செவ்வாய், 16 டிசம்பர், 2025

மத்தியம் என்ற சொல்.

 இந்தச் சொல்,  எவ்வாறு அமைகிறது?  

தமிழில் இதற்குப் பல சொற்கள் வழங்குகின்றன.  நடு என்பது சுற்றிலும் ஒத்த தொலைவுடைய இடமே  ஆகும்.  இதற்குக் கேந்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. 

நடுவான ஓரிடத்திலிருந்து ஒலி எழுப்பினால்  ( கத்தினால்),  அஃது ஏறத்தாழச் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்கு கேட்கும். உறவினர்கள், தொலைவில் இல்லாமல் ( அருகில் ) இருப்பவர்கள். நடு என்பதன் முன்னுள்ள வடிவம் நள் என்பது.  இதுவும் அருகிலுள்ளோர் என்பதைக் காட்டும். கேள் என்ற சொல்லும் உறவினரைக் குறிக்கும்.  கேளிர் என்றால் உறவினர்.  ஆதலால் ஒலி சென்றடையும் தொலைவும் உறவினரும் ஒப்பிட்டு உணரப்பட்டனர்.  நடு என்ற பொருள் உள்ள நள்,  நண்-,  நண்பு,  நண்பர் என்றெல்லாம் அமைவதைக் காணலாம். நண்பு என்ற மெல்லினம் வந்த சொல்,  வல்லினம் வந்த நட்பு என்ற படி  வந்து  அண்மையில் இருந்து அன்புகொள்வோர் என்பதைக் காட்டுகிறது.

நள்தல்,  நளுதல், நள்ளுதல் மற்றும் நடுதல் என்ற சொல் வடிவங்களையும் காண்க.

கேளிர் உறவால் அருகிலிருப்போர்.  இது ஓர் உவமையால் அமைவது.  கேள், கேண்-,  கேண்திறம்>  கேந்திரம் என்பது இதனால்தான் நடுவைக் குறித்தது.  கேந்திரம் என்பது திரிசொல். திரிசொற்களை முழுமையாகத் தவிர்த்துவிடுதல் இயலாது.  கூடுமானவரை இயற்சொற்களால பாடல்கள் அமைவதை விரும்பியவர்கள் தமிழர்.  தமிழை இயன்மொழி என்று பெருமிதம் கொண்டவர்கள் தமிழர். 

பந்து என்று பொருள்படும் கேள்> கேண்டு என்ற சொல்லிலும் இந்தச் சுற்றுப்பொருள் உள்ளது.   கேள்> கேண்> கேண்+து > கேண்டு  ஆகிறது. தமிழர் சுற்று, வட்ட,ம், நடு என்பவற்றை நன்கு உணர்ந்திருந்தனர்.

முற்காலத்தில் நடுவாக ஒரு முடி அல்லது முடிச்சை வைத்துச் சுற்றிலும்  கயிறு அல்லது அழுத்தமான நூல் சுற்றிப் பந்துகள் அமைக்கப்பட்டன. நடுவைப் பற்றி அல்லது சுற்றிச் செல்லுமாறு வைத்துப் பந்துகள் அமைவுற்றதால் பல்> பன்>பன்+து> பந்து என்று சொல் அமைந்தது.   இதைச் சுருக்கமாகப்  பல்+து > பந்து என்னலாம்.  பல்+து> பற்று என்றும் வரும்.   நம் வாயிலுள்ள பற்கள், ஈறுகளைப் பற்றி நிற்பனவாதலால் ''பல்''  என்று பெயர்பெற்றன. பழங்காலத்து,  தேய்வகப்  ( rubber)  பந்துகள் இல்லை. இதை அறியாதான், பந்து என்பது தமிழ்ச்சொல் என்று அறியான்.

நடு என்பது சுற்றுவட்டதைத் தழுவி நிற்கிறது. தழுவி நிற்றலாவது, மருவி நிற்றல்.  இரண்டிற்கும் பொருண்மை ஒன்றாககவே பொலியக் காணலாம். ஆகவே மத்தியம் என்ற சொல் இவ்வாறு அமைந்தது.

மரு> மருத்து> (இடைக்குறைந்து) > மத்து.  நடுவில் வைத்துச் சிலுப்பித் தயிர் கடைவர்.  பருப்பும் கடைவர்.  ( சுற்றுவட்டம் அனைத்தையும் நடுவிலது தழுவி நிற்கிறது, அல்லது மருவி நிற்கிறது.)

சுற்றுவட்டத்தை மருவி நிற்பது நடுதான்,  மருத்து> மத்து > மத்தியம். ( சுற்று வட்டத்தை மருவி இயல்வது என்று பொருள்.

மத்தியம் என்ற சொல் தமிழிலும் வழங்குகிறது,  சமஸ்கிருதத்துக்கு  ( இம்மொழிக்குச் சங்கதம் என்றும் பெயர்) உரிய சொல்  மத்தியம்..

சமஸ்கிருதத்தில் இன்னும் சுருக்கி, ''மத்ய''  என்று அமைத்தனர்.

மத்திய என்றால் சுற்றினை மருவி இயன்ற நடு என்று விரிக்க.

மரு என்பது ( மருவு - வினைச்சொல்),  சுற்றுவட்டத்தினை சமதொலைவில் மருவி நிற்பதான நடுவினது ஆகும்.

மத்தியம் என்பதன் தமிழினை அறிந்தீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை












சனி, 13 டிசம்பர், 2025

''துவஜம்'' என்ற வடசொல்லின் தமிழ்மூலம். ( ''கொடி'')

 துவசம்  ( துவஜம்) என்பது கொடி என்று பொருள்தரும்.  ஒரு மரத்தண்டில் கட்டி ஏற்றிப் பறக்கவிடுவதற்கான சீலையே  கொடி அல்லது துவஜம் என்று சொல்லப்படுகிறது. 

காற்று  வீசுகையில் அங்குமிங்கும் மடங்கி மடங்கி யாடுவதைக் காற்றில் துவளுதல் என்று சொல்வர்.  துவளுதல் என்பது வளைதற்கருத்து.

கொடிகள் பலவகை.  வெற்றியின்போது ஏற்றப்படுவது  வெற்றிக்கொடி.   அன்ன சத்திரத்தில் ஏற்றி  அறிவுறுத்துவதற்காக வைக்கப்படுவது  அன்னக்கொடி ஆகும்.  பசித்தோர் அங்குச் சென்று உணவு பெற்றுக்கொள்ளுவர். பெரும்பாலும் விலையின்றிப் பெறும் உணவு அதுவாகும்.

அழுக்குத் துணியைக் கழுவுவதற்கு அல்லது துவைப்பதற்கு ,  துவைத்தல் அல்லது தோய்த்தல் என்பதுண்டு.  சலத்தில் (ஜலத்தில்) வைத்துத் தூய்மை செய்வதால்  ''சலவை''  என்பதுண்டு.  சலசல என்ற ஒலியுடன் ஓடுவதால் சலம் என்ற தண்ணீரின் இன்னொரு பெயர்.. இது பின் ஜலம் ஆனது.    சலம் அல்லது ஜலம் என்பது ஒலிக்குறிப்பு  ஆதிய சொல். (ஓலிக்குறிபை ஆதியாக உடைய சொல்.  சலக்கிரீடை  ( ஜலக்கு இரு இடை) என்பது நீரின் இடையில் இருப்பது என்பதுதான்,   ஜலக்கு = ஜலத்திற்கு.  ( ஜலம்+ கு =  ஜலத்து + இல்+ கு), இங்கு அத்துச் சாரியையும், இல் என்னும் இடப்பொருட் சொல்லும் ( உருபு) ஜலக்கு என்பதில் விடுபாடு ஆகும்.  பின் கு+ இரு+ இடை என்பவை பிரிந்து தனியாயின. தலைக்கு வைப்பது தலைக்கிரீடம்.  தலைக்கு+ இரு+ இடம்= தலைக்கிரீடம்,  இது முதற்குறைந்து கிரீடம் ஆனது.

கிரீடம் என்பது ஒரு METANALYSIS.  பிறழ்பிரிப்பு.   இச்சொல் பின் தனிச்சொல் ஆனது.  மொழி இப்படியும் வளரும்.  இதை எவரும் உணர்ந்து எழுதியிருக்கவில்லை யானறிந்தமட்டும்.

துவளும் இயல்பினதான கொடி,  துவசம் என்றே வழங்கியது.  பின்னர் அது துவஜம் ஆயிற்று.  துணி என்ற சொல்,  அது துணித்துப் பயன் கொள்ளப்படுதலால் வந்த பெயர்.   துணித்தல் என்றால் வெட்டுதல்.  வேட்டி என்பது வெட்டு என்ற சொல்லால் உணடானதே.  முதனிலைத்  திரிபு.

துவஜம் என்பதற்கு மற்றுமொரு பெயர் வேண்டின்,  காற்றாடுசீலை என்று தனித்தமிழில் சொல்லலாம்.  அது துவசம் ( துவசு+அம்) என்பதே.சு  என்பதுவும் ஒரு தொழிற்பெயர் விகுதியே. பரிசு என்பதிற்போல.  பொருளின் வரவைப் பெறுவோன் வாரிசு.  வரு+ இ+ சு> வாரிசு.  இது ஒன்றும் உருது அல்ல..  உருது அதைத் தமிழிலிருந்து பெற்றுள்ளது.   மூலச்சசொற்கள் தமிழில் உள்ளவை.  வரு என்பது வாரி என்று வந்தது வியப்பில்லை.   வரு> வாரீர் என்று அமைவது காண்க. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



செவ்வாய், 9 டிசம்பர், 2025

யுத்தம் என்ற சொல்லில் தமிழ்ச் சொல்லாக்கப் பண்பு.

 யுத்தம் என்ற சொல் தொன்று தொட்டுத் தமிழில் வழங்கிவந்துள்ளது.  இது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,  தமிழ் மூலத்தை உடைய சொல்லே

ஒருவனை அடிப்பதென்றால்  அவனுக்கு அடுத்து நில்லாமல் அவனை அடிக்க இயலாது.  இக்காலத்தில் 11000 கல்தொலைவுக்கு அப்பாலிருந்தும் ஓர் ஊரை அடித்துத் தூளாக்கலாம் என்று சொல்கிறோம்.  இத்தகைய கருத்துக்களும் அதற்கான ஆயுதங்களும் பண்டை இருக்கவில்லை. அடுத்துச் சென்றுதான் கையாலடித்து வலியை உண்டாக்குவது சொல் உண்டான காலத்தில் இருந்தது. ஆகவே தமிழை ஆயுங்கால் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். 

ஒருவனுடன் சண்டை செய்வதென்றாலும் அண்மிச் சென்றுதான் பெரும்பாலும் சண்டை இட்டார்கள்.  வில்லால்  தாக்குவதானாலும்,  ஓரளவுக்கு அண்மையில் இருக்கவே வேண்டும்.   சண்டை என்ற சொல்,  அண் என்ற அடிச்ச்சொல்லினின்று வருகிறது.  அண்> சண்> சண்டு> சண்டை என்று இச்சொல்  அமையும்.   அடி என்ற சொல்லில் இருக்கும் அடு> அடி என்பதிலுள்ள கருத்தே இங்கும் உள்ளது.  

இனி யுத்தம் என்ற சொல்லைப் பார்ப்போம்.  உத்தம் என்பதே இதன் முன் வடிவம் ஆகும்.  உ என்பது முன்னுறல் காட்டும் தமிழ்ச் சுட்டெழுத்து.  இது உன், உம் என்ற பதிற்சொல் திரிபுகளுடன் தொடர்புடையதாகும்.  தமிழை நன் கு கற்றிருந்தால் இது வாத்தியார் சொல்லிக்கொடுக்காமலே புரியக்கூடியது ஆகும். அகர  வருக்கங்கள் சகர வருக்கங்களாகும்,  இதுவும் அண்டை> சண்டை என்பது போலவேதான்.   எப்போதும் காட்டும் எளிதான உதாரணம்  அமணர் > சமணர் என்பது.  ஊகம் > யூகம் > வியூகம் என்பவும் காண்பீர்.  ஆனை > யானை என்பதில்,  அகர வருக்கங்கள் யகர வருக்கங்கள் ஆதல் கண்டுகொள்க.  முன்னுறலாகிய உத்தம் என்பதிலிருந்து யுத்தம் என்று திரிந்து  முன்னுறலையே சொல் காட்டுகிறது. முன்னுறல் என்பதும் அடுத்துச் செல்லுதலின் வேறன்று.

யாம் காண்பது இங்கு யாதெனின்,  அடுத்துறல் என்ற கருத்திலேதான் இச்சொற்கள் அமைந்துள்ளன.   உத்தம் என்பது தமிழ் மூலம் தான்.  சமஸ்கிருதத்திலும் இச்சொல் உள்ளது.  இரண்டும் சகோதர மொழிகள்.  எனவே,  இவை சொல்லாக்கத்தில் உள்ள பொதுப்பண்பை ஒட்டி அமைந்த சொற்களாகும்.

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றால்  அது வெள்ளைக்காரன் மொழியன்று.  அறிவுடையோர்,  இறைபோற்றுவோர் ஆனவர்கள் பயன்படுத்தி வந்த மொழி. தமிழும் பல இறைப்பற்று இலக்கியங்கள் உள்ள மொழிதான். மணிமேகலை என்ற புத்தமத இலக்கியம் தமிழில்தான் உள்ளது.  அதன் இறுதி நான்கு காதைகளில் பல்வேறு சமயக் கருத்துகள் சொல்லப்படுகின்றன.  இதில் கூறப்படும் சில கருத்துகள் மகாயன புத்தம் கூறும் பாலியிலும் சீனத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார், தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லுநர்.  புத்தமத நூல் தெளிவினர்.   

பிற்கால வெள்ளையர் முயன்று சமஸ்கிருத  ஒளியில்  தாங்கள் மின்னிட நினைத்தனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.