திங்கள், 23 செப்டம்பர், 2024

ஃபெரா என்ற சின்ன நாய்க்குட்டி பிரான்சு சென்றது


 அடுக்குமாடி வீட்டில்நின்ற

அழகுநாய்க்  குட்டி

நடுக்குகுளிர் நாடுபிரான்சு

நல்லபடி போய்ப்பின்

துடுக்குமிகத் தரைவீட்டில்

துள்ளியோடி  ஆடும்

மிடுக்குதனைக் காண்கநீரே

மேற்படத்தில் நன்றே.


பச்சைப்புல் பின்நிலத்தில்

பாய்ந்துபாய்ந்   தோடி

இச்சைதீர அந்தவீட்டின்

இல்வாணர் உகக்க,

அச்சமின்றி அங்குமிங்கும்

ஆடியோடிக் களிக்கும்

குக்கல்புகழ் கொஞ்சம்சொல்க

குதூகலம்  நன்றே.


குக்கல் - சின்ன நாய்

குதூகலம் - மகிழ்ச்சி

இல்வாணர் வீட்டுக்காரர்கள்

இச்சை - விருப்பம்

பின் நிலம் - வீட்டுக்குப் பின் உள்ள நிலம்

நடுக்கு குளிர் - மிகுந்த குளிர்


இது சிங்கப்பூரில் உள்ள அடுக்கு

மாடி வீட்டிலிருந்து இப்போது

பிரான்சுக்கு வீடுமாறி உள்ளது


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


படம் அனுப்பியது: திருமதி ரதி,  நன்றி.


 


சனி, 21 செப்டம்பர், 2024

சம்பல் சம்போ என்னும் சொற்கள்.

 இது ஒருவகைத் துவையலைக் குறிப்பதாகத் தற்கால அகராதிகள் சொல்கின்றன. சம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை அரைத்துச் சேர்த்துக் குழப்புதல். இது தம் என்ற பன்மைச் சொல்லின் வெளிப்பாடு. தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரைக் குறிக்கும். இது திரிந்து சம் ஆகி ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்சேர்க்கையைக் குறித்தது. பல் என்பது பல்பொருள் குறிப்பதாகவே இருத்தலால்,  சம் என்பது சேர்த்தல் என்று கொள்ளவேண்டும்.

இதன் ஆய்வினை மூலச்சொல்லிலிருந்து தொடர்ந்தால் இன்னும் பொருள் சிறக்கும்,  மூலச்சொல் ஆவது அண் என்பது,  அடுத்திருத்தல் என்பது அண் என்பதன் பொருள். அண் > சண் ,  எனவே  அடுத்தடுத்துச் சேர்த்தல் என்ற பொருள் வருகிறது.  பல் என்பது பல்பொருள் என்பதால் சண்பல் > சம்பல் என்று சொல்லும் பொருளும் பொருந்திவிடுகின்றன. சம்பல் என்பது திரிசொல் ஆகிறது.

சண்பு > சம்பு - இது இயல்பான திரிபே ஆகும்,

சம்பல் என்பது விலைமலிவையும் குறிப்பதாகச் சொல்வர்.  இப்பொருளில் இச்சொல் இதுகாலை வழங்கவில்லை,  ஆனால் இதை நாம் எளிதில் உணர முடிகிறது.  அதே பொருள் அடுத்தடுத்துச் சந்தைக்கு வருமானால் விலை வீழ்ந்து விடும், இதற்கும் பொருள் சரியாகவே உள்ளது.

சம்பு என்பது  அடுத்தடுத்து மக்கள் வணங்கும் தேவர்களாய் இருத்தலால், அவர்களுக்கும் இச்சொல் பொருந்துகிறது. ஒன்றன்பின் இன்னொரு தேவரை வணங்கத் தடை எதுவும் இருந்ததில்லை.  சிவன், விட்ணு, பிரமன் (பெருமான்), அருகன், சூரியன் ஆகியோர் இவ்வாறு வணங்கப் படும் தேவர்கள்  ஆவர்.

அண் என்ற மூலம்,  மக்கள் அடுத்துச் சென்று வணங்குதலையும் மற்றும் மக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வணங்குதலையும் ஒருங்கே குறிக்கவல்லது ஆகும்.  ஆகவே சம்போ (மகாதேவா) என்பது  மக்கள் அண்மிச்சென்று வணக்கம் செய்தற் குரிய தேவன் என்று பொருள்படும் சொல்லாகிறது.

இதுவே சொல்லலமைப்புப் பொருளாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்புபின்னர்.

Edited on 22092024 0559


வியாழன், 19 செப்டம்பர், 2024

விலைகள் விழ என்ன மார்க்கம்?

 கோடியிலே இருபத்தி ரெண்டுகோடி  யின்மிக்கார்

கோவிட்டின் வேலையின்றித் தவித்த  மக்கள்,

ஓடியோடித் தேடினாலும் வேலையொன்றும் எங்குமில்லை

உனைவேண்டாப் பூமியிதோ என்ன துன்பம்! 

கூடிநண்பர் தம்மோடு களித்திருப்போம் எனச்சென்றால்

நாடுமிடம் எங்கெனினும் நோயின் தொல்லை,

மாடுகட்கு வேலையுண்டு, மனிதனுக்கோ வேலையில்லை

மந்தநிலை பலருக்கும் ; ஓய்ந்த பூமி!


அந்தநிலை இந்தநேரம் இல்லைஎன்ற  போதினிலும்

அதன் தாக்கம் அங்குமிங்கும் இன்னும் உண்டு,

 வெந்தஉண   வின்விலைகள் ஏறியவை இறங்கிடுமோ

வீழ்ந்துமுன்னர் உலகமது போலும்  வருமோ?

எந்தஒரு காரணமோ சிந்திக்கும் போதினிலே

இருக்கிறவை அங்குமிங்கும் கிறுக்குப் போர்கள்!

சிந்தனையில் ஒன்றாகிச்  சேர்ந்துவாழ நாம்மனிதர்

சீர்பெறுவோம் என்றெண்ணில் துன்பம் ஏது?


திரம்பின்கா  லத்தில்போர் இல்லைஇப்  போது 

வரம்பிகந்து   செல்கின்  றது! 


பொருள்:

உலகில் 2 கோடிக்கு வேலை இல்லை என் கின்றது ஒரு கணக்கு.

 வரம்பிகந்து -  நிறுத்தும் எல்லை கடந்து

இதில் எளிய சொற்களையே பயன்படுத்தியுள்ளோம்.


அறிக மகிழக

மெய்ப்பு பின்னர்

Edited 22092024 0520