எம் சொந்த ஆய்வில், திறம் என்பதும் திரம் என்பதும் பழைய நூல்களில் காணப்படும்போது, ஒன்றுக்கு மற்றொன்று மாற்றீடாக முற்காலத்தில் வந்திருத்தலை ஒதுக்கித் தள்ளிவிடுதல் இயலாததே ஆகும். இவ்வாறு முடிவு செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. சில கூறுவோம்.
- ரகரம், றகரம் இரண்டிலும் ரகரம் காலத்தால் முற்பட்டது ஆகும். எழுத்துருவில், ரகரம் என்பது ஒற்றை ரகரம் என்றால் றகரம் என்பது இரட்டை ரகரம் அல்லது றகரம் எனல் வேண்டும். ஒற்றை ரகரம் : ( ர ). இரட்டை ரகரம் ( ரர அல்லது ற). றகரத்தில் இரு ரகரங்கள் ஒட்டி உள்ளன.
- முற்காலத்தில் ற என்பது ரர என்று எழுதப்பட்டிருக்கவேண்டும்.
- அழுத்தி ஒலித்தால், ரகரம் றகரமாகிவிட்டதென்பதே உண்மை நிலை. அதனால்தான் ஒன்று ( ர ) இடையினமாகவும் மற்றொன்று ( ற) வல்லினமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தமிழர் நாளடைவில அறிந்த பின்புதான் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்னலாம்.
- றகரம் தோன்றுமுன் சற்று மென்மையுடன் ஒலிப்புற்ற ரகரமும் நன் கு அழுத்தி ஒலிக்கப்பட்ட றகரமும் ஒரு மாதிரியாகவே எழுதப்பட்டிருந்தன. அதனால்தான் இவ்வேறுபாடின்றி எழுதப்பட்ட சொற்கள், இன்றும் வேறுபாடின்றியே எழுதப்படுகின்றன.
- பிற்காலத்தில் நூல்களை ஓர் ஓலைச்சுவடியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிப் புதுவரைவு செய்தவர்கள், இவை மக்களால் எவ்வாறு ஒலிக்கப்பட்டன என்பதைத் தம் புலமையின் மூலமாகக் கண்டறிந்து வேறுபடுத்தி எழுதி நமக்கு அளித்துள்ளனர் என்பதே உண்மை.
- மலையாளத்தில் றகரம் வரக்கூடிய இடங்களில், ரர என்பதற்கீடான முறையிலேதான் எழுதுகிறார்கள்.
- ஆகவே திறம் - திரம், பறை(யன்) - பரை(யன் ) முதலியவையும் இவைபோல் பிறவும் வேறுபாடற்றவையாய் இருந்தன.