதருடன் நெருக்கமான உறவுடையார் என்க. இராமருக்கு நெருக்கமுடையார் ஆதலின், இறைப்பற்றினால் எந்த மனிதருக்கும் முன்னே உள்ளவர்.

மான் என்னாமல் மன் எனினும், மனிதன் என்பதன் அடிச்சொல் அதுவாகும். மனிதப் பிறவிக்கு நெருங்கியவர்.

அனுமானம் என்ற சொல்லிலும், அனு என்பது அணுக்கமே பொருளாகக் கொண்டது.   மானம்  என்பது அளவு என்ற பொருள் உடையது எனினும் ஒருவன் ஒன்றை அணுகி உள்ள தகவல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பொருண்மை அல்லது கருத்தளவு ஆகும்.  அனு என்பது அணுகுவதே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


புதன், 25 பிப்ரவரி, 2026

விகிதம் வீதம்

 இந்தச் சொற்கள் ஆய்வுக்குரியவை.

பரிவற்சனம் என்பதற்கு பொருள்கூறுகையில்,  அகரவரிசை ஆசிரியர் கதிர்வேற்பிள்ளை அவர்கள்,  1. கொலை, 2 விகுதல் என்ற இருசொற்களைப் பதிவிட்டுள்ளார். விகுதல் என்பது அருகிவழங்கிய ஒரு சொல்வடிவம் என்று தெரிகிறது.  விகுதல் என்ற சொல் சில அகரவரிசைகளில் பதிவுபெறவில்லை என்று தெரிகிறது.

விகுதல் என்ற வினைவடிவம்:

மிகுதல் > விகுதல் என்ற மகர - வகரத் திரிபாகவும்,

விழுதல் > விகுதல் என்ற வழித் திரிபாகவும்

வரும்.

எடுத்துக்காட்டு:

மிஞ்சு >  விஞ்சு;

தொழுதி -  தொகுதி.  ( திரட்சிக் கருத்து).

மிகு> விகு> விகுதி  ( மிகுதி - விகுதி).

தொகு> தொழு - திரிபு.

புழுதி என்பது பூதி என்றும் திரியும்.

பகுதி என்பது பாதி என்றும்  மிகுதி என்பது மீதி என்றும் திரிவதால்,  விகிதம் என்பது வீதம் என்று திரிவது படியமைந்ததே ஆகும்.  அகலமாகப் பரவி நிற்கும் மரம் ஆலமரம் என்று பெயரிடப்பட்டதையும் நோக்குதல் வேண்டும்.

விழுக்காடு  (விழு)

விகிதம்  ( விகு< விழு)

இவற்றின் தொடர்பும் அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.



ஆதிபத்தியம்

 இந்த இருசொற் புனைவை இப்போது அறிவோம்.

ஆதி என்ற சொல் திருக்குறளில் முதல் பாட்டிலே வந்துவிடுகிறது.  ஆதி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதனை வெளியாரியர் சொல் என்று இருபதாம் நூற்றாண்டின்  தமிழ்ப்புலவர் எவ்வாறு நம்பினர் என்று எண்ணிப்பார்க்கையில் விந்தையாக உள்ளது.  அந்நாட்களிலே,  புலவர்கள் சிலர் சற்றுத் தயக்கத்துடனே அது ஆதல் என்ற வினையிலிருந்து தி என்னும் விகுதி புணர்த்து எழுந்த சொல் என்று சுட்டிக்காட்டினர். இதற்கு முன்னரே இங்கு,  சொல்லாக்கத்தில் அல்லது புனைவின்போது, சொல்லின் பகவுகள் ( உள்ளுறுப்புகள்) தமிழ் அடிச்சொற்களாய் இருந்தால், அஃது தமிழ்ச்சொல்தான் என்று எழுதியிருந்தேம்.1

( அஸ்தி ,  ஆஸ்தி என்ற என்ற சொற்கள்  ஆதி என்பதனோடு தொடர்பு பட்டவைபோல் ஒலிப்பின் காரணமாகத் தோன்றினாலும்,  கருவில் அஸ்தி (எலும்பு)  முந்தித் தோன்றியதாய்  எண்ண ஆதாரமில்லை.  விந்து என்னும் நீர்ப்பொருளிலிருந்தே  தோற்றம் ஏற்படுகிறது.  )

ஆதி என்னும் சொல்  ஆதல் என்னும் வினையடியாய்த் தோன்றியது.  இச்சொல்லுக்கும் இந்தோ ஐரோப்பியத்துக்கும் தொடர்பு கிட்டவில்லை.

பத்தியம் என்ற சொல்லில், பற்றி இயலுதல் என்பதே பொருள். கூடுமானவரை, சொல்லிலுள்ள அடிகளை வைத்தே சொல்லை விளக்கவேண்டும் என்பது எமது கொள்கையாகும்.  ஆகவே ஆதிபத்தியம் என்பது உண்மையில் ஆதி பற்று இயமே ஆகும்.  இச்சொல் தமிழுடன் மிகுந்த தொடர்பு உடையதே  ஆகுமாறு உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


---------------------------------------------------------------------------------------------------------

இருந்தேம் - இது இருந்தேன் என்பதன் தன்மைப் பன்மையாக இங்கு கையாளப்படுகிறது. 

செனக்ஸ்  என்ற இலத்தீன் சொல்,  பழைமை,  பயின்ற முதுமையுடையது என்பது சொல்லப்படுகிறது.   செந்தமிழ் என்ற சொல், இந்தச் சொல், தமிழ் என்பதனுடன் தொடர்பு பட்டபின் பழமை குறிக்கக்கூடும்.  சென்-, சென்றது என்பனவும் பழமை குறிக்கலாம்.  நீங்கள் எழுதி தெரிவிக்கவும்.