செவ்வாய், 7 ஜூன், 2022

சுத்தம் என்ற சொல் கவியில்.

 தரையில் எதுவும் கிடக்காமல்

தகுந்த படிநீ  சுத்தம் செய்!

உரக்கப் பெரிதாய்ப் பேசிநலம்

உடலில் உனதென் றெண்ணாதே,

இரவும் பகலும் நீயறியா

ஈளை நுண்மிகள் பிற பரவும்

கரவில் வளர்நோய்க் குற்றுயிரே

குறுமி கிருமி  ஆனதம்மே!


ஈளை - சளித்தொடர்புடைய ஒரு நோய்.

நுண்மி - கிருமி

பிற - ஈளை அன்றி மற்றவை

கரவில் - மறைவாக

குற்றுயிர் -  மிகச்சிறிய உயிர்வகை. நுண்ணுயிர் - அதனினும் சிறியது.

கண்ணுக்குத் தெரியாத சிறுமை உள்ள உயிர்.

நுண்மையும் குறுமையும் பொருள்தளர்ச்சியாகப் பயன்படுத்தப் பட்ட சொற்கள்.


சுத்தம் --  தூய்மை.  இச்சொல்லின் தோற்றம் இவ்வாறு:

https://sivamaalaa.blogspot.com/2014/04/words-of-cleanliness.html

இனி,  இன்னொரு வகையிலும் இதுவே முடிபு:

உ  -  முன்னிருப்பது;   உது :  உகரத்துடன் ஒன்றன்பால் விகுதி சேர்ந்த சொல். முன்னுள்ள பொருள். இதற்கிணையான சொற்கள்:   அது,  இது, எது, உது.

அது > அத்து.

இதுபோல்  உது > உத்து.

அத்துச் சாரியை,  அது என்பதன் இரட்டிப்புதான்.

உது > உத்து > உத்தம் > சுத்தம்.

அகர வருக்க எழுத்துகள் சகர வருக்கமாய்த் திரியும்.

உத்தமர் என்பதும் இதனடியில் தோன்றியதே.


சுத்தம் என்ற சொல், மேலை இந்தோ ஐரோப்பியத்திலும் இல்லை.

கிருமி என்பது குறுமி  ( குற்றுயிர், சிறியது ).  கிருமி :  கருமி, (கரியது) மற்றும் குறுமி .  இச்சொல் இருபிறப்பிச் சொல்.



கிரு :  கரு என்பது கிரு என்று திரியும்.

எடுத்துக்காட்டு:  கரு>  கிரு> கிருஷ்ண  ( கிருஷ்ண பக்கம்)

கரு > கரி > கரிசல். (கரிசு+ அல்)

கருசணவிய பக்கம் >  கிருஷ்ண......

நிலவின் ஒளியில்லாத பக்கம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


இலாடம் மற்றும் எதிர்மறை அமைப்புச் சொற்கள்.

 இன்று லாடம் என்ற சொல்லை ஆய்ந்து  அது தோன்றிடம் ( தோற்றுவாய்) அறிவோம்.  ( தோற்று  - தோன்றும்  ,  வாய் -  இடம் ).

இது மிக்க எளிதான சொல்தான்.

செருப்பு  ஒரு பக்கமாகத் தேய்ந்து  அப்புறம்  நாம் நடப்பதற்கு ஒத்து வராமல் வழுக்குதல், வீழ்தல் முதலிய தொல்லைகளை உண்டுபண்ணும்.  லாடம் என்னும் ஒட்டுறுப்பை அடித்துப் பொருத்தி,  இந்தத் தொல்லையை ஒருவாறு நீக்கிவிடலாம்.  

இக்காலங்களில் செருப்புகள் தொழிற்சாலைகளில் செய்து முன் தயாரிப்பாகக் கிடைத்தலால்,  லாடம் முதலியவை அடித்துச் செருப்பைச் செப்பம் செய்யத்தேவையில்லை. புதியவை வாங்கிப் போட்டுக்கொள்ளலாம். ஊர்க்காவலர் படை, போர்ப்படை முதலியவற்றில் பணிபுரிவோரே இப்போது இலாடங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என்று அறிகிறோம்.

மேலும் இப்போது காலணிகள் பெரும்பாலும் தேய்வையால் ( ரப்பர்)  ஆனவை. இலாடங்கள் இவற்றுக்கு உதவ மாட்டா.

சமதரையில் செருப்பு  ஆடுதலின்றி இருக்கவேண்டும்.  இந்த ஆடுதல் கருத்தினின்றே இலாடம் என்ற சொல் அமைந்துள்ளது.

இல்   ஆடு  அம் >  இலாடம் > லாடம்.

செருப்பு ஆடாமல் காக்கும் இரும்புப் பட்டையாணி.

இது முறைமாற்று அமைப்புச் சொல்.

ஆடு + இல் + அம்  >  ஆடிலம் என்று அமைந்திருந்தால்  இயல்பமைவு எனலாம். அமைத்தவர்கள் இது நன்றாக இல்லை என்று நினைத்துத் திருப்பிப் போட்டு அமைத்துள்ளனர்.  இந்த முறையைப் பிற்காலத்தில் பின்பற்றியுள்ளமை தெரிகிறது.  

இதுபோல் முறைமாற்றாக அமைந்த இன்னொரு சொல்:  இலாகா.

பொருள்:  நிறுவாகக் காப்பு இல்லம்.

இல் +  ஆ + கா.

( இல்லம்  ஆகும்  காப்பதற்கு)  காப்பதற்கு ஆகும் இல்லம்.

சில சொற்கள் எதிர்மறையாக அமைந்தவை:

இன்னல  ( பொருள் நேற்று ).   " இன்று அல்ல"  இன்னு அல  இது மலையாள மொழிச்சொல்.

இதுபோல் எதிர்மறையாக வரும் தமிழ்ச்சொல்:

அன்னியன் ( அல் நீ அன்).  நீ அல்லாத பிறன் அல்லது உனக்கு உறவு அற்றவன்,

தீபகற்பம்.   ( தீவகம் அல் பு அம் ).  வ- ப போலி.

அல்  ( அல்ல) என்பது இதில் எதிர்மறை.

பழங்காலச் சொல்:  அல்,(  பகல் அல்லாத நேரம்.)

அல்லி  ( இரவில் அல்லாமல் மலராதது)

உன்னைப்போல் பிறனை நேசி என்ற வாக்கியத்தில், நீ அல்லாத யாவரும்  பிறன் என்றே கொண்டனர்.  உறவு ஒரு பொருட்டன்று. 


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்




சனி, 4 ஜூன், 2022

இறக்கும்போதும் உமக்காகத் துடிக்கும் நாயின் இதயம்.

 

நேரிசை வெண்பா


அன்பினோர்    ஊற்றாக வாழ்ந்தே,   உயிர்விட்டால்

அன்புக்  கெனநின்ற  நாய்தனை ---- தன்பக்கல்

என்றும்நீக் காதீர் இதயம் உமக்கன்றோ 

கொன்றும் துடிக்கும்  அது.


அன்பினோர் -  அன்பின் ஓர்;   உயிர்விட்டால் - இறக்கும்போதும்; 

அன்புக் கென நின்ற =  உயிர் இருக்கும்போதும் உமக்காக;  அது 

போம்போதும் உமக்காக என்பது;   தன் பக்கல் -  தன் பக்கத்திலே; ( தன் பக்கத்திலிருந்து )

எந்தக் காலத்திலும்;   நீக்காதீர் - உம்  அரவணைப்பிலிருந்து விலக்காதீர்

என்பது;    இதயம் உமக்கன்றோ  -  அதன் இதயம் முழுமையும்

உமக்கு என்பதில் ஐயமில்லை;   கொன்றும் துடிக்கும் அது -   நீர் அதைக்

கொன்றாலும் அதன் இறுதித் துடிப்பு உமக்காகத்தான்.

உமக்கன்றோ என்பதை இருபுறமும் இணைத்துப் பொருள் கொள்க. இச்

சொற்றொடர் " நடுநாயகம் ". ( இருபக்கம்  மாட்டும்படி நட்டு 

நயக்கப்படுவது).  

நடுநின்ற  " நாயகம்".   நய அகம் - நயமுடைய உட்பகுதி. அல்லது நயக்கப்பட்ட ~.

Pl click: செய்தி.

https://theindependent.sg/shiba-inu-loyal-dog-runs-8km-back-home-after-owner-gives-him-up-due-to-asthma/

..................At one point, it appeared that Saisai was crying, so Zhao gently caressed his head and told him not to cry. She, too, sniffled at the end of the video......................


நம்  வலைபூவின் ஆதரவாளர் திருமதி ரெதி  அவர்களின் நாய்,  நோய்வாய்ப் பட்டு இறக்கும் தறுவாயில் செய்திவர,  விலங்கு நோய்மனைக்கு ஓடினார்,  இன்னும் இறக்கவில்லை, போய்ப் பாருங்கள் என்றனர்  மருத்துவர்கள். அருகே சென்று ரெ பெயர்சொல்லிக் கூப்பிட, தலையைத் தூக்கி  அது அவரைப் பார்த்துவிட்டு தலையைக் கீழே போட்டுவிட்டு ஒரு பெருமூச்சு விட்டது.  தலையை மீண்டும் தூக்க இயலாமல் இன்னொரு மூச்சுடன் நின்றுவிட்டது.   என்னே கொடுமை.

இவ்வாறெல்லாம் அன்புகாட்டும் நாயை  நாய் என்பதே தவறு. அதுதான் உண்மை இதயக்கனி.