யுத்தம் என்ற சொல் தொன்று தொட்டுத் தமிழில் வழங்கிவந்துள்ளது. இது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ் மூலத்தை உடைய சொல்லே
ஒருவனை அடிப்பதென்றால் அவனுக்கு அடுத்து நில்லாமல் அவனை அடிக்க இயலாது. இக்காலத்தில் 11000 கல்தொலைவுக்கு அப்பாலிருந்தும் ஓர் ஊரை அடித்துத் தூளாக்கலாம் என்று சொல்கிறோம். இத்தகைய கருத்துக்களும் அதற்கான ஆயுதங்களும் பண்டை இருக்கவில்லை. அடுத்துச் சென்றுதான் கையாலடித்து வலியை உண்டாக்குவது சொல் உண்டான காலத்தில் இருந்தது. ஆகவே தமிழை ஆயுங்கால் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒருவனுடன் சண்டை செய்வதென்றாலும் அண்மிச் சென்றுதான் பெரும்பாலும் சண்டை இட்டார்கள். வில்லால் தாக்குவதானாலும், ஓரளவுக்கு அண்மையில் இருக்கவே வேண்டும். சண்டை என்ற சொல், அண் என்ற அடிச்ச்சொல்லினின்று வருகிறது. அண்> சண்> சண்டு> சண்டை என்று இச்சொல் அமையும். அடி என்ற சொல்லில் இருக்கும் அடு> அடி என்பதிலுள்ள கருத்தே இங்கும் உள்ளது.
இனி யுத்தம் என்ற சொல்லைப் பார்ப்போம். உத்தம் என்பதே இதன் முன் வடிவம் ஆகும். உ என்பது முன்னுறல் காட்டும் தமிழ்ச் சுட்டெழுத்து. இது உன், உம் என்ற பதிற்சொல் திரிபுகளுடன் தொடர்புடையதாகும். தமிழை நன் கு கற்றிருந்தால் இது வாத்தியார் சொல்லிக்கொடுக்காமலே புரியக்கூடியது ஆகும். அகர வருக்கங்கள் சகர வருக்கங்களாகும், இதுவும் அண்டை> சண்டை என்பது போலவேதான். எப்போதும் காட்டும் எளிதான உதாரணம் அமணர் > சமணர் என்பது. ஊகம் > யூகம் > வியூகம் என்பவும் காண்பீர். ஆனை > யானை என்பதில், அகர வருக்கங்கள் யகர வருக்கங்கள் ஆதல் கண்டுகொள்க. முன்னுறலாகிய உத்தம் என்பதிலிருந்து யுத்தம் என்று திரிந்து முன்னுறலையே சொல் காட்டுகிறது. முன்னுறல் என்பதும் அடுத்துச் செல்லுதலின் வேறன்று.
யாம் காண்பது இங்கு யாதெனின், அடுத்துறல் என்ற கருத்திலேதான் இச்சொற்கள் அமைந்துள்ளன. உத்தம் என்பது தமிழ் மூலம் தான். சமஸ்கிருதத்திலும் இச்சொல் உள்ளது. இரண்டும் சகோதர மொழிகள். எனவே, இவை சொல்லாக்கத்தில் உள்ள பொதுப்பண்பை ஒட்டி அமைந்த சொற்களாகும்.
சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றால் அது வெள்ளைக்காரன் மொழியன்று. அறிவுடையோர், இறைபோற்றுவோர் ஆனவர்கள் பயன்படுத்தி வந்த மொழி. தமிழும் பல இறைப்பற்று இலக்கியங்கள் உள்ள மொழிதான். மணிமேகலை என்ற புத்தமத இலக்கியம் தமிழில்தான் உள்ளது. அதன் இறுதி நான்கு காதைகளில் பல்வேறு சமயக் கருத்துகள் சொல்லப்படுகின்றன. இதில் கூறப்படும் சில கருத்துகள் மகாயன புத்தம் கூறும் பாலியிலும் சீனத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார், தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லுநர். புத்தமத நூல் தெளிவினர்.
பிற்கால வெள்ளையர் முயன்று சமஸ்கிருத ஒளியில் தாங்கள் மின்னிட நினைத்தனர்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக