வியாழன், 3 நவம்பர், 2022

பொருள்--- சொல்லமைந்ததெப்படி?

 பொருள் என்னும் சொல்  ஒரு பகாப்பதம் அன்று.  இஃது ஒரு  தொழிற்பெயர் போல உள்விகுதி பெற்றமைந்த சொல்.  இதன் அடிச்சொல் பொரு  என்பதே. 

உள் என்னும் விகுதி பெற்றமைந்த சொற்கள் தமிழிற் பல. சில சொல்வோம்:  கடவுள்,  இயவுள்,  அருள்,  நருள், செய்யுள் ( செய் என்னும் வினைச்சொல் அடி), பையுள்,  ஆயுள் ( ஆ(தல்) )   உறையுள் எனக் காண்க.

வினைச்சொல்லும் விகுதி பெறும்;  அல்லாதனவும் விகுதி பெறும்.    அல்லாதன விகுதி பெறா  என்னும் விதி இலது  அறிக.

தமிழர் அணுகுண்டு என்னும் ஆயுதத்தைக் கண்டுபிடித்து எவன் தலையிலும் போடவில்லை என்றாலும்,   அணுவை அறிந்திருந்தனர்.   பொருட்களெல்லாம் அணுக்கள் இடையற  அணுக்கமாக  அடைந்து நின்று இயல்கின்றன என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.  அணுவியலைத் தனிக்கல்வியாக அவர்கள் வளர்க்கவில்லை போலும்,  எனினும் இதை அறுதியாய் உரைக்க இயல்வில்லை.  இதற்கான ஏடுகள் இருந்து அழிந்துமிருத்தல் கூடும். இருந்து, அடுத்து இலங்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுமிருத்தல் கூடும். நூல்கள் இலாமை யாது காரணம் என்று இற்றை நாளில் கூறவியலாது.

பொரு என்ற அதே அடிச்சொல்லில் பிறந்து  "பொருந்து" என்று வினையாய் அமைந்த சொல் நம்மிடை உள்ளது.  எல்லாப் பொருட்களும்,  தம்மில் தூள், தூசு, பகவுகள், அணுத்திரள்கள்,  அணுக்கள் என்பன  பொருந்தி நின்றதனால் அமைந்து உலகில் இலங்குபவையே  ஆகும்.  ஒரு பொருளாய் ஒன்று இலங்குதற்குக் காரணியாவது, இவ்வணுக்கள் பொருந்தி நின்றமையே  ஆகுமல்லால், மற்றொன்றில்லை. இதனின்று பொருந்தியமைவு எனற்பாலது நன்கு அறியப்படும்.

பொருவு என்ற வினை ( ஏவல் வினை)  பொரு என்ற அடியினெழுந்ததே  ஆகும். ஒத்தல்  நேர்தல் நிகழ்தல் என்ற பொருளில் இச்சொல் இன்னும்  உள்ளது.   பழம்பாட்டுகளில் இது வந்திருந்தாலும்,  இற்றை நாள் எழுதுவோர் பாடுவோரிடை இச்சொல் வழக்குப் பெற்றிலது என்று முடித்தலே சரியாகும். கம்பனிலிருந்து சின்னாள்காறும் இச்சொல் நிலவி வழங்கியிருத்தல் கூடும்.  உன்னைப்போன்ற அறிஞர் என்று சொல்ல விழைந்தோன்,  உன்னைப் பொருவு அறிவுடையோர் என்று கூறினாலும் பொருளதுவே ஆகும்.

புரைய என்ற உவம உருபு தொடர்புடையது.  புரைதல் வினை.  பொரு> புரை.

பொருவு+ உள் >  பொருவுள் என்றமையாமல்,  பொரு+ உள் >  பொரு+ (உ) ள்> பொருள் ஆகும்.    தேவையற்ற  உகரத்தை விட்டமைத்தனர்.   இதேபடி அமைந்த இன்னொரு சொல்:  அரு + உள் >  அருள்  ஆகும்.  இதில் உகரம் கெட்டது என்று இலக்கணபாணியிற் சொல்லலாம். இற்றை மொழியில்,  உகரம் களைந்தெறியப் பட்டது என்க.

தெர் > தெரி.

தெர் >  தெருள்.  (தெருள் மெய்ஞ்ஞான குருபரன் என்ற சொற்றொடர் காண்க)

தெரு என்பது போவார் வருவார் யாவும் தெரியச் செல்லும் பாதை. பிறபொருளும் கூறல் ஆகும்.

பொருள் என்பதே போலும் பொருளில்,    பொருக்கு என்ற சொல்லும் வழங்கும். பொருக்கற்றுப் போயிற்று என்றால்  பொருளில்லாமற் போயிற்று என்பதே. பொருக்கு என்பதில் கு விகுதி.  அடிச்சொல் பொரு என்பதாம். வழியிற் கிடக்கும் பொருக்குகளைப் பார்த்து விலகிச் செல் என்பதில் இது அமையும்.  காய்ந்த மண்ணுக்குப் பொருக்காங்கட்டி என்பதுண்டு. மண்ணாங்கட்டி என்பதும் அது.

தோல் காய்ந்து வெடித்தல்  பொருக்குவெடித்தல் என்று வழங்கும்.

பொருக்கு என்பது ருகரமிழந்து,  பொக்கு என்று குன்றும். இடைக்குறைக்கு நல்ல எடுத்துக்காட்டு.

பொருக்கு எனற்பாலது  இடைக்குறைந்து  பொருகு என்றாகி சோறு குறிக்கும்

பொருக்கு >  பொக்கு >  பக்கு:  இது சோறு முதலியவற்றின் அடிமண்டை.  ( அடியில் மண்டியிருப்பது  அல்லது உறைகுழைவு  )

இவற்றிலிருந்து பொருள் என்ற சொல்லின் திறம்கண்டீர்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

௳றுபார்வை செய்யப்பட்டது 13112022 0906

 

புதன், 2 நவம்பர், 2022

மதியமும் ( நிலவும்) காலக்கணக்கும்.

 மாதம் என்ற சொல்லின் பொருண்மையைப் பலவாறு ஆய்ந்துள்ளனர்.  காலத்தை அளவிடற்கு பண்டையர்க்கு ஓர் அளவை அல்லது "அளவுக் கருவி" இருந்ததென்றால்  அது நிலவு அல்லது நிலா எனப்படும் மதியமே  ஆகும்.  சைவ ஏடுகளில்  மதியம்  ( மாலை மதியம்)  என்ற சொல்லமைப்பு காணப்படுகிறது. காலத்தை மதிக்க அல்லது மதிப்பீடு செய்ய மனிதற்குக் கிட்டிய கருவி அதுவாம்.

அது புவிக்குத் தெரியாமல் இருக்கும் காலம் "அமாவாசை" எனப்படுகிறது. நிலவு இல்லாமற் போய்விட்டது என்று பண்டை மக்கள் நினைக்கவில்லை. அது இருளில் மூழ்கிவிட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அது இருட்டிடமாக மாறிவிட்டது,  ஆனால் நிலவு அங்குதான்* உள்ளது!  இந்த இடுகைகளைப் படித்து அறிந்துகொள்க.

https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

 https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html 

இதற்குப் பொருள்:  அந்தப் பெரிய இருள் இடம்,   அழகிய இருள்சூழ் இடம்.  அ(ம்) என்பது சுட்டாகவுமிருக்கலாம்,  அழகுப் பொருள் படுவதாகவும் இருக்கலாம், ஏன் இவ்வாறு இருவழியிற் சொல்கிறோம் என்றால்  இவை அச்சொற்களிலே காணப்படுவதால். மா என்ற சொல்லும் பெரிது என்றும் பொருள்தரலாம்.  இருள் என்றும் பொருள்தரலாம்.  அளவு என்றும் பொருள்தரலாம். மாதம் என்ற சொல்லில் மா என்பது அளவு,  பேரளவு என்று பொருள்தரும்.  அமாவாசை என்ற சொல்,  கவிதைக்கு உரிய சொல்லாக கையாளப்படவில்லை. இதை "அம்மா வாசெ" என்றே சிற்றூரார்  ஒலித்தனர் என்று தெரிகிறது.  அமா~ என்று ஒலிப்பது பிற்காலத்தில் வந்த திருத்தம்.

அமாவாசை என்பதில் இடையில் தோன்றும் மா என்ற சொல்லும்,  மாதம் என்பதில் முதலில் வரும் மா என்ற சொல்லும்,   அளவுச் சொற்களே.  நிலக்கணக்கிலும் " மா"  என்பது "ஒரு மா நிலம் "என்று அளவே குறித்தது.  மாத்திரை என்ற சொல்லிலும் " மா" என்பது அளவுதான்.  மா என்பது பல்பொருள் ஒருசொல்.  பெருமை என்று பொருள்தரும் " மானம் " என்ற சொல்லும் அளவு, மதிப்பீடு என்பவை குறிக்கும் சொல்லே.   மதிப்பு என்ற சொல்லிலும் மதி என்பதிலும் மதி என்பது அளவு, அளவிடுதல் என்னும் பொருளதே.

மா - மதிப்பு.  மாமன் - மதிக்கப்படுபவன்,  மாமா.  பெரியோன்.

மாகக்கல் -  கானகத்தில் கிடைத்த ஒரு கனிமக்கல்.

மாக்கடு -  போற்றப்பட்ட ஒரு கடுக்காய் வகை.

மேஷர் ,  மீட்டர் என்ற பலவற்றிலும் அளவு உள்ளது.  அவற்றை இங்கு விட்டுவிடுகிறோம்.

எல்லாம் மகர வருக்கச் சொற்கள்.

மதித்தல் என்பதே இவற்றுக்கெல்லாம் உறவுச்சொல். வினைச்சொல்.

மதி -  வினைச்சொல்.  ஏவல் வினை.

மதி+ அம் =  மாதம்.  [  முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல்.]

எடுத்துக்காட்டு:  சுடுதல் , வினைச்சொல். verb.  சுடு> சூடு ( முதனிலைத் திரிபு), சூடு> சூடம்> சூடன்.  காம்ஃபர் என்னும் எரிக்கத் தகுந்த வெண்பொருள்.  அம், அன் விகுதிகள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

*அங்குத்தான் - not favoured.  வலிமிகல்

ஒரு திருத்தம்: 3.11.2022 11.17

சனி, 29 அக்டோபர், 2022

கோயிற் பூசைகளில் உள்ள நடைமுறைகள்:

2018ல் நடந்த மகாசிவராத்திரி தொடர்பான விளக்கம்: 

சிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஓர் இராத்திரி வருகிறது. இதை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறோம். கடந்த காலத்தில் திருமதி வனஜா அம்மையார் பற்றர் சிலருடன் சேர்ந்துகொண்டு இக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி  முழுமையையும் எடுத்துச் சிறப்புகள் செய்ததுண்டு. இவர்தம் குழுவிற்குத் துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள் என்று கோவில் அருச்சகர்கள் பெயர் தந்திருந்தனர். இக்குழு ஒரு நாற்பத்தைந்தாண்டுகள் பல இறைவணக்க விழாக்களிலும் பங்கு பற்றியுள்ளது. இதை இறையன்பர்கள் பலர் அறிவர்.

2218 ஆண்டு வாக்கில் இதற்கான கோயில் கட்டணம்  ( சிவராத்திரிப் பகுதிப் பூசை)   ஆயிர சிங்கப்பூர் வெள்ளிகளைத் தாண்டிற்று. இதைக் கீழ்க்கண்ட படத்திற்  காணலாம்.



20.3.2018 கோயில் கட்டணம் செலுத்தியது.

மலர்கள், மலர்மாலைகள், அம்மன் சிவன் அலங்காரங்கள்,  பிரசாதம், அன்னதானம். கோவிற் கட்டிட அலங்காரம், வரிசை எடுக்கும் பொருள்கள், எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும் நாம் செலவு செய்யவேண்டும். இவையும் இன்னபிறவும் கோவில் செய்வதில்லை. இது எல்லோருக்கும் தெரிவதில்லை.  நாமும் சொல்வதில்லை. நன்றி வணக்கம்.

ஐயர்கள் மந்திரம் சொல்ல மட்டும் $1450 போல் செலவு.  அன்றைத் தினம் கோயிலில் எப்போதும் வேலை செய்யும் ஐயர்கள் பற்றாமையால்,  வேறு கூடுதல் ஐயர்களும் தேவைப்படும்.  இதையும் கோயில் சமாளிக்கவேண்டும். சம்பளம் இல்லாமல் யாரும் வேலை செய்வதில்லை.  கோயில் சம்பளமே போதாமையால்,  ஐயர்களுக்குப் பூசைகள் முடிந்தபின்,  தட்சிணை ( $100 - 150), மேள தாளக்காரர்களுக்குத் தட்சிணை, சிப்பந்திகட்குத் தட்சிணை,  வேட்டி - துண்டுகள், பூசைப் பலகாரங்கள் என்று பலவுண்டு.

பூசைகள் செய்யப்போய் செலவுகள் தாங்காமல் ஓடிப்போனவர்களும் உண்டு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:

விமரிசை -  https://sivamaalaa.blogspot.com/2015/08/blog-post_11.html  ( விம்மி -  மிகுந்து;  இசைதல் -  இயைதல், பொருந்துதல்.   வீங்கிள வேனிலும் - (திருமுறைகளில் உள்ள பதப்பயன்பாடு). விம்முதல் - பெருகுதல்..