சனி, 29 ஜனவரி, 2022

ஆர் விகுதி ---ஆரியர்

 அது தமிழில்லை, இது தமிழில்லை என்ற வாதம் உண்டாதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், வெள்ளைக்கார வரலாற்றாசிரியன்  உருவாக்கிய "ஆரியர் இந்தியா வருகை"  மற்றும் "ஆரியப் படையெடுப்பு"  முதலிய தெரிவியல்களே   (theories) ஆகும்.  இந்தியத் துணைக்கண்டத்தின்மேல் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன,  ஆனால் அவற்றிலெவையும்  ஆரியர் என்போரால் நடைபெறவில்லை.  மேலும் ஆரியர் என்ற பெயருக்குரிய மனிதர்கள் யாருமில்லை.

ஆர் என்பது ஒரு விகுதி.  வந்தார், போனார், இருந்தார் என்பவற்றில் ஆர் வந்துள்ளன.  அகத்தியனார், தொல்காப்பியனார் என்று ஆர் என்ற வணங்குரிமை பெற்ற அறிவாளிகள் பெயரிலும் ஆர் வருகின்றது.  மற்றும் ஆர்தல் என்ற வினைச்சொல் உள்ள மொழி, தமிழ் ஆகும்.  ஆகவே நம்மொழியில் அது  விகுதியுமாகிறது. வினையுமாகிறது.  அரு > ஆர், கரு> கார், வரு > வார். தரு>தார் எனப்பல சொற்களில் முதலெழுத்து நீண்டு ரகர ஒற்றில் சொற்கள் முடிகின்றன.  அரு என்றால் மிகுதியாய் இல்லாதது என்று பொருள். ஆளுக்கு ஆள் அகத்தியனாரைப் போல இருந்துவிட்டால் அவர்களுக்கு ஆர் என்ற பெயர் இறுதிப் பட்டம் இருக்கமுடியாது. அரியன செய்தனர்,  செயற்கரிய செய்தனர், அதனாலேதான் "ஆர்" என்ற இறுதிகொடுத்துச் சொல்லாக்கம் செய்கிறோம்.  வரலாற்றால் அரியராக எப்போதோ தோன்றுகிறார்.  அவர்தான் "ஆர்" என்ற ஒட்டுக்கு உரியவர்.  அரு> ஆர் என்ற திரிபையும் மறக்காதீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


வெள்ளி, 28 ஜனவரி, 2022

முட்டையும் முட்டாளும்

 வகுப்பில் பாடத்தை நன்றாக ஒப்பிக்கவில்லை என்றால், அவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவனுக்கு "முட்டை" கிடைத்ததாகக் கேலி செய்தல் இன்றும்   உள்ளது. இத்தகு பயன்பாடு எல்லா இன மாணவர்களிடமும் காணப்படுவ  தொன்றாம்  (சீனர், மலாய்க்காரர், இந்தியர் என). ஆகவே இவ்வாறு கருதுவது உலக வழக்கு என்னலாம்.  எப்போதும் இவ்வாறு "முட்டைகளை" வாங்கும் மாணவனை,  முட்டாள் என்றும் கூறுவதுண்டு.

ஆனால் இவ்விரண்டு சொற்களும் முட்டு என்ற சொல்லிலிருந்தே  வருகின்றன.

முட்டு + ஆள் = முட்டாள்.

இஃது இரண்டு சொற்கள் ஒன்றாகிப் புனைந்த சொல்.

முட்டு + ஐ = முட்டை.  (வட்டமாக இல்லாமல் ஒரு பக்கம் முட்டிக்கொண்டிருப்பது).

இங்கும் முட்டு என்றே சொல்லே நின்றது என்றாலும் சொல்லமைப்புப் பொருளில் தொடர்பு வழக்கிலிருந்து வருகின்றது.

ஆகவே  முட்டை வாங்கியவன் முட்டாள் என்று சொன்னால்  அது ஒத்துக்கொள்ளத் தக்கதே ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு - பின்

வியாழன், 27 ஜனவரி, 2022

மாத்திரம் என்ற சொல்.

 மாத்திரம் என்ற சொல்லும் தமிழ்ப்புலவோரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத சொல்லாய்ச் சிலகாலம் இலக்கிய உலகில் வலம்வந்த சொல்லாகும். தமிழில் இதுவரை கிடைத்துள்ள பழைய நூல்களில் இச்சொல் அருகியே வழங்கியுள்ளதென்று தெரிகிறது.  கலித்தொகை என்ற பழைய நூலில் "முயங்கு மாத்திரம் " என்று இந்தச் சொல் வந்துள்ளது.

மேலும் சிற்றூர்களிலும் " மாத்திரம்" வரைவிலாத வழக்குடையதாய் உள்ளது. ஊர்களில் உள்ளோர்  ஐரோப்பாக் கண்டத்துக்குத் தொடர்பு இல்லாதவ  ரென்பதால், மாத்திரம் தமிழன்று என்றபால வாதினை ஏற்றல் இயல்வில்லை.

சமத்கிருதம் என்பது மேல்நாட்டிலிருந்து வந்தது என்பதை ஏற்பதற்கில்லை. அது இந்திய மொழியே ஆகும்.  தமிழரே உரோமாபுரிக்குச் சென்று தமிழ் மற்றும் சங்கதச் சொற்களை இலத்தீன் மொழியமைப்புக்குத் தந்துதவினர். இவ்வாறு ஒரு வரலாற்றாய்வு கூறுகிறது.  ( மயிலை சீனி வேங்கடசாமி ). மேலும் மிகப் பழங்காலத்தே மேலை நாடுகளில் சென்று குடியேறியுள்ளனர். அவர்கள் மெசொபோட்டேமியாவிலும் வாழ்ந்தனர்.  அந்தச் சொல் அமைந்த விதத்தை இங்குக் கூறியுள்ளோம்:

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_16.html

இனி, வால்மிகி ஒரு சங்கதக்கவி, அவர் தமிழிலும் பாடியுள்ளார்.  வான்மிகி என்பது வானின் மிக்கவர் என்று பொருள்தரும் தமிழ்ச்சொல்.  வியாசன் தமிழ்மீனவவழியினன்.  பாணினி ஒரு பாண குலத்து இலக்கண அறிஞன்.  இவர்களிலெவரும் பூசாரி வழியினர் அல்லர். 

சமத்கிருதம் என்பதன் பழைய் பெயர் சந்தாசா ( சந்த அசை).  சந்தம் நல்கும் அசைகளை உடைய இந்நாட்டு மொழி.

திர் என்ற அடியிலிருந்தே  திரள் முதலிய சொற்கள் வருகின்றன. திறம் என்பது செயல்திரட்சி குறிக்கும் சொல்.  திரம் என்பது  பொதுவாகத் திரட்சி குறிக்கும் சொல்.  திர்> திர அம் > திரம்,  திர+அள் > திரள். இவற்றுடன் உறவுடைய சொற்கள் பலவாகும்.

இவற்றை மேலும் அறிய விரும்பினால் பின்னூட்டம் இடுங்கள்.

மா என்பது அளவு என்று பொருள்தரும் சொல்.  திரம் என்பது திரட்சி குறிக்கும் பின்னொட்டு.

மாத்திரம் என்பது திரண்ட அளவு என்பதன்றி வேறன்று.

இதுகாறும் சுருங்கக் கூறியவற்றால், மாத்திரம் என்பது தமிழென்பது தெளிவு.

" இம்மாஞ்சோறு என்னால் முடிக்க முடியாது" என்ற வாக்கியத்தில் மா  ( இம்மா) என்பது இவ்வளவு என்றே பொருள்படும். "எம்மாம் பெரிசா இருந்தாலும் தூக்கீடுவான்"  என்பதில் எம்மா என்பது எவ்வளவு என்று பொருள்தரும். இதுபோல்வன பிறவும் அன்ன.  மா என்பது பெரிது என்றும் பொருள்படும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.