ஞாயிறு, 2 ஜூன், 2019

வயிறு என்னும் முதன்மைச் சொல்.

இன்று வயிறு என்ற தமிழ்ச் சொல் எவ்வாறு அமைந்தது என்ற கதையை அறிந்துகொள்வோம்.

நாம் பல சொல்லமைப்புகளையும் சில ஆண்டுகளாகவே ஒவ்வொன்றாக அறிந்துகொண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் ஒருசேர நோக்கி, இதிலிருந்து ஒரு தெரிவியலை ( தியரி - ஆங்கிலம் ) உருவாக்குவது எம் நோக்கமன்று. அத்தெரிவியல் அல்லது எத் தெரிவியலும் தானே முன்வந்துறுமாயின் சில வேளைகளில் யாம் அதனைக் குறிப்பிடுவதுண்டு. யாம் எழுதுவது சொல்லமைப்பை வெளிப்படுத்தவே ஆகும்.

வாயிலிருந்து தொடங்குகிற உணவு உட்கொள்ளும் வழியானது உடம்பின் உள்ளில் சென்று முடிகிறது அல்லது இறுகின்றது. இறு என்ற அடியினின்றே இறுதி என்ற சொல்லும் அமைகின்றது. ஆகவே இறுகின்றது என்ற வினைமுற்றை எளிதில் பொருளுணர்ந்து கொள்ளலாம்.

வாயிலிருந்து தொடங்கி உணவு செல்வழியானது குதத்தில் முடிவதாகச் சிலர் சொல்வதுண்டு எனினும் வயிறு என்ற சொல்லமைப்பில் இக்கருத்து கொள்ளப்படவில்லை. குதம் கழிவு வழியாதலின் போலும். குந்து > குது > குது + அம் = குதம். எனின் குந்தும் உடற்பகுதி.

வாய் தொடங்கி அது முடியும் இறுதியே வயிறு ஆகும். சொல் அமைந்தது இவ்வாறு:
வாய் + இறு = வாயிறு ( இங்கு முதல் குறுகி) > வயிறு ஆயிற்று. எனவே இது முதனிலை குறுகித் திரிந்த ஒரு சொல்லாக்க மாகும்.


இவ்வாறு திரிந்து அமைந்த சொற்கள் பல. உதாரணத்துக்கு:

சா + வு + அம் = சவம்
தோண்டு + = தொண்டை.

எனவே உணவு ஏற்கும் பகுதியின் இறுதியே வயிறு ஆகும்.

வியாழன், 30 மே, 2019

பாரியை : சொல்லின் திறப்பொருள்.

பாரியை எனற்பால சொல்லை ஈண்டு கண்டு மகிழ்வோம்.

பெரும்பாலும் இல்லத்தில் தங்கி வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்பவள் இல்லாள். அவள் தங்கி இருப்பது பெரிதும் அவள்தன் மனையில். அங்கு செய்தற்குரிய அனைத்தும் அவள் செய்கிறாள். ஆகவே
அவள் " மனைவி". கணவனின் இவ்வுலகச் செலவுக்கு ( பயணத்திற்கு) அவளே துணை ஆவாள். ஆதலின் அவள் "வாழ்க்கைத்துணை". இதைச் சுருக்கித் "துணைவி" என்றும் சொல்வர். இவ்வுலகத்தில் கணவனுக்கு வேண்டிய துணைமை அனைத்தும் தருபவள் ஆதலின் அவள் தாரம் ஆகிறாள். தரு+ அம் = தாரம். வாழை தரும் பழக்குலை "தார்". பிள்ளைப்பேறு தருபவள் ஆதலின் "தாரம்" எனப் பட்டாள் என்றும் கூறுவதுண்டு.

இவற்றுள் பலவும் வீடு என்னும் வட்டத்தின் குறுக்கத்தில் எழுந்த சொல்லமைப்புகளே. ஆனால் உலகில் அனைத்திலும் கணவனுடன் அவள் இணைந்தே பயணிக்கிறாள். பாரில் இயைந்திருப்பவள் ஆதலின் அவள் "பாரியை" ஆகிறாள். இது பாரியா, பாரியாள் என்றெல்லாம் ஆனமை உலகவழக்குத் திரிபுகள். இவற்றுள் பொருளொன்றும் சிறப்பு எய்திற்றிலது.

ஞாயிறு, 26 மே, 2019

இதர என்ற சொல்


இதர என்ற சொல்லை இன்று கண்டு மகிழ்வோம்.

பதறுமனத்துடன் யானிருக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ

என்ற வாக்கியத்தில் இதர என்ற சொல் வந்திருப்பதைக் காணலாம்.

இதர என்பது இங்கு மற்ற என்னும் பொருளில் வந்திருப்பதைக் காணலாம்.

இதர என்ற சொல்லின் அமைப்பு:

இது+ அற = இதர.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

இங்கு தகரம் இரட்டிக்கவில்லை. அதாவது: இதர என்பது இத்தர என்று வரவில்லை. இது + உடன் என்று இத்துடன் என்று இரட்டித்ததுபோல் இரட்டிக்கவில்லை.

இச்சொல்லில் வந்த றகரம் ரகரமாக மாறியுள்ளது. பல சொற்களில் இவ்வாறு மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டு:

தம் + திறம் = தந்திரம். இதில் திறம் என்பது திரமானது.

இங்கு திறம் என்பது தனிச்சொல்லாக இல்லாமல் ஒரு சொல்லின் விகுதியாக வருங்கால் அல்லது ஒரு கூட்டுச்சொல்லின் இறுதியாகவருங்கால் இவ்வாறு நிகழ்தல் காணலாம். இதர என்பது ஒரு கூட்டுச்சொல்லின் அல்லது சொற்றொடரின் திரிபு.

மன் + திறம் = மந்திரம். (மன்னுதல்: நிலைபெறுதல் நன்மைகளை

நிலைபெறுவித்தல் நோக்கமாகச் சொல்லப்படுவது மன்னும் திறத்ததான மந்திரம். )


இதர என்றால் இது அற, எனில் மற்ற என்பதாம். அறிந்து மகிழ்க.

தட்டச்சுப் பிழைத் திருத்தம் பின்.