செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

கால்நடைகள் பொருள்.

 விலங்குகள் எனப்படும் உயிரினங்கட்கு,  இந்தப் பெயர் வரக் காரணம்,  இவை மனிதர்கள் என்போரிலிருந்து வேறுபட எண்ணப்பட்டமைதான்.  விலகு -  விலங்கு என்று சொல் அமைந்தது.  இவை விலக்கி எண்ணப்பட்டவை. இதைப்போல் அமைந்த இன்னொரு சொல்:

ஒழுகு  ( வினைச்சொல், ஏவல்வினை)  ,   > ஒழுங்கு.

இதுபோலவே:

விலகு  >  விலங்கு.

இனியும் ஒரு சொல் வேண்டின்:

வினைச்சொல்:   அணுகு,  அணை.  ( ~ (த்)தல் )

ஆண்மகனை வல்லந்தமாக அணுகி, அணைத்து ஆட்கொள்ளும் ஒரு பேய்.

அண் ( அணுகு, அணை)   >  அணுகு >  அணங்கு  அல்லது:

அண்> அண்+ அம் + கு >  அணங்கு.

இச்சொல்லின் அடிப்படைக் கருத்து  அடுத்துவரல் :  அண்முதல்,  அணுகுதல், அணைத்தல்.

இண் என்ற அடிச்சொல்லிலிருந்து இணங்கு வந்தமை அறிக.

அண் என்ற படர்க்கை அடிச்சொல்லும் இண் என்ற சேய்மை அடிச்சொல்லும் ஒப்பிடுக.

விலங்கு என்பது ஊர்வனவற்றையும் குறிக்கும்.

ஆனால், கால்நடை என்பது நடப்பனவற்றை மட்டுமே குறிக்கும்.   மாடு,  மனிதனை இழுத்துச் செல்லுதல் மட்டுமின்றி,  சாமான்களையும்  முதுகிலோ வண்டியிலோ கொண்டுசெல்லும் வேலையையும் செய்கிறது.  ஆனால் மாடு, அது தனக்கு இத்தகைய வசதியைக் கேட்பதில்லை, யாரும் அதற்குக் கொடுப்பதும் இல்லை. சில இடங்களில் அறுப்புக் கொட்டகைக்குக் கொண்டு செல்லும்போது மட்டும் அது  தொலைவாக இருந்தால் பளுவுந்தில் வைத்துக் கொண்டுபோவார்கள்.  விரைவில் அதன் உயிரை எடுப்பதற்குதான்.  மனிதனுக்குச் செல்வத்தை வாரி வழங்கினாலும் மாட்டுக்கு மற்றும் ஆட்டுக்கு வாகன வசதியில்லை.  ஆகவே கால்நடை என்பது சிற்றூரார் அதற்கிட்ட சிந்தனை பெயர் என்று சொல்லவேண்டும்

கால் +  நட + ஐ >  கால்நடை.

மனிதனோடு ஒப்பிடுகையில் தன் வாழ்நாள்  முழும்மைக்கும் நடைப்பயணமே செய்யும்  --- இறுதியில் தன் உயிரையும் ஈந்துவிடும் விலங்குக்கு அது பெயராக வருவதால் அஃது ஆகுபெயர்.  வினைப்பெயர் வடிவிலிருந்து ஓர் உயிருள்ள பொருளைக் குறித்தது காண்க.

கால்நடை என்பது தமிழ்,  ஒரு பேச்சுவழக்குச் சொல். ஆடு, மாடுகளைக் குறிக்கும். புலி, சிங்கம், கரடி முதலியவையும் காலால் நடப்பன , (ஓடுவன) என்ற போதும்,  இச்சொல் விரித்துப் பொருள்கொள்ளப்படாமையால், இதைக் காரண இடுகுறிப் பெயர் என்ப. நாற்காலி என்பது நாலுகால் உள்ள குதிரை யானைகளைக் குறித்தல் இன்மை காண்க.

இவ்வாறு கண்டுகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.






`


திங்கள், 1 ஆகஸ்ட், 2022

யாதவர்கள் மற்றும் முடியாதவர்கள்.

 யாதவர் என்னும் சொல், முல்லை நில மக்களைக் குறிக்கும். வேறு தொழில்கள் எவற்றையும் மேவாத நிலையில்,  பெரும்பாலும் கால்நடைகளை இவர்கள் வளர்த்து,  அவற்றின் பால் தயிர் முதலியவற்றை விற்று  ஓகோவென்று வாழ்ந்தனர்.  இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நிலையில்,  மாடு என்ற சொல்லுக்கே  செல்வம் என்ற பொருள் ஏற்படலாயிற்று.

மேலே சொல்லப்பட்டவை தமிழ் ஆர்வலர்கள் யாவரும் நன்கறிந்தவையே.

யாம் சொல்லவிழைந்தது பின்வரும் இரட்டுறலே ஆகும்:

முடியாதவர்  -  இது எதுவும் செய்ய இயலாமல் ஒருவேளை உடற்குறையும் உள்ளவர்  என்னும் பொருள்.

முடி+ யாதவர்:  அதாவது மன்னனாய் முடிசூட்டிக்கொண்டவர்(கள்).  மணிமுடி தரித்தவர்கள்.  ஆனால் யாதவ குலத்தினர் என்பதுதான்.

முடியுடைமை என்பது கண்ணபிரானால் மெய்ப்பிக்கப்பட்டது.  மாடு என்னும் விலங்கு, என்றும் மனிதருடன் சேர்ந்திருந்து,  பால் முதலியன மனிதர்க்குத் தந்து, அவர்தம் வாழ்வினை மேம்படுத்தியது. அதன் வாழ்விடமும் மனிதர்தம் வீட்டின் அருகிலே இருக்கும். மடுத்தல் - சேர்ந்திருத்தல். மடு என்ற வினைச்சொல், முதனிலை "ம" நீண்டு, மாடு என்று தொழிற்பெயராகும்.  அதாவது ஒரு வினைச்சொல்லிலிருந்து பிறந்த பெயர்ச்சொல்.  இஃது படு என்ற வினையினின்று பாடு என்ற வினைப்பெயர் அமைந்தது போலாகும். மா என்பது பெரிது என்ற பொருளையும்,  அம்மா என்ற சொல்லின் இறுதியையும் குறிக்கும்.  அதன் ஒலியும் அம்மா, மா என்றே வருகிறது.  இது பல் பொருத்தம் உடையது ஆகும்.  மா என்பது மனிதனிலிருந்து விலகி நிற்றலை உடையதாயினும்  மடு> மாடு எனச் சேர்ந்திருத்தலையும் உடையது. செல்வமும் ஆகும் என்பது உணர்க.  தான் புல்லை மட்டும் உண்டாலும் மனிதனுக்குச் செல்வமனைத்தும் தந்தது மாடு.  இஃது அளப்பரிய ஈகையாகும்

யாதவர் பற்றி மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_23.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.ச்

செவ்வாய் சீர்தரும்.....

 தீஞ்சுவை மேவும் திங்கட் கிழமை 

தென்றலினிமை தந்திட வந்தபின்,

சீர்பல மேவும் செவ்வாய்க் கிழமை

பார்புகழ்ந்   திடவே பக்கலில் வந்தது,

வருக வருகவே வண்புகழ்ச் செவ்வாய்!

பெருகி ஓடுக பேரியற்  றமிழே!

சொல்லா விரைவுடன் எல்லா நலமும்

உள்ளார் குடும்பத்தில் உறைந்து மகிழ்தர

யாவரும் சிறந்திடக் காவலம் மிளிர்ந்திடும்.

மேவரும் கனிச்சுவை நாவலர் இசைக்க.

வாழ்க அன்பர்கள் வாழ்க வையமே.


பக்கல் -  பக்கத்தில்

வண்புகழ் -  வளமான புகழ், பெரும் புகழ்.

பேரியற்றமிழ்  -- பெருமைக்குரிய இயற்றமிழ்

சொல்லா விரைவு  -- உணர்ந்து சொல்லுமுன் வரும் விரைவு.

மகிழ்தர -  மகிழ்ச்சி தர

கா வலம் -  காக்கும் வலிமை

மேவரும் -   வருவதற்கு அரிய.  எப்போதும் கிடைக்காத

நாவலர் இசைக்க -  பெரும்புலவர்கள் பாட.