செவ்வாய், 22 மார்ச், 2022

அழகும் அழகின்மையும்


 

அழகற்ற பொருள்மேலோர் ஒளிசென்றி ணைந்தால்

அதுதானும் அழகொன்று பெறலாகும் மிளிரும்;

அழகுள்ள பொருளென்னில் அழகோடும் அழகே,

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ஐயம்

இழையாது மயக்கற்ற தலைதன்னில் கண்டாய்.

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்

பிழையென்று சொல்வார்தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே தம்பீ


இது எண்சீர் விருத்தம். பொருள் வருமாறு:

அழகற்ற பொருள்மேலோர்  ஒளிசென்றி ணைந்தால்  --   ஆழகில்லாத பொருள் ஒன்றின் மேல், ஒளிசென்று விழும்போது,

அதுதானும் அழகொன்று பெறலாகும்  -  அவ்வழகு குன்றிய பொருள் அழகைப் பெற்றுவிடுகிறது;  மிளிரும்; --- அதுவும் ஒளிவீசத் தொடங்கிவிடுகிறது.

அழகுள்ள பொருளென்னில்  - அழகான பொருள்மேல் ஒளி சென்று படியுங்கால், அழகோடும் அழகே,  --  அங்கு அழகோடு அழகு சேர்ந்து மிகுந்த அழகு உண்டாகிறது;

அதுமகுடம் மேலொன்று மகுடம்தான் ---  இவ்வாறு அழகுடன் அழகு இணைவது ஒரு மகுடத்தின்மேல் இன்னொரு மகுடம் வைத்தது போன்றது;  ( இரண்டடுக்கு மகுடம்.)

ஐயம் இழையாது =  சந்தேகம் ஏற்படா நிலையில்; 

மயக்கற்ற தலைதன்னில்---  தலை மயக்கம் இல்லாமல்  

கண்டாய். -இதைக் கண்டுகொள்வாய்; (ஐயமும் அஃது இன்மையும் தலைக்குள் உள்ள மூளையில் உண்டாவதால். "தலை தன்னில்" எனப்பட்டது.)

இதுவழகே இதுவன்றே எனச்சொல்வ தெல்லாம்--  இதுதான் அழகு,  இது அழகல்ல (அழகன்று)  என்று சொல்வதெல்லாம்; 

பிழையென்று சொல்வார்---  ஒருவிதப் பிழை என்று கூறுவாரும் உளர்; தம் கருத்தன்றிக்  காணும்

பின்னொன்றே இல்லென்றே கொள்வாரே --  ஒருவரின் அபிப்பிராயம் என்ற முடிபும் உள்ளது, 

தம்பீ  - விளி.

படத்தில் அழகற்ற பொருள்கள் என்று கருதப்படுபவை விளக்கொளியில் மின்னுகின்றன,

அறிக மகிழ்க.

மெய்ப்பில் பிழை காணப்படவில்லை.  எனினும்
மீள்பார்வை செய்யப்படும்.



திங்கள், 21 மார்ச், 2022

நல்லெண்ணம் போர்களைத் தவிர்க்கும்.

 பங்காளிச் சண்டைகள் நடக்கின்ற  போது

பக்கத்தில் உள்ளாரும்  படுகுத்தல் செய்வார்.

எங்கேனும் இப்புவியில் எதனாலோ ஓடும்

இதுபோலும் செய்கைகள் நமக்காகும் பாடம்!

மங்காத நல்லெண்ணம் மயக்கற்ற மூளை

மாநிலத்து நாடுகளில் நிலைகொள்ளும் நாளில்

தங்காது  பேரழிவு தடைகொள்ளும் தீமை

தாரணியும் ஓரணியில் சீர்பெறவே காண்பீர்.


பங்காளி - முன் ஒன்றாயிருந்து பிரிந்தோர்

படுகுத்தல் -  சண்டையைப் பெரிதாக்குதல்.

ஓடும் - நிகழும்

தாரணி - பூமி.

மயக்கற்ற - தெளிவான

ஞாயிறு, 20 மார்ச், 2022

"பத்திரமாகப் போ" என்றால் என்ன?

 பத்திரம் என்றாலே  "  இலை " என்றுதான் பொருள்.  இப்பொருளில் பழைய நூல்களில் இச்சொல் வந்துள்ளது.  ஆனால் வழக்காற்றில் (  பயன்பாட்டில் ) பத்திரமாக என்றால் கவனமாக என்று பொருள்கொள்ளல் சரி.  எழுதி வாங்கிய ஒரு பத்திரம் காணாமற் போவதென்பது தொல்லை பல விளைக்குமாதலால், கவனம் தேவை என்பது முன்னாளிலே உணரப்பட்ட ஒன்றாம்.  ஆகவே " பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்றால், ஒரு பத்திரத்தை எவ்வாறு கவனமுடன் கையாள்வாயோ அவ்வாறே கவனம் கொள் என்பது பொருளென்பது சொல்லிவிளக்க வேண்டாதது என்று கூறலாம்.

இலை என்ற பொருள் இச்சொல்லுக்கு எவ்வாறு ஏற்பட்டதென்பதை நாம் விளக்கியுள்ளோம்.

இவற்றை நீங்கள் வாசித்தறிதல்  பொருள்விளக்கம் தரும்:

பத்திரம் :   https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_56.html

பத்திரம் - ஓலை:   https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_21.html

பாதுகாப்பு என்ற பொருள் ( பல சொற்கள் )  https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_23.html

பட்டை  என்பது மரப்பட்டை. இதிலிருந்து நமக்குப் பட்டையம் என்ற சொல் கிடைக்கிறது.

ஓர் இலைக்கொத்து என்பதை இணுக்கு என்போம்.

பத்திரம் என்பது பற்றி இருத்தலினால் ஏற்பட்ட பெயரென்பது விளக்கப்பட்டது.

எனவே பத்திரமாக இரு என்றால் இருந்ததுபோலவே பற்றிக்கொண்டு இரு, பற்றுதலை விட்டுவிடாதே என்றும் விரித்துணரத்தக்க சொல் ஆகும்.

பல்திறம் என்ற சொல்லும் புணர்ச்சியில் பற்றிறம் என்று திரியும்.   "பற்றிறமாக" இரு எனின், பல திறங்களோடும் இரு என்று பொருள்படும்.  இப்பொருளிலும் இவ்வெழுத்துக்களோடும் இச்சொல்லை இன்னும் எதிர்கொள்ளவில்லை.  வந்துழிக் காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.