செவ்வாய், 30 நவம்பர், 2021

கருவி, கருத்து, கரு>கார், காரணம், காரியம்.

 இந்தச் சொற்களைப் பற்றிச் சிந்தித்துச் சிலவற்றைப் பெற்றுக்கொள்வோம்.

சிந்தனையிலிருந்து ஒன்றைப் பெற்றுக்கொண்டால், அதைச் சிந்தனைப் பேறு அல்லது சிந்தனைச் செல்வம் என்று குறிப்பிடலாம்.  ஒருவர் பெற்று மகிழத் தக்க பான்மைப் பொருளைத்தான் ( சிந்தனைச்) செல்வம் அல்லது (சிந்தனைப்) பேறு என்று சொல்கின்றோம்.  அரிசியை ஆக்கினால்தான் சோறு கிட்டுகிறது; அதைப் போலவே, சிந்தனை செய்தால்தான் அதிலிருந்து பெறத்தக்க நல்லது எதாவது கிடைக்கும்.

உலகின் பொருட்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. வேறு எந்த நிறம் உடையதானாலும், அதை அடுப்பில் வைத்து எரித்தவுடன், அது சற்றுக் "கருவல்" நிறத்தை அடைந்துவிடுகிறது. கருமயிர், கருமணி, கருமுரல் முதலிய சொற்களிலும், கருப்பன் என்ற சொல்லிலும், கருமை நிறமே குறிக்கப்படுகிறது. ஆனால் கருவலி என்பது மிகுந்த வலிமை என்று பொருள்படுகிறது: ஆதலின் இங்கு கரு என்ற சொல் மிகுதி குறிக்கிறது. கருமான் என்பது கொல்லனைக் குறிப்பதுடன், கலைமான், பன்றி என்ற பொருள்களையும் தருகிறது. கருமாயம் என்றால் அதிகவிலை என்று பொருள். கருப்பூரம்   என்பது நீருக்கும் நெல்லுக்கும் பெயராதலுடன்  கற்பூரத்தையும் குறிக்கிறது.  எனவே,  "கரு" என்ற சொல் முன்னிணைந்துவிட்டால், அது கருப்பு நிறத்தைத்தான் குறிக்கவேண்டுமென்பதில்லை.

முன்னைய ஆய்வுகளின்படி, கள் என்பது கறு என்பதன் மூலம்.   கல் என்பது கரு என்பதன் மூலம். இதைப் பின்புலமாக வைத்துக்கொண்டே நாம் சொற்கள் பலவற்றுக்குள் புகுந்து வெளிப்பட்டிருக்கிறோம்.

கரு என்பது கார் என்று திரியும்.  கார்முகில் -  கருமுகில் அல்லது கருமேகம். இவை  நிறம் குறிப்பன.  ஆனால் கரு> கார்> காரியம் என்பதில் செயல் குறிக்கப்படுகிறது.  கரு> கார்> காரணம், காரணி என்பவற்றில்,  செயலே உள்ளுறைவு ஆகும். நன்னூலில் "கருவி காரியங் கருத்தன் "(நன். 290). என்ற  நூற்பாவில் அன் விகுதி பெற்ற வடிவம் வருகின்றது.  இது கருத்தா என்று பொருடருவதே. உந்துவன் (நல்லுந்துவன் ) என்ற வடிவில் அன் விகுதி வருதல் போலும் இக் கருத்தன்.  நிலா என்பது ஆ விகுதி பெற்றுவருதல் போலும் கருத்தா.  அர் விகுதிக் கருத்தர் என்ற வடிவும் உளது.  இக் கருத்தன் எனற்பாலதற்குச்  "செயலோன்"  எனற்பாலதே பொருளாகும்.

கருத்தல் என்ற வினை எங்கும் கிட்டவில்லை என்று ஆய்வாளர்கள் சொல்வர்.  இவர்கள் தேடிப்பார்த்தவர்கள்.  கரு + அணம் >  காரணம்,  இது எவ்வாறு எனில், ஒரு+ உயிர் > ஓருயிர் என்பதுபோலுமே திரிபன்றி வேறில்லை. ருகரத்தின்முன் உயிர்வர, முதனிலை நீண்டது காண்க.

கருவி என்பது எந்த நிறத்திலும் இருக்கலாம், கருத்துக்கு நிறம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், காரியம் என்பவற்றில் கருமை ஏதுமில்லை.

கரி என்ற சொல்லும் உள்ளது.  இது எரிகையில் கருநிறம் அடைந்த மரக்கட்டையைக் குறிக்கும்.    கரு + இ = கரி என்பது சரியாக வருகிறது.  இங்கு கரு என்பது கருநிறம் குறிக்கிறது.

கரி என்பது கருமை நிறமுள்ள, முழுமையாய் எரிந்துவிடாத மரப்பொருளைக் குறிக்கிறது.  கருப்பாய் உள்ளமையால் பன்றிக்கும் யானைக்கும் கருமான் என்ற பெயர்.  கருமான் என்ற கொல்லன்பெயரில் மான் என்பது மகன் என்பதன் திரிபு.  யானை பன்றி என்பன குறிக்குங்கால் மா ( விலங்கு) என்ற சொல்லின் கடைமிகையே "மான்".  இதற்கு எடுத்துக்காட்டு:  கோ(த்தல்) >  கோர்(த்தல்).  கோர் என்பது மறுக்கப்பட்ட வடிவம்.

ஆனால் கரு என்பது சரு என்று திரியும்.  எடுத்துக்காட்டு: 

சருக்கம் என்பது படைப்பு என்று பொருள்படுகிறது.  அதாவது செய்யப்பட்டது.

சரு>  சார் > கார் என்று திரிதல் கூடும்.

ஆர்தல் என்ற வினை சார்தல் என்றும் திரியும்.  ஆர்தல் செய்தல், நிறைதல் என்ற பொருளில் வரும்.  அரு என்பதும் ஆர் என்று திரியத்தக்கது.

அரு> கரு>< சரு.

ஆர் > கார் >< சார்.

உயிருடன் இருந்த ஒருவன் மறைவு எய்திவிடினும் அவன் வாழ்ந்ததற்கான சான்றாக அவன் விட்டுச்சென்றவை இருத்தலேபோல்,  சரு, அரு, சார், ஆர் என்பன வாழ்கின்றன.  ஆதலின் முன் இருந்த ஆய்வாளர்கள் கரு என்பது மறைந்த வினைச்சொல் என்று மொழிந்தமையின் ஏற்புடைமை அறிந்து மகிழற் பாலதே.

எழுதருகை என்ற  மீட்டுருவாக்கத்திலிருந்து எச்சரிக்கை  என்ற தமிழ்ச்சொல் வந்ததாக முன்னர் மொழிநூலார் கூறியுள்ளனர்.  எழுதருகை போல,  கரு, என்ற மீட்புரு இனிய ஆய்வே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

 


ஞாயிறு, 28 நவம்பர், 2021

நோய்நுண்மி உருமாற்றம்

 பழைய நோய்நுண்மி பவனி முற்றவில்லை

நுழைய முந்துகிற  புதிய உருமாற்றம்!

இழையும் வாசலிலே இறுதி செயல்வேண்டும்

தழைய விடலாமோ தரணி அறிவியலார்?


அதுவே பரவிடிலோ  கதறும் உலகிற்கே

சிதைவே அன்றியினிச் சேரும் நலமுண்டோ?

முதலே நாமடைந்த முடியாத் துன்பமெலாம்

விதமாய் வரும்போது விடுதல் விளக்கேது?


நோய்நுண்மி -  வைரஸ்

உருமாற்றம் -  mutation

இழையும் - நடமாடும்

வாசல் --  அது தோன்றிய இடம்

தழைய -  அது விருத்தி அடைய ( இதற்குரிய வினைச்சொல், தழைதல். தழைத்தல் அன்று).


முதலே = முன்னர்

( இங்கு  ஏகாரம் இசைநிறை.  அதாவது ஏகாரத்துக்குப்  பொருளில்லை. முதல் - முன்பு என்று மட்டும்  பொருள் கொள்க. )

விதமாய்  - உருமாறி, வேறுவிதமாய்.

விதம் என்பது ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபடுவதால் உண்டாகும். விதத்தல் என்பது வினைச்சொல். விதந்து  என்பது வினைஎச்சம். ஆகவே விதமாய் எனின், தனிநிலையாக என்று பொருள்கொள்ளவேண்டும்.

பவனி என்பது பரவு அணி > பரவணி என்பதன் இடைக்குறை.

இங்கு நடமாட்டம் என்பது பொருள்.  பரவணி > ப(ர)வணி> பவனி.

திரிபுச்சொல்.

சனி, 27 நவம்பர், 2021

பஞ்சமி என்றால் சாதிக்குறிப்பா?

 






பஞ்சமி என்ற சொல்லை இன்று தெரிந்துகொள்வோம்.

பஞ்சம் என்பது சங்கதத்தில் ஐந்து என்று பொருள்படும்.   ஐந்து என்ற தமிழ்ச்சொல்,  அஞ்சு என்று "ஊரிய" வழக்கில் திரியும்.  இது பின் ஒரு பகர ஒற்று முன்வந்து நிற்க,  அஞ்சு > பஞ்சு > பஞ்சம் என்று ஆனது.  பகர ஒற்று முன் நிற்பதாவது:  ப் + அ > ப;  ஆகவே [ப்]+ [அ]ஞ்சு - பஞ்சு ஆகும்.

பகர ஒற்று ஏன்  முன்வந்து நிற்கவேண்டும்?

"நிலந்தீ  நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"

என்று தொல்காப்பியனார் விளக்குகிறார்.  தமிழரிடமிருந்து கிரேக்கரும் உரோமானியரும் இதைத் தெரிந்துகொண்டு,  அவ்வாறே  ஐம்பூதங்களைக் கொண்டனர்.

ஆதியில் இறைவன் மட்டுமே இருந்தான்.  அவன் உலகைத் தோற்றுவிக்கப் புதியனவாக ஐந்து படைத்தான். அந்த ஐந்தும் மேலே கூறப்பட்டன.  அவன்றன் ஆணைப்படி தோன்றிய புதுமை ஐந்து.   புதியன பிறந்தனவாதலினாலும் முன்னில்லாதவை ஆதலினாலும்,  பிறப்பஞ்சு  என்றும்,  புது + அம் =  பூதம் என்றும் அவை பெயர்பெற்றன. பூதம் என்பதில் பு என்ற எழுத்து நீண்டு சொல் அமைந்தது. இஃது முதனிலை ( முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்று அமைந்த சொல்.

பிறப்பு அஞ்சும் கலந்ததே உலகம் ஆதலின் பிறப்பஞ்சம் > பிரபஞ்சம் ஆயிற்று. எல்லா மொழிகட்கும் வேண்டியாங்குச் சொற்களைத் தமிழ் வழங்கியுள்ளது.  அதிலும் பிரபஞ்சம் என்பது எளிதில் அறியக்கூடியதே.  பிறப்பஞ்சம் என்பதில் ஒரு பகர ஒற்றுக் குன்றி இடைக்குறையானது.  பின்பு, அறிந்தோ, அறியாமலோ, றகரம் ரகரமாகத் திரிபு அடைந்தது.  சொல்வரலாறு அறியாமல் திருத்துகிறவர்களும் உலகில் பலர். எழுத்தாணிக்கு, ரகரம் எளிது; றகரம் சற்று கடினம் எனலாம். கல்லில் செதுக்குவதற்கும் ரகரம் நன்று.  ஆகவே யாரையும் குறை சொல்வதற்கில்லை.  

நாளடைவில் பிறப்பஞ்சம் என்பது முதற்குறைந்து, ( இங்கு முதல் என்றது முதலசையை)  பஞ்சம் ஆயிற்று.  பஞ்சம் என்பதும் ஐந்து என்ற பொருளில் வழங்கியது.

செல்வச் சுருக்கத்தையும் செழிப்பின் தளர்வையும் குறிக்கும் பஞ்சம் ( பணமின்மை, உணவின்மை முதலியவை ) வேறு ).

இறைவன் அரு.  உருவில்லாத  செம்மையை உடையவன்.  அவனுக்குப் "பான்மை"  ( ஆண்பால் பெண்பால் ) என்பதும் இல்லை.  படைக்கப்பட்ட ஐந்தையும் கண்டுதான் அவ் அருவாகிய இறை உள்ளதை நாம் உணர்ந்துகொள்கிறோம்.  அது ஆதிப்பர சக்தி  ஆகும். இவ்வுணர்வுத் தொடரே திரிந்து "ஆதிபராசக்தி" என்றும் உணரப்பட்டது.  உடல் ஏதும் இல்லாதது ஆதிபராசக்தி யானாலும்,  ஐந்தினாலும் நாம் உணர்ந்ததனால்,  அது "பஞ்சமி" என்று உணரப்பட்டது.

ஜகத் ஜனனி, பஞ்சமி, பரமேஸ்வரி.

பரம அஞ்சு அம்  இ. > பரஞ்சமி > பஞ்சமி என்றுமாகும்.  சம் என்பது ஒன்றாதலும் குறிக்கும்.   தம்> சம்.  தம்மில் தம் வெளிப்பாடு.   இவ்வாறும் மீட்டுருவாக்கம் செய்தல் தகும். 

பரம்  -  கடவுள். தெய்வம்.

சம் -  இணைதல்.  இது தம் என்பதன் திரிபு.

இ -  இயற்றுதல் குறிக்கும் விகுதி அல்லது பெண்பால்  விகுதி.

இன்னோர் எ-டு:  இலக்குமி.  பத்தினி :  பத்தி + இன் + இ.  (பற்று> பத்து).

பஞ்சமி என்பது தெய்வப் பெயராய் இயங்குகையில் ஐந்தாம் சாதி அன்று.  மனிதன் தான் தொழில் செய்து அதனால் சாதிக்குள் இருப்பவன்.  கடவுளுக்கும் ஐந்தொழில் உண்டென்று கூறப்படினும் இந்தத் தொழிலென்ற சொல்லுக்குத் சாப்பாட்டுக்கு வேலை செய்வதாகிய தொழில் என்ற பொருள் இல்லை.    "தன்மை" அல்லது இயங்குநலம் என்பதே பொருள். அறிக.  சாப்பாடு சம்பளம் எல்லாம் கடவுளுக்கு இல்லை.  வைரஸ் என்னும் நோய்நுண்மி இப்போது அதை மெய்ப்பித்துவருகிறது. எப்படி என்பதை இங்குக் கூறவில்லை.

பிறப்பஞ்சமி >பஞ்சமி.  ஐந்து பூதங்களும் அவளுக்குள் அடக்கம் என்று உணர்ந்து நாம் அடங்கவேண்டும். முதற்குறை அதாவது முதலசைக் குறை என்று விரித்துரைக்கலாம்.

தெய்வத்துக்கு உணவு வைப்பதென்பது, நம் தற்குறித் தன்மையைத் தணித்துக்கொள்ளும் ஒரு பக்தியோகம் ஆகும்.

கவனமாய்ப் இடுகைகளைப் படித்து வந்தால் சொல்லாய்வுத் திறன் உங்களிடம் குடிகொண்டுவிடும்.

பஞ்சமி என்ற சொற்குப் பிற பொருளும் உள.  எதுபோல என்றால், மாரி என்பதற்கு மழை என்ற பொருளும் இருப்பது போல.

பிறருக்கும் விளக்குக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்