புதன், 19 நவம்பர், 2025

வயிறு - சொல்லும் பொருளும்.

 வயிறு என்றால் இறுதியில் வைக்கப்பட்டது என்று பொருள்.  முன் காலத்திலே இச்சொல் அமைந்து நெடுங்காலமாக வழங்கி வருகிறது.  

வை  -    வைக்கப்பட்டது. இந்தப் பகவு,  வ்+ ஐ என்ற ஈரெழுத்துக்களால்  ஆனதாம். இங்கு வை என்பது நெடில்.  குறுகி  வ என்று நின்றது.

இறு  என்பது இறுதி என்ற பொருளது.   இறுதல் என்ற வினை, விகுதி பெறாமல் பகுதி மட்டுமே பகவாக நின்றது.  இறு என்றபடி.

வ+ இறு >  வயிறு  ஆனது.   யகர ஒற்று,  இரு பகவுகளையும் உடம்படுத்துகிறது,  அதாவது இணைக்கின்றது.

உதரம்  என்பது வயிற்றுக்கு இன்னொரு பெயர்.  இது உது + அரு+ அம் என்ற மூன்று பகவுகளைக் கொண்டு ஆன சொல்.

உ - என்றால் முன்.  து என்ற விகுதி இணைந்து உது -  முன்னிருப்பது என்ற பொருளில் வரும்.  நீ > உன் என்ற சொல்லில் உன் என்பது முன்னிருப்பவனுக்குப் பதிற்பெயர் ( pronoun).[ in the possessive case]. இது  ஊன்> உன் என்று குறுகிற்று என்று இலக்கணியர் உரைப்பர். நீ என்ற சொல், நீங்கற் பொருளது ஆகும்.  தன்னின் நீங்கி நிற்பவன் என்று பொருள்.'' உன்னில்'' முதுகுக்கு அருகில் இருப்பதால்  '' அரு'' என்ற  பகவு வந்தது.  ஆகவே உன்னில் முதுகுக்கு அருகில்  அமைந்தது   அரிய பல உள்ளுறுப்புகளைக் கொண்டிருக்கும் இடம் என்று பொருளுரைத்தல் கூடும்.  இவ் வுதரம் என்ற சொல் ஒரு காலத்தில் வழக்கில் இருந்து பின் வழக்குக் குன்றியிருக்கலாம்.

'' உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும்''  என்ற மனோன்மணீயம் வழக்கினைக் கண்டுகொள்க.  உது அரு என்னாமல் உ+ தரு என்றும் விளக்கலாம்.  இஃது '' முன் வைக்கப்பட்டது''  என்று பொருள்படும். 

ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகளை உடைய சொல் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.


திங்கள், 17 நவம்பர், 2025

கேதாரம் இராகம். சொல்லமைப்பு

 கேதாரம் என்பது 29-வது மேளகர்த்தா இராகம் என்பர்.  இது ஆரோகணத்தில் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதனால்,  இந்த ஒழுங்குமாற்றம்  ''கேடு'' என்ற சொல்லால் அறியப்படுகிறது.  தமிழ் இலக்கணத்திலும் விடுபாடுகளைக் கேடு, கெட்டது என்ற சொற்களால்தாம் குறிப்பிடுவர்.  எடுத்துக்காட்டாக என்னில் என்ற சொல்  எனில் என்று வரின்,  னகர ஒற்றுக் கெட்டது என்று சொல்வர். எதையும் விடாமல் தொகுக்க முடியாதாகையினால், இதைக் கெடு என்ற வினை சரியாகவே குறிக்கிறது.  தொகை (தொகுத்தல்) என்பதும் அது. புலவர்கள் பாடியவை பல இருந்திருக்கலாம்.  நானூறு பாட்டுகள் தாம் வேண்டின் பலவற்றை விடவேண்டியதாகிறது.  பல நூறுகளை விட்டிருக்கலாம்.  இல்லாவிட்டால் தொகுக்கமுடியாது.  எட்டுத்தொகை நூல்கள் அவ்வாறு தொகுக்கப்பட்டவைதாம். ஆனால் விடப்பட்டவை கெட்டவை என்பது பொருளன்று. விடுபாடு என்பதே இங்குப் பொருளாகும்.

கேடு+ தாரம் >  கே+ தாரம் >  கேதாரம்.

தரு+ அம் > தாரம்,  அதாவது விடற்பாலவற்றை விட்டு மிஞ்சியவை தருதல். இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

கேது என்பது ஒரு நிழற்கிரகம். ஒளி கெட்டமையால்,  கேடு+ து > கேது எனப் பெயர் ஏற்பட்டது.  கேடு என்ற முழுச்சொல்லில் டுகரம் விடுபாடு ஆனதனால், இதை இலக்கணத்தில் கடைக்குறை என்பர்.

இதுபோலும் எழுத்துக் கெட்ட செற்களை,  பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிட்டுக் கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை 





















புதன், 12 நவம்பர், 2025

சிலாகித்தல் என்பதன் தமிழ் மூலம்

 

சிலாகித்தல் என்றால் என்ன?

இன்று சிலாகித்தல் என்ற சொல்லெழுந்த வகையை  அறிந்துகொள்வோம். இஃது இன்னும் வழக்கில் உள்ள சொல்லாம்.

அறிதற்கு எளிமையானதே இது.

இதனைச் "சில  ஆகுதல்" என்ற தொடர்கொண்டு  அறிக.

இந்தச் சொல்லiைப் படைத்தவர்,   ஆகுதல்  என்ற செந்தமிழ் வடிவினைக்
கையிலெடுத்து  ஆகி என்று வினை எச்சமாக்குகிறார்.

அப்புறம்  அதில்  -தல் என்னும் தொழிற்பெயர் விகுதியை  இணைக்கிறார்.

இணைக்க  "ஆகித்தல்"  என்ற வடிவம் கைவரப்பெறுகிறார்.

இது  "ஓது" என்ற சொல்லை  "ஓதி"  என்று எச்சமாக்கி அப்புறம்  -தல் விகுதி இணைத்து ஓதித்தல் என்று தொழிற் பெயர் ஆக்கியது போலுமே. இதை  "ஆமோதித்தல்" என்பதில் வர அறிந்து மகிழ்வீர்.

அந்தக் காலத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்துப் புலவோர் இது கண்டு மகிழார் எனினும்  புதுமை விழைவார் யாதுதான் செய்வது.  கூடுதலான எதிர்ப்பு வரின் பிறமொழி என்று மழுப்பிட வேண்டியதே.


எச்சத்தினின்று வினைபுனைதல் பாலி முதலிய பிற மொழிகளிற் காணக் கிடைப்பதே.

சில வழிகளில் புகழ்தல்   என்பது சிலாகித்தல் என்பதான புதுப்புனைவுக்குப்  பொருள்  ஆயிற்று.  புகழே ஆக்கம்.  மற்றென்ன உண்டு மானிடற்கு?  இசைபட வாழ்தலே ஊதியமென்றார் வள்ளுவனார்.  சிலாகித்தலுமது.