காலுக்குத் துளைபோடும் வியாதியொன் றுண்டென்றால்
அதுதானே இனிப்பு நீராம்;
காலிலும் துளையுண்டு; நெஞ்சுக்கும் அடைப்புண்டு;
மூளைக்கும் வெடுப்பு முண்டாம்;
தோலையும் பாலையாய், விழியையும் இரவாக்கி,
பல்லீறும் குடைந்து சேதம்;
வாலைமுதல் ஈதெல்லாம் வழிமாறிச் செலவாழ்ந்த
வண்புகழர் எண்விர லாலே.
இது எழுசீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்தப் பா. இனிப்பு நீர் நோயினால் வருந்துவோர் பல்வேறு தொல்லைகளை எதிர்கொள்கின்றனர். இறுதியில் வாழ்க்கையும் முடிந்துவிடுகின்றது. உடலின் ஒவ்வொரு பகுதியும் வருத்தம் தருகின்றது. இவற்றை எல்லாம் அடக்கியாண்டு வாழவேண்டியுளது. இதைக் கூறுவதே இப்பாடல்.
இனிப்புநீர் - நீரிழிவு என்றும் பெயர். " டயபீடிஸ்"
தோலைப் பாலை ஆக்குதல் - தோலை முடியில்லாமல் ஆக்கி நீர்ப்பசை வற்றவைத்துச் சிறங்கு முதலியன உண்டாக்கி இறுதியில் சீழ்த்துளை ஏற்படுத்துதல்.
காலில் வரும் " காங்க்ரீன்"
நெஞ்சுக்கு அடைப்பு - இரத்தக் குழாய் குறுகிமூடல்.
விழியை இரவாக்கி - கண்களைக் குருடாக்கி.
குடைவு - பல்லீறில் ஏற்படும் பைத்துளைகள், - பல்லுக்கும் ஈறுக்கும் இடையில் ஏற்படும் இடைத்தோடுகள்.
வழிமாறி - நோய் தன்னைத் தாக்காமல் வேறு வழியில் போவது
வாலை - இளம்பருவம்
எண் - எண்ணிக்கை. விரலாலே: விரலால் எண்ணிவிடலாம்.
ஈதெல்லாம்:
ஈது - இது ஒருமை; எல்லாம் - பன்மை. இவ்வாறு ஒருமை பன்மை மயக்கமாக ( கலப்பாகவும்) சொல்வது மரபு. "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்" என்ற தொடரில், பல முறை கொடுத்தாலும், கொடுத்தல் ஒன்றே செய்தார் என்ற ஒருமைச் செயலால், ஒருமை பன்மைக் கலப்பாகச் சொல்வது சரியாகும். ஆக்கியது எல்லாம் ( பரிபாடல், 6.57). இன்னும் பல உள. ( இதை யாரும் கேட்கவில்லை, உங்கள் சிந்தனைக்குச் சொல்கிறோம்.) பல தொல்லைகள் என்றாலும் ஒரே நோய் விளைத்தது என்பது கருத்து.
கல்லா உலக நூல் ஓதுவது எல்லாம் ( நாலடியார் 140) என்பதுமது.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்பது குறள். 596.
மின்னுவ தெல்லாம் பொன்னல்ல (பழமொழி)
சொடுக்கி வாசிக்க:-
வியாதி ( சொல்விளக்கம்): https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_14.html
சேதம் : (" " " ) https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_10.html
குடைந்து சேதம் - இங்கு வலி மிகாது (புணரியல்).
படம்: