புதன், 12 நவம்பர், 2025

சிலாகித்தல் என்பதன் தமிழ் மூலம்

 

சிலாகித்தல் என்றால் என்ன?

இன்று சிலாகித்தல் என்ற சொல்லெழுந்த வகையை  அறிந்துகொள்வோம். இஃது இன்னும் வழக்கில் உள்ள சொல்லாம்.

அறிதற்கு எளிமையானதே இது.

இதனைச் "சில  ஆகுதல்" என்ற தொடர்கொண்டு  அறிக.

இந்தச் சொல்லiைப் படைத்தவர்,   ஆகுதல்  என்ற செந்தமிழ் வடிவினைக்
கையிலெடுத்து  ஆகி என்று வினை எச்சமாக்குகிறார்.

அப்புறம்  அதில்  -தல் என்னும் தொழிற்பெயர் விகுதியை  இணைக்கிறார்.

இணைக்க  "ஆகித்தல்"  என்ற வடிவம் கைவரப்பெறுகிறார்.

இது  "ஓது" என்ற சொல்லை  "ஓதி"  என்று எச்சமாக்கி அப்புறம்  -தல் விகுதி இணைத்து ஓதித்தல் என்று தொழிற் பெயர் ஆக்கியது போலுமே. இதை  "ஆமோதித்தல்" என்பதில் வர அறிந்து மகிழ்வீர்.

அந்தக் காலத்தில் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்துப் புலவோர் இது கண்டு மகிழார் எனினும்  புதுமை விழைவார் யாதுதான் செய்வது.  கூடுதலான எதிர்ப்பு வரின் பிறமொழி என்று மழுப்பிட வேண்டியதே.


எச்சத்தினின்று வினைபுனைதல் பாலி முதலிய பிற மொழிகளிற் காணக் கிடைப்பதே.

சில வழிகளில் புகழ்தல்   என்பது சிலாகித்தல் என்பதான புதுப்புனைவுக்குப்  பொருள்  ஆயிற்று.  புகழே ஆக்கம்.  மற்றென்ன உண்டு மானிடற்கு?  இசைபட வாழ்தலே ஊதியமென்றார் வள்ளுவனார்.  சிலாகித்தலுமது.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

வினோதம் ( விநோதம்) சொல்

 வினோதம் என்னும் சொல் தோற்றம்.

இதற்கு இன்னொரு சொல் வேண்டின்,  ''விசித்திரம்''  என்று சொல்லலாம். 

இச்சொல்லுடன்,   நோடு(தல்) என்றொரு சொல்லையும் ஒப்பிடலாம் என்றாலும், இச்சொல் இப்போது கிடைக்கவில்லை. ஆனால் நோட்டம் என்ற சொல் கிட்டுகின்றது.  ஆடு> ஆட்டம் என்பதுபோல்  நோடு> நோட்டம் இருக்கவேண்டுமே.  இச்சொல் ( நோடு) வழங்கிய நூல் கிடைக்கவில்லை.  நீங்கள் நூல்கள் வைத்திருந்தால், அவற்றில் கிடைக்கிறதா என்று பாருங்கள்.  ஆனால் நோண்டுதல் என்ற சொல் கிட்டுகின்றது.  நோண்டி நோண்டிக் கேட்கிறான் என்று வாய்ப்பேச்சில் வரும்.  நோண்டு என்ற வினை இடைக்குறைந்தால் நோடு என்றாகும்.  என்னில்> எனில் என்று குறுகுவது போலும் இது வருகிறது.

புதிராக இருத்தல் என்பதும் ஓரளவு ஒருபொருளினதாய் இருக்கலாம்.

ஒன்றைப் பெரிதாக எண்ணுவீரானால் இயல்பு கடந்ததாகக் கருதப்படுமானால் அதை வினோதம் என்னலாம்.   வியன்  என்ற சொல் வின் என்று இடைக்குறைந்து,  ஓது+ அம்> ஓதம் என்று வந்து,  வின்+ஓதம் > வினோதம் ஆகிறது. வியன் - பெரிது என்பது.  விரிநீர் வியனுலகம் என்பது குறளில் வரும் தொடர். விண் இன்று  பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி என்பது காண்க.

நோட்டம் செய்வோனை நோட்டக்காரன் என்றும் சொல்வதால் நோட்டம் என்ற சொல்லுக்கு வினை நோடு என்பது பெறப்படுகிறது. இது நோட்டன் என்ற சொல்லைக் கவனிக்கத் தூண்டுகிறது.  நோட்டை ( நொட்டை)  என்பதும் பேச்சில் உள்ளது. இயல்பாக ஒன்றைக் கருதாமல் பேசுவது இதன் பொருளாகத் தெரிகிறது. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

புதன், 5 நவம்பர், 2025

அடு(ச்) சரம் - அட்சரம்.

 தமிழுக்கும்  ''வடமொழி''க்கும் உள்ள அணுக்கத் தொடர்பினை அறிந்துகொள்ள அட்சரம் என்ற சொல்லும் சான்று பகரும்..  இதில் எனக்கு ஓர் ஐயப்பாடும் இல்லை,

எழுத்துக்களை உண்டாக்கிய பின்  இலக்கண ஆசிரியர்கள் இவ் வெழுத்துக்களின் தொகுப்புக்கு ஒரு பெயர் வைத்தனர்.  சில விதிகளின்படி எழுத்துக்கள்  சரமாக  அடுக்கிவைக்கப் பட்டன.  இந்த விதிகளை இன்னொரு நாள் காண்போம்.  சமஸ்கிருதத்துக்கு இந்த வேலையைச் செய்த பெரும்புலவர் பாணினி என்பவர்.

சரம் என்ற சொல் முறையாக என்று பொருள் தரும்.   அடு என்பது  அடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.

அடு  சரம் >  அடுசரம் ,  இதில்  அடு என்பதை அட் என்று குறுக்கியது மட்டுமே இங்குச்  சொல்லமைப்பு.   அடு சரம் >  அட்சரம்  ஆகியது,   இது இவரின் சிறந்த சொல்லாக்கத் திறனை எடுத்தியம்புகிறது என்பது தெளிவு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை