செவ்வாய், 5 மார்ச், 2019

பூக்களில் ஈக்கள்போல்...

இந்த நாலுவரிக் கவியை ஒரு புகைப்படவிளக்கமாக எழுதினேம்.  அந்தப்  புகைப்படம் எங்கிருக்கிறதென்று தெரியவில்லை.  கண்டுபிடிக்க முடிய வில்லை.  அதைக் கண்டெடுத்தால் பதிவேற்றம் செய்வேம்.  இப்போது கவிதையை மட்டும் வெளியிடுவேம்.

பூசைஒவ் வொன்றிலும் மாசறு மக்கள்
பூக்களில் ஈக்கள்போல் ஏக்கறு தக்கோர்
ஆசைகள் யாவையும் ஓசுறு தெய்வம்
அகம்கனிந்  துண்மையில் நிறைவுறச் செய்யும்.


மாசறு - குற்றமற்ற
தக்கோர் - நல்லோர்
ஏக்கறு  -  தாழ்மையுடன்
ஓசுறு -  கீர்த்தி மிகுந்த.
அகம் - மனம்

ஈக்கள்  என்றது: தேனீக்களை.   தேன் என்ற சொல் தொக்கது.
ஆசை :  ஒன்றன் பால்  மனம் அசைவது.  அசை -  ஆசை ,   முதனிலை
நீண்டு  திரிந்த தொழிற் பெயர் .  சுடு >  சூடு என்பது போல.

உரை:

ஒவ்வொரு பூசையின் போதும்  மிகுந்த பணிவுடன் மாசில்லாத மக்கள் பூக்களில் ஈக்களைப்போல தக்க வாறு கூடி விடுகின்றனர்.   அவர்கள் தெரிவிக்கின்ற  எல்லா ஆசைகளையும்  கீர்த்தி வாய்ந்த தெய்வமானது  மனம் கனிந்து  நிறைவு  ஏற்படச் செய்கின்றது.

திங்கள், 4 மார்ச், 2019

தலைமாற்றும் மாற்றாமையும் : சொற்புனைவு.

வாக்கியங்களில் வரும் ஆற்றொழுக்கினைப் பின்பற்றாமல் மறுதலையாகச் சொற்களைப் போட்டுச் சொல்லமைப்பை மேற்கொள்ளுவது ஒன்றும்  புதிய உத்தி அன்று.

அல்+ திணை =  அஃறிணை என்பதிலே திணை அல்லாதது என்ற வாக்கியத்தில் வரும் சொற்களைத் தலைமாற்றிப் போட்டுப் புனைந்திருத்தலைக் காணலாம். பிற்காலத்தில் இந்த உத்தியை மேலும் மேலும் கையாண்டனர் என்பதே உண்மையாகும்.  எடுத்துக்காட்டு:

கருத்து வாக்கியம் :  தாய்க்குப் பின் தந்தை
இதைத் தலைமாற்றி:
பின் + தாய்  >   பிதா

பின் என்பதில் உள்ள  0னகர ஒற்று விலக்கப்பட்டது:  எடுத்துக்கொண்டது: பி என்ற முதலெழுத்து மட்டுமே.

பின் > பி.   ( கடைக்குறை).
தாய் > தா  (  கடைக்குறை ).

அஃறிணை என்ற மறுதலை அமைப்பைப் போல இன்னொரு சொல்லமைப்பு:

கருத்து வாக்கியம்:   தாரம் தப்புதல்.  ( வாழ்க்கைத் துணையை இழத்தல் )
இதைத் தலைமாற்றி:
தப்புதல் தாரம்.
தப்பு + தாரம் =  தப்புத்தாரம்
மெய்யெழுத்துக் களைதல்:
தபுதாரம்.
இறுதி மகர ஒற்று களையப்படவில்லை.
இதைத் தொல்காப்பியனார் பயன்படுத்தியுள்ளார்.   அவரே புனைந்ததா என்று தெரியவில்லை.

கருத்து வாக்கியம்:  அது அம்மா (  பணிவினால் அஃறிணைப் பயன்பாடு)
மா +  (அ)து  >  மாது.  ( அம்மையார்).


இன்னும் சில: (தலைமாற்று இல்லாதவை).

அகத்திலே இருக்கவேண்டியது:   இரு+ அக(ம்) + சி + அம்=  இரகசியம்.
அவிழ்க்கும் இரு கைகள் உடைய மேலணி:    இரு + அவிழ் + கை > இரவிக்கை.
ழகர ஒற்று நீக்கம். இரு அவிழும் கைகள் உள்ள உடை.

கருத்து:  விழுமிய புலம்.  இதைப் பார்ப்போம்.
சுருக்கினால்  விழுபுலம்.
இதில் தலைதிருப்பு உத்தி எதுவும் கையாளாமல்:

விபுலம்.

புலம் என்பது நிலம் காட்சி என்ற பல்பொருளொரு சொல்.

விபுலம் என்பது அதன்படியே பல பொருள் தரும்.

விழுமிய புலம் -  சிறந்த காட்சி என்றும் பொருள்படும்.


கெட்டுப் புன்மையாகியாகிவிட்ட நிலைமைக்கு ஒரு சொல்.
சொல்:  நபுஞ்சகம்.

நலிபு உச்சு  அகம்.

நலிபு  :>   நபு.  (  இடைக்குறை )  அல்லது நவு(தல்) > நபு  வகர பகர மாற்றீடு.
உச்சு  >  உஞ்சு   ( மெலித்தல் ).   இலக்குக்குச் செல்லுதல்.  வினை: உச்சுதல்.
அகம் :  உள்ளதாதல் குறிப்பு.

நபு உஞ்சு அகம் >  நபுஞ்சகம்.(  பேடித்தன்மை)

இவ்வமைப்பில்  சொற்கள் தலைமாற்று  ஏற்படவில்லை.

நண்பர் >  நபர்.  இடைக்குறை. இந்த இடைக்குறை மூலமாக நட்புக்குறிப்பு
விலகிற்று.

திருத்தம் பின்

ஞாயிறு, 3 மார்ச், 2019

சொல்: ஜீவாதாரம்.

இது ஒரு பழைய பாடல்::

செல்வமே சுக ஜீவாதாரம்
திருமகள் அவதாரம்

உள்ளபடி செல்வம் இல்லாதவரே
உலகினிலே வாழ்வதும் தவறே.

கல்லா ரெனினும் காசுள் ளவரைக்
காட்சிப் பொருளாய்க் காணார் எவரே?

இது நல்ல எதுகை மோனைகளுடனும் இயைபுகளுடனும் பாடப்பெற்றுள்ளது. கருத்துகள் தமிழ் நூல்களிலும் அடிக்கடி வாழ்க்கை நிகழ்வுகளிலும் நாமறிந்துகொள்வனதாம்.

இன்னொரு பாடலும்:

நம் ஜீவாதாரமே
செல்வம் ஆகுமே

என்று வருகிறது.

இன்று ஜீவாதாரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஜீவன் அல்லது ஜீவ் என்பது உயிர் என்று பொருள்படும்.  ஜீவ +  ஆதாரம் = ஜீவாதாரம்.

இலங்கைத் தமிழ் அறிஞர் முன் கூறிய ஆய்வுரையில்

உயிர்  >   யிர் >  ஜிவ்  > ஜீவ் > ஜீவன் 1

என்று விளைந்தமை கூறுவார்.      ஜிவ் என்ற அயல் திரிபை  அன் விகுதி கொடுத்து ஜீவன் என்பது கலவை அமைப்பு. (hybrid).  அன் தமிழ்க்குரியது.


யகர வருக்கம் ஜகர வருக்கமாவது பல மொழிகளில் உளது.  ஜூலியஸ் > யூலியஸ்;  யாக்கோப் > ஜேக்கப்  என்பன எளிதில் காணத்தக்கவை. மற்றவை வேறு விடயங்களை ஆய்கையில் தானே அறியலாம்.

சீரான வாழ்வுக்கு ஆதாரம் செல்வமே.

சீர் + வாழ்வு > சீர்வாழ்வாதாரம் >  சீவாதாரம்  > ஜீவாதாரம்.

ரகர ஒற்றும் தொலைவதே.  சேர்> சேர்மி >  சேமி > சேமித்தல்.

ழகர ஒற்று இடைக்குறைதல் மிகுதி:

வாழ்த்து + இயம் =  வாழ்த்தியம் > வாத்தியம்.
பாழ்+ வு + அம் =  பாழ்வம் >  பாவம்.

ஜீவிப்பதற்கு  ஆதாரம் ஜீவாதாரம்.  ஜீவனுக்குச் செல்வம் நேரடி ஆதாரம் அன்று.  அதற்கு மூச்சு முதலியன அடிப்படை ஆதாரங்கள்.  ஆனால் சீரான
வாழ்க்கைக்குச் செல்வம் வேண்டும்.

இப்படிச் சீர் வாழ்வு என்பதும் ஜீவி என்பதும் ஆன இரண்டும் பொருந்துவன.


--------------------------------------------

அடிக்குறிப்புகள்:

1  இலங்கை ஞானப் பிரகாச அடிகள்.

திருத்தம் பின்.