வெள்ளி, 19 டிசம்பர், 2025

கணம் (சொல்), வெகுளி என்பவை

 இதனை வாருங்கள் ஆராய்வோம்..

''குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 

கணமேயும் காத்தல் அரிது''  

என்பது குறள். வெகுளி என்ற சொல்,  சொல்லாய்வில் ஓர் ஆய்வுக்கு அருமையான சொல்லுமாகும்.  இதன் மூல வினைச்சொல்  வேகுதல் என்பது.  வேகு> வெகு> வெகுள்>  வெகுளி என்று அமைந்துற்ற சொல்லாகும். உள் என்ற விகுதி வினையாக்கத்திலும் வருமென்பதை இதனால் அறிந்துகொள்ளலாம். கடத்தல் (தாண்டிச்செல்லுதல் என்று பொருள்படும் வினை) என்பதிலிருந்து,  கடவுள் என்ற சொல் உள் விகுதிபெற்று அமைந்துள்ளதைக் காணலாம். வெகுள் என்பது ஒரு வினையிலிருந்து இன்னொரு வினை உண்டாக உதவுகிறது. இது வெகு+ உள்> வெகுள் என்று அமைந்தது.  சுரு என்ற அடிச்சொல்லிலிருந்து  சுருங்கு,  சுருள் என்ற வினைகள் உண்டாயின.  இவற்றில் சுரு+ உள் > சுருள் ஆகும். சுர்> சுரு.  சுர் என்பதே மூல அடி ஆகும்.  சுரிதல் என்ற வினையும் உள்ளது. சுரிதலாவது சுருங்கி உள்வாங்குதல் என்று விளக்கலாம். சுரிந்தோடும் நாகம் என்று ஒரு கவிதையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.

வெகுளி என்பது கோபம் ஆகும். வெகுளிக்காரன், வெகுளிப்பெண் என்ற சொற்பயன்பாடுகளும் உள.  கள்ளம் கபடு இல்லாத குணத்தினர் என்ற பொருளில் இவை வரும்.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் பெழுது அல்லது நேரம் என்று பொருள்படும்.  கண்ணிமைப் பொழுது ஆதலால்,  கண்+ அம் > கணம் என்றானது இந்தச் சொல்.  கண் இமைத்தலால் அமையும் நேரம் ஆதலின்  கண் அம் என்பவற்றால் ஆயிற்று இச்சொல்.  அம் என்பது அமைத்தல் என்பதன்  அடிச்சொல். இங்கு இது விகுதியாக வந்து  அமைத்தலை உணர்த்துகிறது.

சிலவிடத்து, விகுதி பொருளோடு இலங்குதலும் உளது.  பொருளில்லாத விகுதிகளும் உள.

ககரத் தொடக்கத்துச் சொல்,  சகரத் தொடக்கமாகவும் வரும். கணம்>  சணம் ஆனது ககர சகரத் திரிபு.   சேரல்>  சேரலம் > கேரளம் என்பதில் இவ்வாறே  ஆனது.

கணம்> சணம் என்பது பின்னும் முன்னேறி,  க்ஷணம் என்றுமானது. கணமென்பது மூலத் தமிழ்ச்சொல்  ஆகும்.  

சமஸ்கிருதம் என்பதன் பொருள்.

(க்ஷணம் என்னும் சமஸ்கிருதம்)

சமஸ்கிருதம் என்ற சொல்லில் சமம், கதம் என்ற சொற்பகவுகள் உள்ளன.  கதம் என்பது ஒலி.  கத்> கதம். கத்> கத்து என்பதில் ஒலி எழுப்புதல் பொருள். கத்> கதறு என்பதிலும் ஒலியே முன்மை அல்லது முதன்மை பெற்றது. கத்> கது> காது என்று முதனிலை திரிந்து சொல்லமையும்.  காதால் கேட்டறியும் நிகழ்வு கூறுதல் கதை ஆனது.  இது பின் முதல் நீண்டு காதை ஆனது.  காதை என்பது கீதை ஆனது  செவிக்கதை என்று பொருள்தரும்.  இது சொல்லாக்க மூலப் பொருள். கதம் என்பது கிருதம் என்று திரியும்..  சமஸ்கிருதம் என்றால் மூலத்துடன் சமமான ஒலி உடையதாகிய மொழி என்று பொருள். இதற்கு வெள்ளைக்காரன் ''நன்றாகப் புனையப்பட்டது'' என்று பொருள் சொல்லுவான்.  எதுவும் கெடுதலாகப் புனையப்படவில்லை,  எல்லாம் நன்றாகவே செய்யப்பட்டுள்ளது.  கணம் என்பது க்ஷணம் ஆனதில் ஒலிமேம்பாடு,  பிற தேயத்தாருக்கு உரியபடி செய்யப்பட்டுள்ளது. ஒலி மேம்பாட்டினால் சமஸ்கிருதமான சொல் க்ஷணம் என்ற சொல் ஆகுமென உணர்க.  இதனால் கண் என்ற மூலச்சொல்லுக்கு எந்தக் குறைவும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.




https://r.search.yahoo.com/_ylt=Awr1Te0riUZpJgIAFisj4gt.;_ylu=Y29sbwNzZzMEcG9zAzQEdnRpZAMEc2VjA3Ny/RV=2/RE=1767439916/RO=10/RU=https%3a%2f%2fwww.lexilogos.com%2fenglish%2fsanskrit_dictionary.htm/RK=2/RS=R8a0L2BoRel.nB5KCNvPw811C0s-









கருத்துகள் இல்லை: