வியாழன், 8 டிசம்பர், 2022

மதுரம் என்ற சொல். அமைபு

அமைபு,  அமைப்பு வேறுபாடு:  

அமைப்பு என்ற சொல்லுக்கும்  அமைபு என்ற சொல்லுக்கும் வேறுபாடு உள்ளது. இது தெரியவில்லை என்றால் அதை அறிந்துகொள்ளுவது நன்று.  அமைபு என்ற இச்சொல்லில்,  தன்வினைக் கருத்து உள்ளது.   இதையும் அறிந்துகொள்ளுதல் இனிதேயாகும்.

மொழிநூலறிஞர் வேங்கடராஜ்லு ரெட்டியார், " தமிழ்ச்சொல்லமைபு" என்ற சொல்லாய்வு நூலை எழுதியுள்ளார். சுருக்கமாகச் சொல்வதானால்,  தமிழ்ச் சொற்கள் தாமே எவ்வாறு உருவெடுத்தன  என்பதைப் பற்றிய நூலே அவர் எழுதி வெளியிட்டது ஆகும்.  தமிழின் பல சொற்கள்,  மக்களின் பயன்பாட்டில் இயற்கையாக எழுந்தவை ஆகும்.  A similar incidence is the distinction  between Natural Law and Positive Law.

மதுரம்:

இன்று மதுரம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

மது என்ற சொல்லே " மயங்குவது"  அல்லது  " மயக்குவது" என்ற சொல்லுருக்களின் குறைச்சொல்லே  ஆகும்.  இவை இரண்டையும் குறைச்சொற்களாய்க் கருதாமல்,  பகுபதங்கள் ஆதலின், தொகைச்சொற்களாய்  ஆசிரியர் சிலர் காண்பர். இப்படிக் குறியீடுகள் செய்வதில் பயன் இருந்தால் அதுவும் நன்றே.  பயனில்லை என்பது எம் கருத்தன்று.  எத்தகு பயன் எங்கு என்பவற்றைப் பொறுத்து, இக்குறியீட்டை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

மது + உரு + அம் >  மதுரம்  ஆகும்.  அதாவது இச்சொல்லின் பொருண்மை யாதெனின்,  உண்மை மதுவாக இல்லாமல், மதுவைப்போன்ற ஓரின்பத்தை வருவிக்கும் பொருள் என்பதே  அர்த்தம் ஆகும்.  அப்பொருள் தரும் சுவையையும் இச்சொல் குறிக்குமாறு விரியும்.  இஃது ஒப்பீட்டு அமைவு ஆகும்.

மதுரம் என்ற சொல்லில் தகரம் இரட்டிக்கவில்லை. அதாவது " மத்துரம்" என்று வரவில்லை.  அப்படி வந்திருக்கவேண்டுமென்று கருதினாலும், அஃது பின் இடைக்குறைந்து மதுரம் என்றாவதனால், இந்த வாதத்தில் அத்துணைப் பயனில்லை என்று தள்ளுபடி செய்யவேண்டும். வலி இரட்டித்தல் முதலியவை சொல்லமைபில் முதன்மை உடையதன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


எச்சரிக்கை என்ற சொல் அமைதல்

 இருட்டு நேரத்தில் கலங்கள் அல்லது கப்பல்கள் கரைக்கு வருமானால், கரையில் எவ்விடத்தில் அணைய வேண்டும், அல்லது  அருகில் எங்கு நங்கூரம் இடவேண்டும் என்று கப்பலோட்டிக்குத் தெரியவேண்டும்.  மின் ஆற்றல் பெரிதும் இல்லாத காலத்தில்,  மின்விளக்கும் இதற்குப் பயன்படுத்தப் படவில்லை.  கரையில் ஓரிடத்தில் தீயை மூட்டி,  கப்பலோட்டி அறியும்படி எரித்தார்கள்.  கப்பலோட்டியும் கவனமுடன் வந்து கரையை அடைந்தான். 

எரித்து அறிக்கை செய்தபடியினால், அது எரித்த அறிக்கை ஆனது. பின் திரிந்து எரிச்ச  அறிக்கை > எச்சரிக்கை  என்றானது.

எரிச்சறிக்கை >  எச்சரிக்கை. ஆனது. ரிகரம் இடைக்குறை.  ஒரு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு எழுதிய ஒப்பந்த அறிக்கை,  முடிச்ச அறிக்கை >  முடிச்சரிக்கை > முச்சரிக்கை ஆனது போலுமாம்.

தொடக்கத்தில் "எச்சறிக்கை" என்று எழுதியவர்கள்,  அதன் வரலாறு உணராமையால்,  றி என்னுமெழுத்தை ரி ஆக்கிவிடினும்,  இது மொழியில் பயன்பாடு கண்டபின்,  இப்போது இதனை மாற்றுவதற்கில்லை. இது பிற்கால நூல்களில் கண்டவாறே எழுதவேண்டியுள்ளது.  இது திரிபு என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும், ஒரு முழுச்சொல்லின் பகுதியாய் வரும் றி,  தன் வன்மை இழந்து ரி என்று ஒலித்தமையும் காரணமாகலாம்.  அவ்வாறாயின் இத்திரிபு ஒலிநூல் முறைப்படி அமைந்தது கண்டு மகிழ்வெய்தலாம். எதற்கும் மகிழ்ந்திருப்பதே இப்பிறவியின் தலையாய நோக்கமாகலாம்.

இவை பன்மடித் திரிபுச் சொற்கள்.  இவற்றுள் அறிக்கை > அரிக்கை என்று மாறிற்று  என்பது  தலையாயது ஆகும்.

ஆரியர் என்ற சொல் அறிவாளிகள் எனற் பொருட்டு என்பர்.  இதிலும்  அறிந்தோர் என்ற றிகரம் திரிபில் (ர்) ரிகரம் ஆனதாகக் காட்சியுறுதல் காண்க. இவ்வாறுஎழும் திரிபுகள் பற்றி முன் உரைத்துள்ளோம்.

அறி > ஆர்  ( அறிவாளிகள் ஆர் விகுதி பெற்றனர்). இதன் தொடர்பற்றி விளக்கம் தேவைப்பட்டால், பின்னூட்டம் செய்க.

இவை பின் பொருள் விரிந்து எல்லாவித முன்னறிவிப்புக்கும் அல்லது எதையும் செய்யுமுன் கவனமில்லையேல் ஏற்படும் இடர்முன்னறிவுப்புக்கும் பயன்படுத்தப் பட்டன.

இவை பற்றி மேலும் சில விளக்கங்கள் உண்டு.  அவற்றை இங்கு எழுதவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

நச்சினார்க்கினியர் என்ற பெயர்.

 நத்தி உடன் வந்தவர் என்ற வாக்கியத்தில், நத்துதல் என்ற சொல்லுக்குப் பொருள் தமிழ் மொழி பேசுவோர்க்கு தெரியும் என்று உறுதியாகச் சொல்லலாம். தெரியாமல் இருப்பின்,  அல்லது கொஞ்சம் விளக்கம் வேண்டின், கீழ்வரும் இடுகைகளைப் படிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post.html

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_29.html

https://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_29.html  (நத்தை ).

இவற்றுள்  பல சொற்கள் விளக்கப்பட்டுள்ளன.

நச்சு-தல் என்னும் வினையும் காணப்படுகிறது.  யாரும் விரும்பினவனையே நத்திச் செல்வர்.  நச்சுதல் என்பதற்கும் விரும்புதல் என்ற பொருள் உள்ளது. ஒன்று மற்றொன்றன் திரிபு என்னலாம்.  நசைஇ என்ற அளபெழுந்த சொல்லும் உள்ளது.

எனவே,  நத்திச் சென்றவர்க்கும் விரும்பிச் சென்றவர்க்கும் ( நச்சுதல்- நச்சினவர்) இனியவர் என்பதே நச்சினார்க்கினியர் என்ற பெயர்க்குப் பொருள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்/