பூசுரன் என்ற சொல்லை இப்போது கவனிப்போம்.
சொற்கள் சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்க உள்ளுறைவு உடையனவாய் உள. இவ்வாறான சொற்களை அங்ஙனமே பிரித்தறிதல் அறிவுடைமை. ஒரு பொருளையே வலியுறுத்தல் அறிவுகோடுதல் ஆகும்.
பூ + சுரன் என்றும் பிரிக்கக் கூடும், பூ - மலர். சுரன் = ஊற்றாகுபவன்.. நல்லோன். இதனை நற்குண நற்செய்கைகட்கு வெளிப்பாடாக இயல்பவன் என் க.
பூசு + உரு + அன் - பூசுரன், ஓர் உகரம் கெட்டது; இரண்டாம் உகரமும் கெட்டது; இவ்வாறு:
பூச் + உ , உர் + உ, அன் ஆண்பால் விகுதி.
பூ + சு+ ர + ன்
பூச்+ உர + ன்
பூசையின்போது சந்தனம் அல்லது வேறு பூசைக்குரிய அரைப்புகள் சிலைக்கு பூசப்படும் அல்லது அப்பப் படும், அதுபின் நீரினால் கழுவப்பட்டு, பூச்சுகள் விலக்கப்படும், இதைச் செய்வதால், பூசி உருக்கொடுப்பவர் என்னும் பொருளில் பூசுரர் என்னும் சொல் உருவானது, பின் இது வேறுவகைகளிலும் விளக்கப்பட்டது, பூசையின்போது பூசி உருக்கொடுப்பதே இச்சொல் எழக்காரணம் ஆகும், உருக்கொடுத்தல் சொல்லாலும் நடைபெறும்.
பூச்சால் உருக்கொடுத்தல், சொல்லால் அல்லது அருச்சனையால் உருக்கொடுத்தல் என உருக்கொடுத்தல் இருவகை.
தமிழென்பது வீட்டுமொழி. சமஸ்கிருதம் என்பது பூசைக்குரிய மொழி. பூசாரிகள் பயன்படுத்தியது. இந்தோ ஐரோப்பியமென்பது பிற்காலத்தில் வெள்ளைக்காரர்கள் இயைத்துகொண்டது ஆகும். ஆரியர் என்று பெயரிய வெளி இனத்தவர் யாருமிலர். ஆரியர் என்பது ஆர் என்ற மரியாதை விகுதி ( பன்மை விகுதி) பெறுந்தகைமை உடைய மதிக்கப்பட்ட உள்ளூரார். பனியால் வெளுத்த தோலர்கள் அல்லர். பழைய நூல்களைப் பாதுகாத்து வைத்திருந்த இலக்கியவாதிகள். இந்தக் காப்பியக்குடியினர் இல்லாமற் போனதால் பல நூல்கள் இறந்தன.
பூச்சொரிதல் என்ற சொற்றொடரையும் கருத்தில் கொள்வோம். சொரி + அர் = சொரர் > சுரர் என்றும் திரியும். இங்ஙனம் திரிந்த சொற்கள் பல. பழைய இடுகைகளைப் படித்து ஒரு பக்கத்துக்கு ஒருவகைத் திரிபாகப் பட்டியலிட்டுக் கொள்க. இவற்றுள் ஒலகம் '> உலகம் போன்ற பேச்சுத் திரிபுகளைபும் இட்டுக்கொள்ளுங்கள். கொடி - குடி என்ற சொற்களின் தொடர்பும் அறியற்பாலதே. நாளடைவில் திரிபுப் பட்டியல்களெல்லாம் விரைந்தினிது உங்கள்பால் தொழில்கேட்டு அடிமைகளாம். இப்போது நாம் பட்டியல்கள் பார்ப்பதில்லை. அவை காணாமற்போய்விட்டன.இவ்வளவு போதும். இவ்வாறு பூசுரர் என்பதற்கு வேறு திரிபுகளும் பொருந்த நிற்பன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.