திங்கள், 3 ஜனவரி, 2022

ரம்மியம் என்பது

 ஒ ருவன் தன் வீட்டின் முகப்பை இடித்துவிட்டு, அடுத்த நாள் வந்து பார்த்து என் வீடு இதுவன்று என்று சொன்னதுபோலவே, பல சொற்கள் தமிழில் உலவுகின்றன.(அ)/றணம் என்ற ஒரு சொல்லை முன் ஓர் இடுகையில் கண்டோம். இப்போது இரம்மியம் என்பதை அறிந்துகொள்வோம்.

இர் என்ற அடிச்சொல்,  இருள், இரவு, இராவணன் முதலிய சொற்களில் வந்துள்ளது. இர் என்ற அடி, ஒளியின்மையை உணர்த்துவது.  கருமை ஒளியின்மையுடன் தொடர்புள்ளதாதலின்,  இர் என்பது கருப்பு நிறத்தையும் உணர்த்தும்.

இர் -  கருப்பு.

அம் -  அழகு.

இ  -  சுட்டுச்சொல்,  இடைநிலையாய் வந்துள்ளது.

அம் -  விகுதி.   பெரும்பாலும் அமைப்பு என்பதைக் குறிக்கும் சொற்களில் வரும். அமைப்பு என்பதற்கும் இது அடிச்சொல் ஆகும்.  அறம் ( அறு+ அம்) என்பதில் இவ்விகுதி வந்துள்ளமை காண்க.  மறம் என்பதிலும் அது உள்ளது.

முன் தமிழர் கருப்பில் அழகு கண்டு சுவைத்தனர் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும். ஒரு நூறு ஆண்டுகட்குமுன் கருப்பு நிற உந்து வண்டியை மக்கள் பெரிதும் விரும்பி அதில் அழகும் கண்டனர் என்று சொல்கிறார்கள்.. இப்போதெல்லாம் பல வண்ணங்களில் உந்துவண்டிகள் வருகின்றன!  ஐயப்ப பற்றர்கள் கருப்பு உடையில் அழகு உணர்ந்தவர்கள். வானம் பாதிநாள் (இரவில்) கருப்பிலே அழகு காட்டுகிறது.  கண்ணின் ஒளியல்லால் மற்றோர் ஒளியில்லை என்றாள் நம் ஓளவை.

இர்+ அம் + இ+ அம் > இரம்மியம்,   பொருள்:  அழகு.

நாளடைவில் கருப்பில் அழகு என்பதை மறந்துவிட்டனர்.

இராமன், இராவணன், கண்ணன், காளி யாவரும் கருப்பிலழகியர்.

ஆகவே, ரம்மியம்  உண்மையில் இரம்மியம் ஆகும்.  இது ஒரு பேச்சுவழக்குச் சொல். இப்போது வழக்கு குன்றிவிட்டது. இதை எடுத்தாண்ட மொழிகள் இச்சொல்லை இறவாது காத்துள்ளன.  அவற்றுக்கு நன்றி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



இலங்கை - சொற்பொருள் ஐயப்பாடு

 இலங்கை என்னும் சொல் எவ்வாறு அமைந்தது என்பதை அந்நாட்டு அறிஞர்கள்  மற்றும் பிறரும் வெகுவாக ஆய்வு செய்துள்ளனர். இவற்றுள் ஒருமுகமான முடிவுகள் இல்லை என்றுதான் முடிவுகட்ட வேண்டியுள்ளது. இவற்றை இணையத்தின்வழித் தேடி நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இலங்கை என்ற பெயர், ( லங்கா)  ,  இராமாயணம் முதலிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.  கம்பனிலும் உள்ளது.  இராவணன் எவ்வாறு கலங்கினான் என்பதைத் தெரிவிக்க, " கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான்  இலங்கை வேந்தன்"  என்பான் அக்கவிப் பெரியோன்.

இலங்கை என்ற சொல்லை  இல் + அங்கை என்று பிரிப்போமானால்,

இல்  =  இடம்,

அங்கை -  உள்ளங்கை.

என்று பொருள் போதரும்.  ஆகவே உள்ளங்கை வடிவில் உள்ள நாடு என்று தமிழின் மூலமாகப் பொருள் கிட்டும்.  இதுதவிர, வேறு பொருளும் பிறர்தம் ஆய்வினால் கிட்டுகிறது.  அவற்றை இங்கு விளக்கிற்றிலம்.

இல் + அங்கை என்பது லகர இரட்டிப்புக் காணும் புணர்ச்சியை உடைத்தாகும்  என்று கூறுதல் கூடுமெனினும், ( இல் + அங்கை = இல்லங்கை),  இவ்வாறு இரட்டித்தால் பின் இடைக்குறையாகிக் குறுகுதலும் கூடுமாதலால், தமிழிலக்கணத்தின்படி குழப்பமில்லை எனினும்,  இந்தப் பெயர் ஏற்பட்ட காலத்தில் நாம் இல்லையாதலின், இதனால்தான் இப்பெயர் வந்தது என்று முடிவு செய்யக் காரணம் யாதும் அறியோம் என்பதறிக. ஆயினும் பெயர் பொருந்துகிறது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



ரணம் என்பது

 இச்சொல்லை ஆய்வு செய்து காண்போம். இதைச் சுருக்கமாகவே செய்துவிடலாம்.

அறுத்தல் என்பது வினைச்சொல்.

அறு + அணம் -    அறணம்>  (தலையிழந்து )  ரணம்.

அறுத்த புண்.

முதலெழுத்தாக றகரம் வரக்கூடாது,   ரகரமும்தான் வருதல் ஆகாது.   றகரத்துக்குப் பதில் ரகரம் எழுதுவதால் இலக்கண விதி காக்கப்பட்டது என்று எண்ணலாகாது.

இது மாதிரி அமைந்த இன்னொரு சொல்:

அறு + அம் + பு + அம் =  அறம்பம்,  றம்பம் > ரம்பம்.

அறு  - அறுத்தல் வினை.

அம் - அழகு  ( அழகாக).

பு  - இடைநிலை.

அம் - விகுதி  அல்லது இறுதிநிலை.

பொருள்:  அறுக்கும் வாள்.

ரணம்:  சொல் இவ்வாறு மாறவே, அறணம் என்ற சொல் வழக்கிறந்து.

ரணமென்பது தலைக்குறைத் திரிபு.   அறணம் என்றே எழுதி, விளக்கத்தை அடைப்புக்குறிகளுக்குள் இடுக.

மொழியை ஒழுங்குறக் கையாளவில்லை என்றால், தவறான வடிவங்களே ஆட்சிசெய்யும்.

அழகாக வெட்ட, அறம்பமே  வேண்டும்.  கோடலியால் அது ஆகாது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்