ஞாயிறு, 19 ஜூன், 2022

போய் என்பதிலிருந்து வோயேஜ்.

 இன்று வோயேஜ்  (voyage)  என்ற ஆங்கிலச்சொல்லைக் கவனிப்போம்.  நல்லபடியாகச் சென்றுவருக என்பதற்கு "Bon voyage"  என்பது சென்ற நூற்றாண்டில் பெரும்பாலார்க்கு அறிமுகமான ஒரு தொடர்.  "உன் செலவு ( பிரயாணம்) நல்லபடி அமைக"  என்பதே  இதன் பொருள்.  இத்தொடர் இன்று அவ்வளவாக வழக்கில் இல்லை.

நாம் கவனிப்பது வோயேஜ் என்பது மட்டுமே,

போய் வாருங்கள் என்பதிலே,  வாருங்கள் என்பது முதன்மையான ஒரு கருத்து. எல்லாம் நல்லபடியாய் இருக்குமானால் போகிற நபர் ( ந(ண்)பர் )  வந்துவிடுவார்.  சங்க காலம் போன்ற முற்காலங்களில்,  தொலைதேசங்களுக்குப் போகிறவர், பெரும்பாலும் திரும்புவதில்லை.  அவர்களின் ஆயுளும் இடையில் முடிந்துவிடுவது உண்மை.  கப்பல் வானவூர்தி தொடர்வண்டிகள் முதலியன வருமுன்,  போகிறவன் (பயணம்)  போய்விடுவதே பெரும்பான்மை. பக்குடுக்கையார் நளந்தா  சென்றதை அறிவோம்.  திரும்பிவந்தாரா என்று தெரியவில்லை. இராமபிரான் தென்னாடு வந்து சென்றது, ஒரே நெடும்பயணம். 

வோயேஜ் என்ற சொல்,  "போய்" என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து உருவான சொல். 

பகரம்  வகரமாகும் ( திரிபு).  இது பலமொழிகளில் ஏற்படும் திரிபுவகை.

போய் >   வோய்  voy.

பயணம் என்பது ஓரிடத்துக்குப் போவதுதான்.

வோய் என்பதுடன் ஏஜ் என்ற விகுதியை இணைத்துவிட்டால்  வோயேஜ் என்ற சொல் கிட்டுகிறது.

எச்சவினைகளையும் வினைப்பகுதி போல் கொண்டு,  அவற்றிலிருந்து வேறு சொற்கள் தோன்றினவாகப் பாலி,  சமத்கிருத மொழிகளில் காட்டுதல் உண்டு.

ஆகவே இது முன்வாழ்ந்த பண்டிதர் காட்டியவற்றோடு ஒத்துச்செல்வதாகும்.

ஆனால் இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள்,  வொயேஜ் என்பது  வயா என்ற இலத்தீனிலிருந்து வந்ததாகக் காட்டுவர்.  இதுவும் தொடர்புடையதே ஆயினும் ஒரு சுற்றிவளைப்பே ஆகும்.  ஆனால் தவறன்று.   வயா என்பது தமிழ் வழி என்பதிலிருந்து போந்ததாகும்.

இந்தத் திரிபு:  ழ- ய.  ழகரத்தைச் சரியாக ஒலிக்க இயலாதோர் பயன்படுத்துவது. 

வாழைப்பழம் -    வாயப்பயம்

வழி > வயி > வயா via.

போய் என்ற வினை எச்சம் நேரடிப் பிறப்பிப்பு என்பதுணர்க.

வாய் என்ற சொல்லுக்கு  வழி என்ற பொருளும் உள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.  

மறுபார்வை , திருத்தம்: 21072022  0901

நோய்க்கு நல்ல பானம். மருந்துகள் ?

 கொழுந்துநீரைக்  குடிக்கலாமே  குணமுண்டு கூறுவர்காண்

குளம்பிநீரும்  குடித்திடலாம்  குறையதனால்  இலைகாண்பீர்!

எழுந்துநட  மாடுதற்கோ  இயன்றிடாத நிலைவரினோ

சிறந்ததெனச்  செவிகொள்வது பசும்பாலே பிறிதுளதோ?.


பொருள்.-----  கொழுந்துநீர்  -  இது தேநீர். இதைக் குடிக்கலாம், இதிலும் குணமுண்டு என்று கூறும் மக்களும் நூல்களும் உள்ளன.  அதெபோல் குளம்பிநீர் என்னும் காபியைக் குடிக்கலாம், குறையொன்றும் ஏற்படாது என்போரும் உள்ளனர்.  ஆனால் மூப்பினால்  எழுந்து நடமாட முடியாத நிலையில் நாம் செவி வாயிலாய் அறிவது பசும்பால் நல்லது என்பது, வேறு குடிநீர் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

குடும்பத்துக்குப் பசுமையைத் தருவதனால்  பசு  -  பசு.  மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனார் விளக்கியுள்ளது காண்க,






படம்:  அன்பர் ஒருவர் கொழுந்துநீர்  அருந்துகிறார்,  அது நல்ல தேறல்தான். எதற்கும் மருத்துவரை நாடி  ஆலோசனை பெறுங்கள்.


இன்றுபோல பின்னாளில்  நன்றுபல மருந்துகளும்

மன்றுமனைமருதகங்கள் எங்கெனினும் கிடைத்திடவே

வென்றநிலை உலகினிலே  விலகாது நிலவிடுக.

சென்றிடுக போர்கலகம்  சீரமைதி  உலகினிலே..


பொருள்.------  இன்று மருந்துகளும் பிறபொருள்கள் போல எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இது ஒரு வெற்றிபெற்ற நிலை என்று சொல்லலாம்.  பொருட்பகிர்வு என்று வரும்போது  மக்களுக்குப் பொருட்கள் சென்று சேராத நிலையை வென்றநிலை இதுவாகும்.  இது உலகில் தொடரவேண்டும். பயன்பாட்டுப் பொருள் பகிர்வுத்திட்டங்கள், உலகத்தில் தொடரவேண்டும். அதற்குத் தடைகளே நாம் ஏற்படுத்தக் கூடாது.  போர், கலகம் முதலியவை  உலகை  விட்டு நீங்கவேண்டும்.  உலக அமைதி முதன்மையாகும்.( Maintain supply chain ).



மருந்து அடுக்கும் பலகை


மருந்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பலகைவரிசை.

எதை உட்கொள்வதால் நோய் வருகிறது என்று உணர்ந்து கொள்வதை முதன்மையாகக் கருதினாலும், நோய் வந்த பின் மருந்துகள் உண்டு அந்நோய்களை விலக்கிக் கொள்வதும் முதன்மையானதே.  மருந்துகள் கிடைப்பதையும் உறுதி செய்க என்பது கருத்து.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.





வெள்ளி, 17 ஜூன், 2022

ராங்கி என்பதன் மூலம்

 ராங்கி என்பது பேச்சு வழக்கில்  (புழக்கத்தில்)  உள்ள சொல். இது தமிழன்று என்று சிலர் கூறுவாராயினர்.

ஏறத்தாழ இதே ஒலியுடன் இயல்வது ஓர் ஆங்கிலச் சொல். அது rank  என்பது. ஒலியொற்றுமை காரணமாக, இச்சொல் ஆங்கிலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று சிலர் கருதினர். ஆங்கிலச்சொல் செர்மானியச் சொல்லான *hringaz  என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆங்கில ஆய்வாளர்கள் கருதினர்.  அவர்கள் காட்டும் மூலச் சொல்லுக்கு  வளைவு "curved"  என்பது அடிப்படைப் பொருள் என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.  ஆயினும் இஃது பொருத்தமாகத் தெரியவில்லை.   இதற்குப் படிநிலை  (மதிப்பில்  ஏற்ற இறக்கம் ) என்ற வழக்கு(பயன்பாட்டு) ப் பொருள்  1809ல்  வந்து சேர்ந்ததாகக் கூறுவர்.    இதுவும் வெள்ளையர்கள் இந்தியாவில் நன்கு வேரூன்றிய பின்னர்  ஏற்பட்டது  என்று அவர்கள் சொல்கிறார்கள்.  இதில் உள்ளநிலை என்னவென்றால்   இதைக் "கண்டுபிடித்தோர்" தமிழறிவு இல்லாதோர்.  தமிழில்  அவர்கள் தேடிப்பார்க்கவில்லை.  . எலியைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்தாலும், அதைப் பிடிக்கும் வேலையில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. எங்கும் தேடிப் பார்க்கவேண்டும். இல்லையேல் எலி தப்பிவிடும். 

அரங்கு என்பது தமிழில் உயர்நிலை, ஏற்றமான இடம் என்று பொருள்தரும். இதன் ஆண்பால் வடிவம் :  அரங்கன் என்பது.  ஆகவே பெண்பால் அரங்கி என்பதுதான். அரங்கி என்பது பால்பாகுபாடற்ற சொல்லாகவும் கூடும்.

அரங்கில் பேசுவார், பாடுவோர் முதலானவர்கள்,  பெரிதும் மதிக்கப்படுவோர் ஆவர்.  அரங்கில் நிற்போர்,  அரங்கிகள் ஆவர்.  இதனின்று " ராங்கி" என்ற சொல் வந்தது. இதை ஐரோப்பியர் எடுத்துச்சென்று அவர்கள் மொழியில் பரப்பிக்கொண்டனர் என்பது தெளிவு.  ராங்கி என்றால் அரங்கில் நின்று  தாழ இருப்போனுடன் தொடர்பு கொள்ளுதல்  போன்று நடந்துகொள்வது. 

அரங்கி என்பதே ராங்கி என்று திரிந்தது. எனவே ராங்கி என்பது நிரம்ப - ரொம்ப என்பதுபோல் தலையிழந்த சொல்.  இவ்வாறு தலையிழந்த இன்னொரு சொல்:

அரண் உடையவள் >  அரண் இ >அரணி >   ராணி  ,  பெரும்பாலும் அரசு உடையோரே ராணிகள்.

தானே கட்டிய அரணுக்குள் புகுந்துகொண்டு பாதுகாப்புத் தேடிக்கொண்டவனும் கடவுள், வலியோன் ஆகியோர்முன் பாதுகாப்புத் தேடி அரண் (சரண்) புகுந்தோனும் சரணாகதி அடைந்தோனும் என பல்வேறு வேறுபாடுகளையும் விளக்கவேண்டியுள்ளது. இதை நேரமுள்ளபோது எடுத்துக்கூறுவோம்.  ராணி என்பது அதிகம் வழங்க, தமிழ்நாட்டில் ஏன் ராணா என்பது அவ்வளவாக வழங்கவில்லை என்பதற்குக் காரணமும் உண்டு. இவை பின். இணைந்திருங்கள்.

ராணி:

இது தமிழே ஆகும்.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்

சில திருத்தங்கள் செய்யப்பட்டன. சில சேர்க்கப்பட்டன. 


0015 20062022