சனி, 24 ஜூன், 2023

அந்தகன் ( எமன்) என்ற சொல்

 "அந்தகன் வரும்போது அவனியில் யார்துணை"  என்று  பிறப்பு இறப்பு மறுபிறப்பு  பற்றிய ஆய்வுரைகளின்  பொழுது  பேச்சாளர் வினவுதலுண்டு.  அந்தகன் என்றால் எமன் என்பது  நீங்கள் அறிந்துவைத்துள்ளதே. அப்போது தெய்வத்தைச் சிந்திக்கவேண்டும்  என்பது பதிலாக வருவது.  நாம் அலச வேண்டியது இச்சொல்லின் அமைப்பினை.

முன் இதனை நேராக ஆய்வு செய்யவில்லை என்றாலும்,  தொடர்புடைய கருத்துகளை ஆய்வு செய்துள்ளோம்.  அவற்றுட் சில அடிக்குறிப்பாகக் கீழே தரப்பட்டுள்ளன.  நேரம் இருப்பின்  அவற்றையும் படித்தறிந்துகொள்க.

இன்று  அறுந்து  என்ற எச்சவினைச்சொல்லிலிருந்து புறப்படலாம்,

அறு என்ற வினையும்  அறுந்து என்ற எச்சமும் கூட  முடிவு என்ற பொருளையே குறிப்பனவாகும்.   முன் இடுகைகளில் பல எச்சங்கள் ஆங்காங்கு காட்டப்பட்டுள்ளன.  அவ்வாறு இங்கும் காட்டப்பெறும்.  

ஆண்டவன் என்ற சொல்லுக்கும் அவ்வாறு காட்டப்பெறும்.  ஆண்டு + அவன் என்பது ஆண்டவன் என்றாகும். ஆண்டு என்பது எச்சவினை,  இங்கு பெயரெச்சம் ஆகும்.  இவ்வாறன்றி  ஆள் + து+ அ + அன் என்றும்  வினைச்சொல்லிலிருந்தும் காட்டலாம்..  இவற்றுள் தெளிவுறுத்துவது எது என்று நாம்தாம் அறிந்துகொள்ள வேண்டும்.  எதனால் எது நன்கு  விளக்கமுறுகிறதோ அதையே பற்றிக்கொள்வதில்  வழுவொன்றும் இல்லை..

இதனால்,  அறுந்து என்பதை மேற்கொண்டு,   று என்ற எழுத்தை நீக்கிவிட்டால், அது அந்து என்று வந்துவிடும்.இலக்கணப்படி இது இடைக்குறை. தொகுப்பு எனினுமது.  அந்து + அகம் + அன் =  அந்தகன் ஆகிறது.  எமன் என்பவன் நமக்கு இறப்பு விளைவிப்பவன்.  இவன் நம் உள்ளிலே உலவுகின்றான்,  இவற்றை நாம் நோய்நுண்மிகள் என்றும், கிருமிகள் என்றும் கூறுகிறோம். இது அணிவகையாகச் சொல்லப்பெறுவது.   திரிபு:  கரு >கிரு.  கிருட்டினபட்சம்,  கறுத்த பாகம்  என்பது காண்க.  கரு >  கிரு> கிருமி என்பதும் அங்கனம் விளைந்த சொல்லே.

பிறப்பு என்பது அறும் தன்மை உடையது.   ஆகவே  அறு என்ற வினையினின்று புறப்படுதல் ஒரு சிறப்பை உடையது .  எமனும் உள்ளேயே உள்ளான்;  ஆதலின் அகம் + அன் > அகன் என்பதும் பொருட்சிறப்பு உடையதாகிறது.

பாலி,  சமத்கிருதம் முதலிய மொழிகளில் எச்சவினைகளிலிருந்து சொல்லாக்கம் காட்டுவர் புலவர். அதுபோலவே இங்கும் காட்டப்பெறுகிறது. இது எளிதிற் புரிவித்தல் என்னும் உத்தியாகும் என்பதறிக.   

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்


அடிக்குறிப்புகள்:

அந்தம் அன்று முதலிய:

https://sivamaalaa.blogspot.com/2021/08/blog-post_15.html


வியாழன், 22 ஜூன், 2023

சீனிவாசன், சீனிவாசகன் என்ற பெயர்கள்

 மலேசியா சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழ் தமிழரிடையே,  ஒரு சீன நண்பரைக் குறிக்க " சீனிவாசன் எங்கே போய்விட்டார்,  இன்னும் காணவில்லையே,"  என்று பேசிக்கொள்வதுண்டு. இத்தகைய உரையாடல் தமிழ்நாட்டில் நடைபெறுதற்கில்லை அல்லது அதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகும்.  எங்கும் பரவலாக இருப்பவன் சீனிவாசன் என்றால்,  அந்த வருணிப்பு அவர்களுக்கு மலேசியாவில் பொருந்துவதே.  அகரவரிசையில் குறிப்பிட்ட பொருளிலேதான் ஒரு சொல்லைப்  பயன்படுத்தவேண்டும் என்பதில்லை.  காளமேகம் போன்ற கருத்தாளர்கள் - புலவர்கள்,  வேண்டியவாறு பயன்படுத்திக்கொள்வர்.

சீனி என்பது ஓர் இனிப்பரி ஆகும்,  ஆதலின் இனிமையாகப் பேசுபவர்க்கு  அவர்தம் பேச்சுக்கள் இனிமையுடையவை என்ற பொருளில்  " சீனி வாசகர்"  என்றும் சொல்லலாம்.,  வாசகர் வேறு  வாசர் வேறு என்று பொருள்வேறுபாடு கண்டு,  சீனிவாசகர் என்பதை வேறுபடுத்திக் காட்டுதலும் கூடும்.  சீனி வாசகர் என்பது " மணிவாசகர் " என்பதுபோலும் சொல்லமைப்பு ஆகும்.

அடையாள அட்டைகளில் பெயர்கள் வேறுபட எழுதப்பட்டுள்ளன வென்பதும் யாமறிவதே.

இனிச் சீனிவாசன் என்பதன் பதிவுபெற்ற, வேறுபட்ட வடிவங்களின் பொருள் கண்டறிவோம்.

ஸ்ரீ  என்பது  திரு என்பதற்கு நேரான வடிவம்.  திரு> த்ரி> ஸ்த்ரி > ஸ்ரீ என்பதில் தொடர்பினை அறிந்துகொள்க.  வேங்கடம் என்பது  திருவேங்கடம் என்று அடைமொழி கொடுத்தும் விள்ளப்படுவதாகும்.  வேங்கடத்து இறைவன் போற்றிக்கொள்ளப்படுபவன் என்பதை இதனாலறியலாம்.

அடுத்து உள்ள சொல் நிவாசன் என்பது.    நி என்பது நித்தியத்தை அறிவுறுத்துவதாகும்.  நிலைபெற்ற தென்று பொருள். மாற்றமில்லாதது.  வாசன் என்பது எளிதான சொல்தான்.  வசிப்பவன் என்பது பொருள்.  எனினும் இதற்கு சற்று மாறுபட்ட பொருளும் உண்டு.  அஃதாவது,   இலக்குமி  வேங்கடத்துள்  வாழ்கிறாள் என்பது.  இந்தப் பொருள் வெளிப்பட,  அன் விகுதி இன்றிச் சொல்வதானால்,  அது பொருந்துவதாகும்.  சீனிவாசு,  (சீனிவாஸ்)  என்பது காண்க.

திருவேங்கடத்தில்,  திருவாக நிலையாக வாழ்பவன் என்று பொருளுரைக்குங்கால்,  இடக்குறிப்பினை வருவித்துக்கொள்ளவேண்டும்..  கடவுள் எங்கும் இருப்பவன் ஆதலின்,  அஃதின்றியும் உலகில் எங்கும் இருப்பவன் என்று விரித்துரைத்தலும் ஒப்பதே  ஆகும்.  உலகில் வேங்கடமும் உளது ஆதலின் இதில் பொருள்திரிபு ஒன்றுமில்லை.  எனினும்,  இடங்களில் சில உயர்வுடையவாகக் கருதுதல் மக்கள் வழக்கு ஆகும்.

வாஸ்  என்பது வாழ்  என்பதே  ஆதலின்,   நிலைத்த திரு வாழ்நன் (நிலைத்திருவாழ்நன் )   என்பது இதன் தனித்தமிழ்.ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


சனி, 17 ஜூன், 2023

விகாரம் பதம் என்பவை

 

விகாரம் என்ற பதம் தமிழ்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.

இதன்  முந்துவடிவம் :  மிகாரம் என்பது.

இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)

இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.

மிகுதல் என்பதன் பொருளாவன:

அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.

ஆர்தல் என்பதன் பொருளாவன:

நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.

மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.

எடுத்துக்காட்டு:  மிஞ்சுதல் -  விஞ்சுதல்.  மினவுதல் -  வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   வ>< ம.
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்;
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.

மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்.  விரட்டு என்றும் திரியும்.

மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்.  மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சி:  எழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொற்கள். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்.  எ-டு:  மயங்குவது >  ம(யங்குவ)து = மது.  இதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன. 
சிறப்படைந்த நிலை:  தப்பு + அம் >  தபு அம் >  தபம் > தவம்.  உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்.  தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனது,  பின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.

விபுலானந்தம் :  விழு புலம் ஆனந்தம்:   வி + புல + ஆனந்தம்;  இது விழுமிய அதாவது சிறப்பான;  புலம் -  புல.  மகர ஒற்று கெட்டது. நிலப்பகுதி அல்லது பாங்கு என்பது பொருள்.  சிறப்பான இடத்து ஆனந்தமாய் இருத்தல்.  இதில் விழுபுலம் என்பது விபுல என்று இரு கடைக்குறைகள் வர,  வருமொழியாகிய ஆனந்தம் இயல்பாய் நின்றது.

ஓரிரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டாலே படிப்போன் அல்லது கேட்போன் தடுமாறிவிடுவான்.

இந்தோனேசிய மொழியில் அபாங்  சொகர்னோ என்ற பெயர் புங் கர்னோ என்று சிறப்பெய்தியது காண்க.  முகம்மது சாலே என்ற பெயர் மாட்சாலே என வருதலும் கொள்க.  பிறகு வெள்ளைக்காரர்களுக்குப் பொதுப்பெயர் ஆனது.

இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்;  ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படலாயிற்று. பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.

வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.

வி + கு + ஆரம் என்றாலும்.  வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.

மிகுதி > விகுதி என்றாலும்,  வி + (கு) + தி =  விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.

மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் ,  மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்;  வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.

வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியது;  அது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.

cf MEng variance, variaunce, fr OFr  variance  Anglo-Latin variaunce, veriaunce, wariaunce; Latin variantia.

வேறு  >  வேற்று >  வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே >  வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.

வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்,  வி >வே.

எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?

விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.

பதி + அம் = பதம்:  பொருள் பதிந்தது; பொதிந்தது.

அறிவோம்; மகிழ்வோம்.