நினைவுகள் மிடைந்தொரு மிதவையு மாகி
கடலினில் வருகின்றதே,
மனைதனில் நடமிடும் பொழுதினில் கேட்ட
குரலொலி தருகின்றதே!
மனிதர்கள் இலாஒரு நடுவணில் ஏகி
புனிதமெய் அலைமன்னுதே,
கனிதரும் சுவைபெறு இனியநீர் எழிலி
இணைந்துடன் ஒலிக்கின்றதே!
விழித்ததும் மறைந்தன
கனவு கனமாகும்,
பின் அது இலதாகும்.
காலை 4 மணிக்கு ஏற்பட்ட ஒரு கனவினை இது
வருணிக்கிறது.
மிடைந்து- இடையிடையே மாட்டிக்கொண்டு வந்து( இறுதியில் ஒரு மிதவை தெரிந்தது.)
மனைதனில் - வீட்டில்.
(குரல் மட்டும் கேட்டது).
நடுவண் - நடுவிலுள்ள இடம். நடுவணில் - நடுவிடத்தில்.
புனிதமெய் - இங்கு இறந்துவிட்டவர் உயிரானதுபோல் உடல்
அலைமன்னுதே - அலைகளிடையில் பொருந்தி வருதல்.
மழை நீர் நாவில் பட்டதுபோல் உணர, அது இனிக்கின்றது.
கனவுக்காட்சி நீங்கியது. இதில் என்னவென்றால், மிதவையில் வரவில்லை, மிதவையில் ஏற முயற்சி செய்யாமல் இவர் அலைகளில் பொருந்தியபடி வருகிறார்.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மழை இல்லாவிடின் கடலும் கூட தன் தன்மை கெட்டுவிடும், வறண்டு போகும், மீன் முதலிய உயிர்கள் வாழ்வுக்கு உதவாதது ஆகும்.