புதன், 5 ஜனவரி, 2022

இந்திரனும் ஐந்திரமும் ஒரு விளக்கம்.

 ஐந்திரம் என்பதைப் பலவகையாகப் பகுத்து ஆய்வாளர் என்று சொல்லப்படுவோர் தங்கள் கருத்துக்களை வைத்துள்ளனர்.  ஐ+ திரம் = ஐந்திரம் என்றும்,  திரம்> திறம் என்ற போலியின் காரணமாக, ஐந்திறம் <> ஐந்திரம் என்றும் கருத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்திரன் என்பவன், இருந்த ஐந்துக்கும் ஆட்சியாளன். இருந்த ஐந்து என்பவை, நிலம் தீ ,வளி விசும்பு, நீர் என்பவை.  இவையே ஐந்திரம் எனப்பட்டன.

ஐந்து + இரு + அம் -  ஐந்திரம் ஆகும்.

ஐந்திரம் என்ற சொல்லே பின் இந்திரன் என்று திரிந்து வழங்கியது.  இந்த ஐந்தையும் இயக்கும் இயற்கை ஆற்றல் அல்லது அவற்றினை ஆளும் பேரான்ம ஆற்றலை  ஆண்பாலில் குறிக்கும் சொல்லாகிவிட்டது.

ஐந்திரு+ அம் என்று பிரித்தால்,  திறம் >< திரம் என்ற மாறுபாட்டில் விளையும் மயக்கம் இராது.  ஐ+ திரு+ அம் அல்லது ஐந்து + இரு+ அம் என்ற இரண்டும் புணர்வில் ஒரு முடிபு கொள்ளுமென்பது அறிக.  திரு என்பதைத் தெய்வ ஆற்றலென்றும் இரு எனின் உள்ளிருக்கும் ஆற்றலென்றும் பொருண்மை கொள்ள இதனால் இயலும்.

இருந்த இருக்கின்ற ஐந்தையும் ஆள்பவன், இவன் தேவனாக உணரப்பட்டவன். விண்ணையும் கடலையும் ஆள்பவன் நாராயணன்.  இவன் உண்மையில் நீரின் அம்சம் அல்லது அமைப்பு.  இவனும் ஒரு தேவன்.  இவன் நீராயினன் என்றிருந்த பெயர் மாறி நாராயணன் என்று அறியப்பட்டான்.  இவன் நிறம் கருமை. வானும் கடலும் கருமை ( நீலம்).

இவ்வைந்தும் கலந்ததே உலகம் என்று தொல்காப்பியர் கூறுவதால்,  ஐந்திரம் என்றது உலகம் என்பதே.  எனவே, உலகுநிறை தொல்காப்பியனே ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன். " உலகுநிறை "  என்றால் உலகில் மிகுபுகழ் உடையோன் என்று பொருள். இது உயர்வு நவிற்சி என்று செய்யுளில் கூறப்படுவதாகும்.  

ஐந்திரம் என்பதை இன்னொரு வகையில் கூறவேண்டுமாயின், பிரபஞ்சம் என்று கூறலாம்.  பிறப்பு அஞ்சு அம் >பிறப்பஞ்சம் > பிரபஞ்சம்..

படைப்புக் கடவுளுக்கு அடுத்த நிலையில் ஐந்திடங்களைக் கவனித்துக்கொண்ட ஐந்திரத்து அதிபதி, இலக்கண ஆசிரியன் அல்லன். அவன் தேவன். ஐந்திரம் அவன் ஆட்சியிடம் ஆகும். ஓர் இலக்கண ஆசிரியனுக்கு அருள்தந்த தெய்வமாகலாம். இவ்வாறு பல கொள்கையினரும் ஒத்துப் போற்று மொரு விளக்கமாய் இது விளையும்.

"ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத்தன் பெயர் தோற்றி" என்று கூறுவது ஏனென்றால், தொல்காப்பியன் உலகு புகழ் பெயரினன் என்று கூறுவதற்காகவே  ஆகும்.

பிரபஞ்சம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி...

உலகம் புகழும் தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி...

ஐந்திரம் என்ற பெயரில் ஓர் இலக்கணநூல் இல்லை...தமிழிலும் இல்லை; சமத்கிருதத்திலும் இல்லை. ஐந்திரம் ஓர் இலக்கணமென்பது ஊகமே. பனம்பாரனார் அதை இலக்கணநுல் என்று குறிக்கவில்லை. சங்கதவாணரும் பிறரும் அஃது இலக்கணமென்று மயங்கியிருக்கக்  கூடும்.

ஐந்திரம் - உலகம் என்ற விளக்கத்துக்கு ஆதரவாக அச்சொல்லே திகழும். புறச்சான்று தேவையில்லை. குறித்த ஐந்தும் இருக்கும் இயற்கை நிலைகள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

சிறு விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. 06012022

செவ்வாய், 4 ஜனவரி, 2022

பிச்சுவா என்ற கத்தி

 பிச்சைக்காரர்கள் கத்தி வைத்துக்கொண்டு திரிவதாகத் தெரியவில்லை.  வாங்கிய பிச்சையை வைத்துத் தின்பதற்கு ஓர் ஏனம் அல்லது பாத்திரம் வேண்டுமாதலால் அதைத்தான் பிச்சை எடுப்பவன் வைத்திருப்பான்.  கத்தி வைத்திருப்பதென்பது பெரும்பாலும் கள்ளர்கள் வீடுடைப்பவர்கள் வைத்திருப்பார்கள்.

பிச்சை என்ற சொல்,  பைத்தியம் உடையாரின் தன்மையையும் குறிக்கக் கூடும் பித்து > பிச்சு என்று திரியக்கூடியது. பித்தை என்பதும் பிச்சை என்று திரியும்.  ஆதலின் பிச்சை என்ற சொல்லைக் கவனமாகவே ஆய்வு செய்தல் வேண்டும்.

எல்லாப் பிச்சைக்காரர்களும் பைத்தியகாரர்கள் அல்லர். ஏழ்மையினால் வாங்கி உண்பவர்கள் ஒருசாரார்;  பைத்தியமாகத் திரிவோர் மற்றொரு சாரார் ஆவர்.

பைத்தியம் என்ற சொல், அறிவு முதிராமையைக் குறித்த தமிழ்ச்சொல்.  பை - பைம்மை,  முதிர்ச்சி இன்மை.  பையன் - இளையவன்.

பை அடிச்சொல்.

பைத்து -  என்றால் பைம்மை உடையது என்று பொருள்.

பைத்து  + இ = பைத்தி.  பைம்மை உடையோன், உடையோள்.

அம் என்பது அமைந்தமை குறிக்கும் விகுதி. 

எல்லாம் இணைக்க, பைத்தியம் ஆகிறது.  பைத்து இ அம் > பைத்தியம்.

பைத்தியம் என்பது பையன்மை.  "பையலோ டிணங்கேல்" என்பதும் கருதுக. நாளடைவில் பைம்மைக் கருத்திலிருந்து மூளைக்கோளாறு குறிக்கக் கருத்து வளர்ச்சியுற்றது.

இது முதிராமை - அதாவது அகவை (வயது) இருந்தும் அதற்குரிய அறிதன்மை உடையனாயிருந்து சரிப்படுத்திக்கொண்டு செல்லாதவன், பைத்தியம் உடையவன்.  An insane person  cannot adjust himself to situations. Normal persons too sometimes fail to adjust but in an insane person, the failure to adjust is  to a much greater extent.  இதைப்பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிக.  தமிழ்மொழியில் இந்தச்சொல், பைம்மையிலிருந்து தான் வருகிறது.  ஆதலால் இங்கு உரைத்தவாறு உணர்ந்து சொல்லை அமைத்திருக்கிறார்கள்.  இது சரியாகவே உள்ளது.

பிச்சுவா என்ற சொல்லுக்கும் பித்துடைமைக்கும் பைத்தியத்துக்கும் ஏதும் தொடர்பு இருப்பதாகக் கருதுவதற்கில்லை.  இச்சொல் வந்த விதம்:

பிள்  -  ( பிள்> பிள > பிளத்தல் ).

பிள் > பிள் + சு > பிட்சு > பிச்சு.

வாள் என்ற சொல், வா என்று பேச்சு வழக்கில் திரிந்துள்ளது.

சொல்லமைப்புப் பொருள்:  பிளக்கும் நீள்கத்தி.

வா என்ற வினைச்சொல் அன்று; இது வாள் என்பதன் கடைக்குறை. இலக்கணம் பொருந்துகிறது.

பிள் > பிட்சு> பிட்சுவாள் > பிச்சுவா.

அறுவாள் என்னாமல் " அறுவாக்கத்தி" என்று பேச்சில் சொல்வது கேட்டிருக்கிறோம்.  "ள்" குன்றுதல் தமிழில் இயல்பு.   அவள் > அவ,  வந்தவள்> வந்தவ எனற்பால திரிபுகள் உணர்க.

வளைந்த வாயுள்ள மீன்,  கொடுவா என்று குறிக்கப்படுவது காண்க.  கொடு - வளைந்த,  வா - வாயுடைமை.  யகர ஒற்று கடைக்குறை.  கொடுவாய் என்ற மூலம் வழக்கில் இல்லை. ஆகவே உணர்பொருட்டு மீட்டுருவாக்கம்.

அறிக மகிழ்க.

பெய்ப்பு பின்.

திறமும் திரமும் ( ர - ற வேறுபாடு)

 எம் சொந்த ஆய்வில்,  திறம் என்பதும் திரம் என்பதும் பழைய நூல்களில் காணப்படும்போது, ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடாக முற்காலத்தில்  வந்திருத்தலை ஒதுக்கித் தள்ளிவிடுதல் இயலாததே ஆகும். இவ்வாறு முடிவு செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. சில கூறுவோம்.

  • ரகரம், றகரம் இரண்டிலும் ரகரம் காலத்தால் முற்பட்டது ஆகும். எழுத்துருவில், ரகரம் என்பது ஒற்றை ரகரம் என்றால் றகரம் என்பது இரட்டை ரகரம் அல்லது றகரம் எனல் வேண்டும். ஒற்றை ரகரம் : (  ர  ). இரட்டை ரகரம் ( ரர அல்லது ற).  றகரத்தில் இரு ரகரங்கள் ஒட்டி உள்ளன.
  • முற்காலத்தில் ற என்பது ரர என்று எழுதப்பட்டிருக்கவேண்டும்.
  • அழுத்தி ஒலித்தால், ரகரம் றகரமாகிவிட்டதென்பதே உண்மை நிலை. அதனால்தான் ஒன்று ( ர ) இடையினமாகவும் மற்றொன்று ( ற) வல்லினமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இதைத் தமிழர் நாளடைவில அறிந்த பின்புதான் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்னலாம்.
  • றகரம் தோன்றுமுன் சற்று மென்மையுடன் ஒலிப்புற்ற ரகரமும் நன் கு அழுத்தி ஒலிக்கப்பட்ட றகரமும்  ஒரு மாதிரியாகவே எழுதப்பட்டிருந்தன. அதனால்தான் இவ்வேறுபாடின்றி எழுதப்பட்ட சொற்கள், இன்றும் வேறுபாடின்றியே எழுதப்படுகின்றன.
  • பிற்காலத்தில் நூல்களை ஓர் ஓலைச்சுவடியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் புதுவரைவு செய்தவர்கள்,  இவை மக்களால் எவ்வாறு ஒலிக்கப்பட்டன என்பதைத் தம் புலமையின் மூலமாகக் கண்டறிந்து வேறுபடுத்தி எழுதி நமக்கு அளித்துள்ளனர் என்பதே உண்மை.
  • மலையாளத்தில் றகரம் வரக்கூடிய இடங்களில்,  ரர என்பதற்கீடான முறையிலேதான் எழுதுகிறார்கள்.
  • ஆகவே திறம் - திரம்,  பறை(யன்) - பரை(யன் ) முதலியவையும் இவைபோல் பிறவும் வேறுபாடற்றவையாய் இருந்தன.
திறம், திரம் இரண்டுமே திரட்சிக்கருத்தினடிப்படையில் எழுந்த சொற்கள் தாம்.  ஐந்திரம் என்ற சொல்லில் ஐந்து பகுப்புகளின் திரட்சி குறிக்கப்படுகிறது.   திறம் ( அல்லது திறமை என்பதுகூட,)  வலிமை, செயலூக்கம் ஆகியவற்றின் திரட்சிதான்.   திரட்சி என்பது காண்பொருளிலும் காணாப்பொருளிலும் அறியப்படுவது. இதுபோல் பிற சொற்களிலும் வேறுபாடுகளை உணரவழி உள்ளது.  எ-டு:  பரவுதல்  ( பர ) என்பது தரையிலும் வானிலும் நிகழ்வது.  பற என்பது வானில் மட்டும் நிகழ்வது.

ஆகவே, ஐந்திரம் என்றால் ஐந்தின் திரட்சி என்பதே.  திரளுதல் என்ற வினைச்சொல்லும் திர> திரள் என்றே வருகிறது.  கையாளப்படும் முறையிலிருந்து திறம் என்பது பொருள்களின் தொகுப்பைக் குறிக்க வல்லது என்பது தெளிவு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்பு.