வினோதம் என்னும் சொல் தோற்றம்.
இதற்கு இன்னொரு சொல் வேண்டின், ''விசித்திரம்'' என்று சொல்லலாம்.
இச்சொல்லுடன், நோடு(தல்) என்றொரு சொல்லையும் ஒப்பிடலாம் என்றாலும், இச்சொல் இப்போது கிடைக்கவில்லை. ஆனால் நோட்டம் என்ற சொல் கிட்டுகின்றது. ஆடு> ஆட்டம் என்பதுபோல் நோடு> நோட்டம் இருக்கவேண்டுமே. இச்சொல் ( நோடு) வழங்கிய நூல் கிடைக்கவில்லை. நீங்கள் நூல்கள் வைத்திருந்தால், அவற்றில் கிடைக்கிறதா என்று பாருங்கள். ஆனால் நோண்டுதல் என்ற சொல் கிட்டுகின்றது. நோண்டி நோண்டிக் கேட்கிறான் என்று வாய்ப்பேச்சில் வரும். நோண்டு என்ற வினை இடைக்குறைந்தால் நோடு என்றாகும். என்னில்> எனில் என்று குறுகுவது போலும் இது வருகிறது.
புதிராக இருத்தல் என்பதும் ஓரளவு ஒருபொருளினதாய் இருக்கலாம்.
ஒன்றைப் பெரிதாக எண்ணுவீரானால் இயல்பு கடந்ததாகக் கருதப்படுமானால் அதை வினோதம் என்னலாம். வியன் என்ற சொல் வின் என்று இடைக்குறைந்து, ஓது+ அம்> ஓதம் என்று வந்து, வின்+ஓதம் > வினோதம் ஆகிறது. வியன் - பெரிது என்பது. விரிநீர் வியனுலகம் என்பது குறளில் வரும் தொடர். விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி என்பது காண்க.
நோட்டம் செய்வோனை நோட்டக்காரன் என்றும் சொல்வதால் நோட்டம் என்ற சொல்லுக்கு வினை நோடு என்பது பெறப்படுகிறது. இது நோட்டன் என்ற சொல்லைக் கவனிக்கத் தூண்டுகிறது. நோட்டை ( நொட்டை) என்பதும் பேச்சில் உள்ளது. இயல்பாக ஒன்றைக் கருதாமல் பேசுவது இதன் பொருளாகத் தெரிகிறது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக