செவ்வாய், 16 டிசம்பர், 2025

மத்தியம் என்ற சொல்.

 இந்தச் சொல்,  எவ்வாறு அமைகிறது?  

தமிழில் இதற்குப் பல சொற்கள் வழங்குகின்றன.  நடு என்பது சுற்றிலும் ஒத்த தொலைவுடைய இடமே  ஆகும்.  இதற்குக் கேந்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. 

நடுவான ஓரிடத்திலிருந்து ஒலி எழுப்பினால்  ( கத்தினால்),  அஃது ஏறத்தாழச் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்கு கேட்கும். உறவினர்கள், தொலைவில் இல்லாமல் ( அருகில் ) இருப்பவர்கள். நடு என்பதன் முன்னுள்ள வடிவம் நள் என்பது.  இதுவும் அருகிலுள்ளோர் என்பதைக் காட்டும். கேள் என்ற சொல்லும் உறவினரைக் குறிக்கும்.  கேளிர் என்றால் உறவினர்.  ஆதலால் ஒலி சென்றடையும் தொலைவும் உறவினரும் ஒப்பிட்டு உணரப்பட்டனர்.  நடு என்ற பொருள் உள்ள நள்,  நண்-,  நண்பு,  நண்பர் என்றெல்லாம் அமைவதைக் காணலாம். நண்பு என்ற மெல்லினம் வந்த சொல்,  வல்லினம் வந்த நட்பு என்ற படி  வந்து  அண்மையில் இருந்து அன்புகொள்வோர் என்பதைக் காட்டுகிறது.

நள்தல்,  நளுதல், நள்ளுதல் மற்றும் நடுதல் என்ற சொல் வடிவங்களையும் காண்க.

கேளிர் உறவால் அருகிலிருப்போர்.  இது ஓர் உவமையால் அமைவது.  கேள், கேண்-,  கேண்திறம்>  கேந்திரம் என்பது இதனால்தான் நடுவைக் குறித்தது.  கேந்திரம் என்பது திரிசொல். திரிசொற்களை முழுமையாகத் தவிர்த்துவிடுதல் இயலாது.  கூடுமானவரை இயற்சொற்களால பாடல்கள் அமைவதை விரும்பியவர்கள் தமிழர்.  தமிழை இயன்மொழி என்று பெருமிதம் கொண்டவர்கள் தமிழர். 

பந்து என்று பொருள்படும் கேள்> கேண்டு என்ற சொல்லிலும் இந்தச் சுற்றுப்பொருள் உள்ளது.   கேள்> கேண்> கேண்+து > கேண்டு  ஆகிறது. தமிழர் சுற்று, வட்ட,ம், நடு என்பவற்றை நன்கு உணர்ந்திருந்தனர்.

முற்காலத்தில் நடுவாக ஒரு முடி அல்லது முடிச்சை வைத்துச் சுற்றிலும்  கயிறு அல்லது அழுத்தமான நூல் சுற்றிப் பந்துகள் அமைக்கப்பட்டன. நடுவைப் பற்றி அல்லது சுற்றிச் செல்லுமாறு வைத்துப் பந்துகள் அமைவுற்றதால் பல்> பன்>பன்+து> பந்து என்று சொல் அமைந்தது.   இதைச் சுருக்கமாகப்  பல்+து > பந்து என்னலாம்.  பல்+து> பற்று என்றும் வரும்.   நம் வாயிலுள்ள பற்கள், ஈறுகளைப் பற்றி நிற்பனவாதலால் ''பல்''  என்று பெயர்பெற்றன. பழங்காலத்து,  தேய்வகப்  ( rubber)  பந்துகள் இல்லை. இதை அறியாதான், பந்து என்பது தமிழ்ச்சொல் என்று அறியான்.

நடு என்பது சுற்றுவட்டதைத் தழுவி நிற்கிறது. தழுவி நிற்றலாவது, மருவி நிற்றல்.  இரண்டிற்கும் பொருண்மை ஒன்றாககவே பொலியக் காணலாம். ஆகவே மத்தியம் என்ற சொல் இவ்வாறு அமைந்தது.

மரு> மருத்து> (இடைக்குறைந்து) > மத்து.  நடுவில் வைத்துச் சிலுப்பித் தயிர் கடைவர்.  பருப்பும் கடைவர்.  ( சுற்றுவட்டம் அனைத்தையும் நடுவிலது தழுவி நிற்கிறது, அல்லது மருவி நிற்கிறது.)

சுற்றுவட்டத்தை மருவி நிற்பது நடுதான்,  மருத்து> மத்து > மத்தியம். ( சுற்று வட்டத்தை மருவி இயல்வது என்று பொருள்.

மத்தியம் என்ற சொல் தமிழிலும் வழங்குகிறது,  சமஸ்கிருதத்துக்கு  ( இம்மொழிக்குச் சங்கதம் என்றும் பெயர்) உரிய சொல்  மத்தியம்..

சமஸ்கிருதத்தில் இன்னும் சுருக்கி, ''மத்ய''  என்று அமைத்தனர்.

மத்திய என்றால் சுற்றினை மருவி இயன்ற நடு என்று விரிக்க.

மரு என்பது ( மருவு - வினைச்சொல்),  சுற்றுவட்டத்தினை சமதொலைவில் மருவி நிற்பதான நடுவினது ஆகும்.

மத்தியம் என்பதன் தமிழினை அறிந்தீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை












கருத்துகள் இல்லை: