வியாழன், 8 செப்டம்பர், 2022

வினாயகர் அருள்.

அருள்வினை    ஆயகரால்  ஆவனநற்  பேறாய்,

இருள்தீர இவ்வுலக வாழ்க்கை --- தெருள்மிளிர,

எவ்வா  றெனினுமே ஒவ்வாமை ஓடிவிடும்

வௌவாது நாவாய்  அலை.


இவ்வெண்பா எளிமையாகவே உள்ளது
வினை ஆயகர் என்று பிரித்துச் சொன்னது, அதுதான் அவர்தம் வானுலகத் தொழில் என்பது உணரவைத்தற்கு..  அவரே  வினாயகர்.  அவர்தம் அருளால் ஒவ்வாமை உணவிலாயினும் பிறவற்றிலாயினும் மாறிவிடும்.
வௌவாது என்றது :  கடல் அலையும் உங்களைக் கவிழ்க்காது என்றபடி. நாவாய் --- கப்பல்.   இது கடப்பல் என்ற சொல்லின் இடைக்குறை. விளக்கம் இங்குக் காண்க:  https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_8.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.

பார்வை:  10092022




அ 

ஓணம் பண்டிகை வாழ்த்து

 ஓணத்தின் திருவமைந்த  உயர்ந்தநன் னாள்தன்னில்,

காணத்தண் மகிழ்வினிய  கனியுடனே ஈரெட்டாய்

ஊணயின்றே அடைதுவைந்த குழைவுடனே உட்கொண்டு

மாணியன்ற கலந்துறவில் தாமகிழும்  கேரளமே.


ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.


பொருள்:

தண் -  குளிர்ந்த

கனி -  வாழைப்பழம்  முதலியவை

ஈரெட்டாய் -  16 வகை பக்கணங்களுடன் ( பட்சணங்களுடன்)

சோற்றுக்குப் பக்கத்தில் வைக்கும் கறிகள்

பக்கணம் :  பகு+ அணம்.   பட்சணம் திரிபு.

பகுத்த கறிகள் எனினுமாம்

ஊண் அயின்று =  சோறு சாப்பிட்டு

அடைதுவைந்த குழைவு -  அடைப்பிரதமம் என்னும் பாயசம்

மாணியன்ற -  பெருமிதம் தருகின்ற



திங்கள், 5 செப்டம்பர், 2022

பாலை வனம்

பாலை என்ற சொல்  தமிழ்மொழியில் தொன்மைதொட்டு வழங்கிவரும் சொல்லாகும்.  பிற்காலத்தில் அது நீண்டு " பாலை வனம் " என்று வழங்கிற்று. பாலை என்பது மிக்க வன்மை உடைய இடமாகும். முதலில் வனம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்று தெரிந்துகொள்வோம்.

சங்கம் இயங்கிவந்த காலத்துத் தமிழை நோக்க,  பிற்காலத்தில் தமிழில் சொற்கள் நீண்டுவிட்டன.  இதைத் தெரிந்துகொள்ள, இக்காலத்தில் உள்ள தமிழ்ச் சொற்களில்  ஒரு பத்தினை எடுத்து, இச்சொற்கள் சங்க இலக்கியத்தில் எவ்வாறு வந்துள்ளன என்று பட்டியலிட்டு அந்தப் பட்டியலை மனனம் செய்துகொள்ளுங்கள். செய்யவே சொற்கள் நீண்டன என்பது தெரியலாகும். இவ்வாறின்றி வெறும் கருதுகோள்களை உண்டாக்கிக்கொள்ளலாகாது.

[மனம் > மனன் ( போலிச்சொல்)  , மனன்  + அம் >  மனனம்.

அம் விகுதி அமைத்தல் என்ற வினையின் அடிச்சொல்.   எ-டு:  அறு+ அம்= அறம்- அறன் என்பதுபோல.  ஆகவே, மனத்தினுள் அமைத்துக்கொள்ளுதல் என்பது சொல்லமைப்புப் பொருள்.பாராயணம் என்பதும் அது.  ]

பாராயணம் >   பாராமை + அணம் >  பாராயணம்.

பாராமல் ஒரு நூலிலிருப்பதை அணவுதல் என்போம் .  அணவுதல், அணாவுதல் என்பன, நூலை நெருங்குதல் (   நூற்பொருளைச் சொல்லுதல்).

பழங்காலத்தில் நூல் என்றால் அது காகிதக்கட்டினைக் குறிக்கவில்லை.  மனத்தினுள் அமைந்திருந்த நூற்பொருளைக் குறித்தது.  நூலை எழுதிவைத்தல் என்பது பிற்கால வழக்கு.  

ஒரு காலத்தில் நூல்களின் எண்ணிக்கை பெருகி,  படிப்பதற்கு அதிகம் என்று மாணவன் சலித்துக்கொள்ளுமளவுக்குச் சென்றதனால், வாத்தியார் கேட்கமாட்டார் என்று அறிந்தகொண்டதை மாணவன் மனப்பாடம்  செய்யாமல்  விட்டுவிட்டான். இப்படியே பலவற்றை விட்டவன்,  நூலறிவில் சற்று மட்டமாகிவிடுவான்.  இதையறிந்த ஔவைப் பாட்டி, "நூல் பல கல்" என்று அறிவுறுத்தினார்.  இக்காலத்தில் (ஒளவை வாழ்ந்தபோது)  நூல்கள் பல இருந்தன. ஆகவே தமிழில் நூல்கள் மிக்கிருந்தன என்று முடிவு செய்கிறோம்.  ஆனால் எல்லாம் ஓலைகளில் நினைவுகளில்  இருந்தன. இப்போதுபோல இல்லாமல் கடைகள் குறைவு.  எந்தப் பண்டிதரையாவது நாடிப் போய் தட்சிணை ( தக்கிணை,  தக்க இணை)  கொடுத்துத்தான் நூலைப் பெற்று வந்து படிக்கவேண்டும்.  ஆகவே நூல்பல கல் என்றால் பலவாறும் முயன்றே படிக்கவேண்டும் என்று பொருள். குழாயைத் திறந்தவுடன் தண்ணீர் கிடைக்கும் காலமன்று அது. நூலை நாமே பார்த்து எழுதிக்கொள்ளவேண்டியிருக்கும்.  இன்றேல் மனனம்  அல்லது பாராயணம் செய்துகொள்ளவேண்டும்.   ஆகவே  நூல் உங்கள் மனத்தினுள் இருந்தது என்றும் பொருள். ஆசிரியனிடம் கெஞ்சிக் கூத்தாடி நூலை உங்கள் மனத்தினுள் கொண்டுவரப் பாராயணம் முழுக்க முழுக்க வேண்டிய ஒன்றாம். அப்படி வளர்ந்த மொழிதான் தமிழ்.

இப்போது வனம் என்ற சொல்:

வனம், வனாந்தரம் என்பன காடு என்ற பொருளிலும் வரும்.  பிற:  காடு,  சோலை,  இடுகாடு, என்பன.  கம்பரில் தண்ணீர் என்ற பொருளிலும் வருகிறது.

வன்மைப் பொருள் எவ்வாறு பொருந்துகிறது என்று காண்போம்.

திரிபு:  வல் > வன்>  வனம்.

லகரம் 0னகரம் ஆகும்.

இனி,  வன்மை + அம் >  வன்+ அம் > வனம்.

தமிழாசிரியர் இவ்வாறு காட்டவிடினும்,  லகரம் புணர்ச்சியிலும் அல்லாதவிடத்தும் வன் என்று  திரிதலை உடையது. இப்போது னகர ஒற்றில் முடியும் சொற்கள் பல, பழந்தமிழில் லகர ஒற்றில் முடிந்தவை.  இத்தகு லகர னகரத் திரிபு,  மொழிப்பொதுமை உடையது. (  Not language specific).

இன்னொரு காட்டு:    கல் > கன் > கனம்.

கல்லின் தன்மை கனமாய் இருப்பது.

வன்மைப் பொருளிற் போந்த வனம் என்னும் சொல்,  பின்பு பிற பொருள்களிலும் தாவி வழங்கியது.  எ-டு: வனம் >  வனப்பு.

கவர்ச்சியிலும் வன்மை மென்மை உள்ளபடியினால்,  வலிமைக் கருத்திலிருந்து அழகுப் பொருள் தோன்றுவதாயிற்று.  அழகரசி ஆகிவிட்ட பெண்,  மக்களிடை ஓர் வலிமை வாய்ந்த இடத்தை அடைந்துவிடுதலைக் காண்கிறோம்.  இவ்வாறு பிற பொருள் வளர்ச்சிகளையும் உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

We made some changes to the text but the original came back, We do not know why. Anyway the post is still readable.  Thank you readers.