ஞாயிறு, 21 நவம்பர், 2021

தூஷித்தல் என்பதன் மூலம்

 தூஷித்தல் என்ற பதமும் அவ்வப்போது எழுத்திலும் பேச்சிலும் வந்து நம்மை எதிர்கொள்கிறது. இது என்ன மொழிச்சொல் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்தச் சொல்லில் " ஷி " இருக்கிறது.  அதுதவிர, இச்சொல்லின் சிறப்பமைவு என்று ஒன்றுமில்லை, இயல்பான சொல்லே இது.

மலேசியா சிங்கப்பூர் முதலிய இடங்களில் வாழும் தமிழர்க்கு,  இந்த ஒரு சொல்லில் "ஶி" யை எடுத்துவிடுவதால், "  ஷி " என்பதிலிருந்து முற்றிலும் விடுதலை அடைந்துவிட முடிவதில்லை.  ஷியைத் தவிர்த்த மறு நிமிடமே,  ஒரு நண்பர் எதிரில் வருகிறார்.  அவர் பெயர் "பஷீர்!".  அவருடன் அன்பாகப் பேசுமுகத்தான் " என்ன பஷீர் ஐயா நலமா!"  என்று கேட்கும்போது , நாம் தவிர்த்த "  ஷி " வந்துவிடுகிறது.  அவர் பெயரைப் போய் " பசீர்" என்பது அவ்வளவு பொருத்தமாகத் தோன்றவில்லை. 

தொல்காப்பியனார் இலக்கணம் செய்த காலத்தில் நாம் வடவொலிகள் என்று குறிக்கும் திறத்தின அப்போதுதான் தமிழ்மொழி பேசுவோரை வந்தடைந்திருந்தன என்று எண்ணுவது சரியாக இருக்கும்.  அந்தத் தொடக்க நிலையில் அவற்றை விலக்கிவைத்தல் என்பது எளிதாக இருந்திருக்கும். ஆகையால் அந்த ஒலிகள் தமிழுக்குத் தேவையில்லை என்று அவர் கருதியிருக்க வேண்டும்.  எனவே தமிழ்ச் சொற்களில் அவற்றை விலக்குதல் நலம் என்று அவர் சூத்திரம் செய்தார்.

அவர் நூல்செய்த காலமோ இரண்டாம் கடல்கோளுக்குச் சற்றுப் பின்னர்!  தமிழர் பல நூல்களைக் கடல்கோளில் அப்போது இழந்துவிட்டிருந்த நிலையில் அவர் நூல்செய்தார். தமிழ் என்ற மொழிப்பெயர் அமைந்ததே,  எல்லாம் அமிழ்ந்து போய் அழிந்துவிட்ட பின்புதானாம்.   அமிழ் என்ற சொல்லினின்று பிறந்ததே தமிழ் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர்.  அமிழ் - தமிழ் என்று பெயர் அமைந்தது என்று கருதுவர்.  நூல்கள் அழிந்துவிட்டன என்றால் ஒவ்வொரு நூலுக்கும் படிகள் (copies)  ஆயிரக் கணக்கில் இருந்திருக்கும் என்று எண்ணவேண்டாம்.   ஓர் ஆசிரியர் இயற்றிய நூலுக்கு ஒரு படிக்கு (காப்பி)  மேல் எங்கும் இருந்திருக்குமா என்பது ஐயப்பாடுதான்.  எல்லாம் மெனக்கெட்டு கையால் எழுதிப் பகர்ப்புச் செய்த நூல்கள்.  " வடசொற் கிளவி வடவெழு தொரீஇ "  என்றார் தொல்காப்பியனார்.

தூஷித்தல் என்பதில் ஷி இருப்பதால் அது வடசொல். அதாவது தமிழரின் வீடுகளுக்கு வெளியே மரத்தடிகளில் சாமிகும்பிட்டவர்களால் கையாளப்பட்ட ஒலி.  அப்படிச் சொல்லும் மந்திரங்களில்  "ஶ்"  "ஶீ  ஷீ ஷீ"  " உர் உர்" என்று ஒலி எழுப்பினால்தான் நன்றாக இருக்கும்.  வடம் - மரத்து அடி ( மரத்தடி) என்பதும் பொருள்.  

அதை எடுத்துவிட்டு,  தூசித்தல் என்றால் அது தமிழ்.   இப்போது இது "எழுத்தொடு புணர்ந்த சொல்" ஆகிவிட்டது,  தொல்காப்பியர் கூறியபடி.

தூசித்தல் என்பது,  தூசியைப்போல் ஒருவரை இழித்துப் பேசி, பரப்பிவிடுதல் என்பது தான்.

தூசு >  தூசு + இ >   தூசி > தூசித்தல்.   ( தூசியைப்போல் தூற்றுவது).

தூ > துப்பு.

தூ > தூவு

தூ > தூசு >  தூசி.

தூ  >  தூற்று.

தூ > தூள்.

து > துளி.

எல்லாம் பொடிகளைக் காற்றில் பரப்புதல் அல்லது அதுபோல்வது.

தூசு + அன் + அம் >  தூசனம் > தூஷனம் என்றானது.

இது ஒரு செயலொப்புமைச் சொல். தூவுதல் என்பதனோடு ஒப்புமை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

 

சனி, 20 நவம்பர், 2021

நவநீதம் - புதுமை, வெண்ணெய்.

 நீதி பிழைத்தான் என்றெண்ணிய பாண்டியன் கோவலனைக் கொன்றான்.  இந்த வாக்கியத்தில் "பிழைத்தான்"  என்பதற்குப் பிசகினான், தவறினான் என்று பொருள். "மிஸ்டேக்" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, தெளிவான பொருளை "டோர்ட்" என்னும் சட்டத்தொகுதி சொல்கிறது.  "Genuine Mistake" ---  உடலின் தேய்க்கும் மருந்தைக் குடிக்கும் மருந்தென்று எண்ணிக் குடித்துவிட்டீர் என்பதை உதாரணமாக முன்வைக்கலாம். உதாரணம்:[ உது-  முன்னால்; ஆர் - நிறைவாக; அணம் -  விகுதி, (நிற்பது எனல்பொருட்டு).]

நீதி என்ற சொல், நீதம் என்ற வடிவும் கொள்ளும். இரண்டும் நில் என்ற அடிச்சொல்லிலிருந்து வருவன:

நில் >  நி > நீ.  (  சொல் - கடைக்குறை - முதனிலை நீளுதல் ).

நில் > நீதி  ( தி தொழிற்பெயர் விகுதி).

நீதி + அம் >  நீதம்.  (  து என்பதில் உகரம் கெட்டது).

இது என்ற சொல் இடைநிலையாக வரும். இஃது,  " இது" என்றும்,  து என்று தலையிழந்தும், த் என்று மெய்யாகக் குறுகியும் வரும்,  சொல்லாக்கத்தில் ).

நி + த் + அம் > நீ + த் + அம் > நீதம்,   ( நி நீண்டது;  த் இடைநிலை).

நீதிக்கு நில் பகுதியானது,  ஏறக்குறைய நீதி ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் ஒன்றாக நிற்பதாலும் காலம் முதலிய காரணிகளால் கோடாமையும் ஆகும் ).  அதாவது:  நிற்பது நீதி. 

நவநீதம் என்ற கூட்டுச்சொல்லில் இரண்டு பாகங்கள் உள.  நவம் என்பது ஒன்று; நீதம் என்பது இன்னொன்று.  நவநீதம் - புதுமை எனின்,  நவம் - புதுமை; நீதம் - நிற்பது, புதுமையாய் முன்னிற்பது.

நவம் - புதுமை,  நீதம் - நெய்,  புதியது நெய்க்கு முந்திய வெண்ணெய்.  ஆகவே வெண்ணெய் என்பதும்  பொருள். திவாகர நிகண்டு இப்பொருளைத் தருவது காணலாம்.

நெய் என்ற சொல், நெய்+ து + அம் > நெய்தம்> நீதம் என்று திரிந்து இங்கு நெய்யைக் குறித்தது. நவ எனவே, வெண்ணெயைக் குறித்தது.  நீதம் என்ற இவ்வாறு திரியாத சொல், நெய்யைக் குறிக்காது.

இங்கு திரிபாக வந்து நெய்யைக் குறித்தது  " நீதம்" ஆகும். இது கூட்டுச் சொல்லிலன்றி இப்பொருள் தாராது உணர்க. முதற்குறையாய்க் கையாளப் பெற்றிருந்து நெய்யென்ற பொருள் போந்தவிடத்து அவ்வாறு கொள்க. வந்துழிக் காண்க.

"நவநீத சோரனும் என்று --  வருவான் என்று,

இராதாவும் ஏங்குகிறாள் நின்று  !  

கண்கள் காணாமலே -- சுகுமாரன்

கனிவாகப் பேசாமலே   (நவநீத )   "

மருதகாசியின் பாடல். 

இப்பாட்டில் நவநீதம் என்பது வெணணெயைக் குறித்தது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 19 நவம்பர், 2021

சென்னை வெள்ளம் ( வேண்டுகோள் கவிதை)

 

சென்னைநகர் தண்ணீர்க்குள் அமிழ்ந்து காணும்

சீரகன்ற நிலைகண்டோம் துன்பம் கொண்டோம்

மின்னலொடு பேய்மழையால் மக்கள் அல்லல்

மிசைபொருளும் உண்ணீரும் இல்லா வாட்டம்!

பன்னரிய பல்லிடர்கள் அடைந்தார் முன்னர்,

பின்னிதுநாள் காறுமதில் விடுபா டின்றி!

இன்னுமதே நேர்ந்ததுவே திறமாய்த் துன்பம்

இனிவாரா வழிகண்டு பணிசெய் வீரே.



ஒண்ணும் பெரியோர் ஒன்றுபட் டுதவி

நண்ணிடும் நலமே பண்ணுதல் கடனே.



அரும்பொருள்

விடுபாடு -  துன்பத்தில் மாற்றம்

சீரகன்ற - கெடுதலான

மிசைபொருள் - உணவுப் பொருள்

பின்னிதுநாள் காறும் - இன்றுவரையிலும்

பன்னரிய - சொல்லிட முடியாத

ஒண்ணும் - இயலும்

நண்ணிடும் -  ஏற்ற