திங்கள், 13 மே, 2024

அத்திறம் > அத்திரம் > அஸ்திரம்.

அம்பு அஸ்திரம் என்ற சொற்களை நாம் விரித்து ஆய்ந்துள்ளோம்.  இவற்றை முன்னர் நீங்கள் படித்திராவிட்டால் இங்குச் சென்று வாயிக்க- ( வாசிக்க)லாம்.

சொடுக்குக:  https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_20.html

இப்போது இன்னொரு வகையில் அஸ்திரம் என்ற சொல்லை அறிந்துகொள்ள முனைகிறோம். மேற்கண்ட இடுகையில் அஸ்திரம் என்பது தூரத்திலிருந்து அடிக்கும் வழி என்பதை அவ்வளவாகப் பெரிதுபடுத்தவில்லை.  இப்போது அடியை அல்லது உதையை மையமாக வைத்து அதே சொல்லைக் காட்டுவோம். தமிழிலே ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இதைக் காட்டலாம் என்பதை முன்னரே நாம் கூறியுள்ளோம். இங்குள்ள இடுகைகளில் சிலேடைகள்போல சொற்பிறப்பைக் காட்டுதலைத் தவிர்த்துள்ளோம். சிலவேளைகளில் தமிழ்மொழியில் வளத்தையும் வசதியையும் விரித்துரைப்பது அவசியமாகிறது.

அஸ்திரம் என்ற சொல்லையே இன்றும் எடுத்துக்கொள்கிறோம்.

முதலில் இறுதல் என்ற சொல்லைக் கவனத்தில் கொண்டுவருகிறோம்.  இறுதல் என்றால் முடிதல். இறு என்பதனுடன் தி என்ற விகுதி சேர இறுதி என்ற சொல் பிறந்து முடிவு என்ற பொருளைப் பயக்கிறது.  இன்றைக்கு உள்ள அஸ்திரங்களை அல்லது எறிபடைகளை ( missiles ) கொண்டு சில நொடிகளிலே பல ஊர்களை அழித்து பல்லாயிர அல்லது பல்லிலக்கவரை சாம்பலாகச் செய்துவிட முடியுமன்றோ? இத்தகைய திறனை அதே சொல்லில் காட்டுதல் கூடுமோ?  பார்க்கலாம். அஸ்திரம் என்ற சொல்லையே தேர்ந்தெடுப்போம்.

இறு என்ற சொல்லிலிருந்துதான் இற இறத்தல் என்ற சொல்லும் வருகிறது.  பல இறப்புகள் நிகழும் என்பதால் இறம் என்பது பொருத்தமான சொல்லிறுதி ஆகும். இறம் என்பதை இரம் என்று வைத்துக்கொள்ளலாம்.

அடித்து + இறு + அம் > அடித்திறம் > ( டி யை விலக்க) >  அத்திறம் > அத்திரம்> அஸ்திரம் என்ற அதே சொல் வந்துவிட்டது.

அழித்து அல்லது அடித்து இறுதல்.

அழித்திறம் >  அத்திறம் > அஸ்திரம் என்றும்  ஆகும்,  ழி விலக்கப்பட்டது.

பூசைமாந்தர் செய்ததுபோல இச்சொல்லை நாம் மாற்றி அழிப்பை அல்லது அடித்தலை மறைவாக்கியுள்ளோம்.

அஸ்திர என்பது  astro என்ற சொல் போலவே இருப்பதால் மிக்க நன்று.

இப்போது ஏவுகணை, எறிபடை என்பனவும் அறிவோம். பறக்குத்தி, பறவெடி, வெடிப்பறவி என்று பல உண்டாக்கலாம்.  சொல்லுக்கு நமக்குப் பஞ்சமில்லை. மனநிறைவு தருகிறதா என்பதே அறியத்தக்கது,

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

ஞாயிறு, 12 மே, 2024

அம்மாவின் அருள்.

அம்மாவின் அருளால் அவருக்குப் பெருவெற்றி

இம்மா நிலத்தவர்க் கிருந்திடும் விரிவியப்பே, 

சனி, 11 மே, 2024

சாதாரணம், சாமானியம், சாமான்.

 வேண்டுதன்மை*,  கிடைப்பு**  என்ற இரண்டுமே எப் பொருளும் விலை உடையதாய் உள்ளதா என்பதற்கு விடைதருவனவாம். ஒருபொருள் தேடுவாரற்றதாய் இருக்குமானால் அதை யாரும் வேண்டுமென்னார். இயல்பாய்க் கிட்டும் பொருட்களும் சில தேவையுடையவாகிவிடும் நிகழ்வுகள் ஏற்பட்டுவிடலாம்.  அப்போது அவை விலையுடையவாகும். நாம் பொருட்களில் சிலவற்றைச் "சாதாரணம்" என்று குறிக்கிறோம்.  சாமான், சாமானியம்  என்றும் குறிக்கிறோம்.  இச்சொற்களைப் பற்றி யாம் சில குறிப்புகளே தருவோம்.

சமஸ்கிருதம் என்ற பூசைமொழியும் இந்தியாவிலே தோன்றி வளர்த்து விரிவாக்கப்பட்ட  மொழியே ஆகும்.  இதிலிருந்தும் தமிழிலிருந்தும் பல சொற்களை இலத்தீன் மொழி அறிஞர்கள் கற்றுக்கொண்டு தங்கள் (அப்போது) புதுமொழியை விரிவாக்கினர். உரோமப் பேரரசு அமைந்துகொண்டிருந்த அக்காலத்தில் ஓர் குறுகிய இடத்தில் வழங்கிய வட்டார மொழியாகிய இலத்தீனம், ஒரு பேரரசுக்கு ஏற்ற மொழியாக விரிவு செய்யப்பட்டுப் பயன்பாடு கண்டது. பலவகைகளில் புதுச்சொற்கள் படைக்கப்பட்டன. பிரிட்டீஷ் அரசு விரிந்த காலத்தில் ஆங்கிலோ செக்சன் மொழியாகிய ஆங்கிலமும் இவ்வாறே பல புதிய சொற்களைக் கடன் கொண்டு விரிவு செய்யப்பட்டது.பழைய பிரித்தானிய மொழி நசுக்குண்டு இறந்தது.  ஆனால் தமிழ் அரசு மொழியாய் ஆன பண்டைக் காலத்தில் இத்தகைய வசதி தமிழுக்குக் கிடைக்கவில்லை.  அதனால் அது தனக்கு வேண்டிய சொற்களைத் தானே உண்டாக்கிக்கொண்டது. அது தனித்தன்மை உடைத்தாய் இருந்து செழித்ததற்கு அதுவே காரணம்.  இன்று ஆங்கிலச் சொற்கள் நமக்குக் கிட்டுதல்போல் அந்தப் பழங்காலத்தில் பிறமொழிச் சொற்கள் நம் முன்னோர்க்குக் கிடைக்கவில்லை. அதனால் அது  தம்> தம் இழ் > தமிழ் ஆனதென்பதுண்டு. தனித்தியங்கிய மொழி.  விரிந்த பொருளிலக்கணம் உடைய மொழியாய்த் தமிழ் பரிணமித்தது. தமிழர்கள் அடிக்கடி போரிலீடுபட்டமையால் வரையறைகள் பல உண்டாகி எப்படிப் போர்புரிவது, எப்படி அதைப் பாடுவது என்பவற்றுக்கெல்லாம் இலக்கணம் உண்டாயிற்று.

சாமான் என்ற சொல்,  சாதல், மானுதல் என்ற இரண்டு சொற்களாலான ஒன்றாகும்.  ஒரு விதை போலும் உயிருள்ள பொருள் காயவைத்துச் சற்று சிறிதாகி அதுபோன்ற  விதைகளுடன் மளிகைக் கடையில் எடைக்கணக்கில் விற்கப்படுகிறது.  இவற்றை மளிகைச் சாமான் என்று கூறுகிறோம்.  சா - உயிரற்ற , மான் - மானும் ( ஒக்கும் ) பொருளுடன் விற்கப்படுவது, சா என்பது ஏவல் வினை,  மான் என்பதும் ஏவல் வினை. இரண்டு ஏவல் வினைகளை இணைத்துப் புனையப்பட்ட சொல். அருமையான அமைபு ஆகும்.  இது ஜாமான் அன்று,  சாமான் என்பதுதான்.


இவற்றையும் உசாவி அறிக:-


https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_4.html  சாமான்

https://sivamaalaa.blogspot.com/2022/08/blog-post_3.html   சாதாரணம்

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post.html       சாமானியம்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் இடலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்


குறிப்புகள்:

வேண்டுதன்மை < வேண்டுதல்+ மை

கிடைப்பு <  (கிடைத்தல்)