ஞாயிறு, 24 அக்டோபர், 2021

குறுக்கலும் குக்கலும் ( குக்கல்- நாய்)

 ஓநாய்களை பிடித்துப் பழக்கி நாயாக்கினான் மனிதன் என்று விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  நாய்கள் மனிதனின் நண்பன் ஆனபின், வேடன் தன் வேலைகளைப் பலவழிகளில் குறுக்கி நேரத்தை மிச்சமாக்கிக் கொணடான் என்பதை மாந்தவளர்ச்சி நூல் உரைக்கின்றது.  ஒரு பெரிய விலங்கு மனிதனோடு சண்டையிட வரும்போது,  நாய் அவனுக்கு உதவியது.  அது அவ்விலங்குக்கும் அவனுக்கும் இடையில் குறுக்கிட்டு,  அவனுடன் சேர்ந்து அவ்விலங்குடன் போரிட்டு, அதனை மடக்க உதவியது.  இவ்வாறு குறுக்கிட்டுக் காத்ததன் காரணமாக, அது குறுக்கல் எனப்பட்டது.  சிலர் அன் விகுதி கொடுத்துக் குறுக்கன் என்றும் கூறினர். நாளடைவில் இச்சொல் குறுகிற்று.  எவ்வாறு?

குறுக்கல் >  குக்கல். ஆயிற்று.

குக்கல் என்பது நாய் என்று பொருள்படும் சொல்..

அவ்வாறே குக்கன் என்ற சொல்லும் ஆகும்.

வேட்டையாடின விலங்கு கிடக்குமிடத்திற்குச் சென்று, குக்கல் அதனைத் தானுண்ணாமல் பத்திரமாகக் கொணர்ந்து,  வேடனிடம் சமர்ப்பித்தது.  இப்போது வேடனின் வேலையும் நேரமும் குறுகிற்று.  இவ்வாறு நாயினால் வரும் நன்மை அனைத்தும் நோக்க, நாய் வேடனுக்குக் குறுக்கல் மட்டுமன்று, பெருங்குறுக்கலும் விழுகுறுக்கலும் ஆம் என்பது விரிக்கவேண்டாமை உணர்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.






மனிதன், நாயுடு, நாயகன், பிறசொற்கள் ஒருங்கிணைப்பு.

 மனிதன் தோன்றி அவனுடைய குமுகாயம் அல்லது சமுதாயம் எவ்வாறு விலங்குகளைப் பயன்படுத்தித் தன் வாழ்க்கையில் முன்சென்றான் என்பதானது பெரிதும் அறியவேண்டிய தொன்று ஆகும். விலங்குகளின் உதவியின்றி மனிதன் முன்னேறியிருக்கமுடியாது.  மனிதன் உயர்நிலை குறிக்கும் பல சொற்களையும் ஆராய்ந்தால் -----  நாமறிந்த மொழியிலே இதைச் செய்தாலும் ஓரளவு போதுமானது -----  அவை விலங்குகளோடும் தொடர்பு பட்டிருப்பதை அறியலாம்.

மனிதன், மந்தி:

மனிதன் என்ற சொல்லையே ஆராய்வோமே.  மனிதன் என்ற சொல்லுக்கு அடிச்சொல் " மன்னுதல்"  --- ( மன் )  என்பதே அடிச்சொல்.  மாந்தன் என்பது,  மன் என்ற சொல்லின் நீட்சி யன்றி வேறன்று. மன் > மான்  ஆகும்.  மன்+ இது + அன் > மனிதன்.   மன் > மான் > மான்+ (  இ ) து + அன் >  மாந்தன்.  இந்தச் சொற்களின் அமைப்பில்  இது, து என்பன த்  என்ற அளவிலேதான் குறுகி நிற்கின்றன.

இப்போது மந்தி என்ற விலங்கை எடுத்துக்கொள்வோம்.   மன் + இது + இ >  மன் + த்  + இ > மந்தி என்று பெருங்குரங்கு ஆகிய விலங்குக்குப் பெயர் ஆகிறது.

அடிச்சொல் ஒன்றுதான்  :  அது மன் என்பதே.

நாயுடு, நாயகன் முதலியவை

நாய் என்பது ஒரு விலங்கின் பெயர். இந்த விலங்குதான் வேடர்களின் உயிர்நாடி நண்பனாக வரலாற்று முதன்மை பெறுகிறது.  வேட்டுவத் தொழிலென்பதே மனித இனங்களின் மிக மூத்த தொழில்களில் ஒன்றாகும். நாயை உடன் வைத்திருந்தவன் மனிதக் கூட்டத்துக்கு மிக்க உதவியாக இருந்தான்.  உடன் என்ற சொல்  உடு + அன் என்பதாகும்.  அடிச்சொல் இங்கு உடு என்பதே.  உடு என்பதன் மூலம் உள் என்பது.   உள் - உடு;  சுள் > சுடு என்பவற்றை ஒப்பு நோக்கி அறிவு பெறலாம்.  அதாவது நாயுள்ளவன்; நாயுடையவன்; நாயுடனிருந்தவன்.  அவன் நாயுடு  ஆகிறான்.  நாயை வீட்டில் வைத்திருந்தவன் காவலுடையவன். வேறு மனிதர்கள் வந்து அவனைக் காக்கும் நிலைவருமுன், விலங்குகளே அவ்வேலையைச் செய்தன.  அவனும் நாயை அகத்து வைத்துக்கொண்டு  " நாயகன் " ஆனான்.   நாய் + அ + கு + அன் > நாயக்கன் என்பதும் அதுவே.

இங்கும் நாய் என்ற விலங்குக்கான சொல் வன்மை பெற்று நிற்கின்றது.


மாடன், மாடி  முதலியவை:

மாடு வளர்ப்பு மனிதனின் வழக்குக்கு வருமுன்,  மாடுகள் காடுகளுக்கு உரியவையாய் இருந்தன.  பழக்கியபின்,  மனிதனுடன் அருகிலே கொட்டகையில் வாழ்ந்து அவனுக்குப் பாலும் அளித்தன. 

மாடு மனிதனைக் காத்தது உணர்ந்த மனிதன் அவனைக் காத்த சிற்றூர்த் தெய்வத்தையும் " மாடன் "  "  மாடி "  என்று வணங்கினான்.  மாடு என்ற விலங்கும் மனிதன் உணவு உண்டாக்குவதற்குப் பலவகையிலும் உதவியது.  அதனால் மடு > மாடு ஆயிற்று. ( மடுத்தல்: உண்ணுதல் ). முதனிலை திரிந்த தொழிற்பெயர். மாடன் மாடி என்ற தெய்வங்களும் மீண்டும் வந்து வந்து அவனுக்குக் காவலாய் இருந்தன என்று மனிதன் உணர்ந்தான். மடிதல்,  மீண்டு திரும்புதல்.

இயற்கையில் காட்டில் வாழ்ந்த மாடு, மனிதனால் எடுத்துக்கொள்ளப்பட்டு  வீட்டு விலங்கு ஆகிற்று.  கொள் >  (முதனிலை திரிந்து நீண்டு)> கோ(ள்)  ஆகிற்று. பழக்கப்பட்ட விலங்கு என்று, அதைக் கோ என்றான். ( முதனிலை திரிந்து நீண்டு கோள் ஆகிப் பின் ளகர ஒற்று வீழ்ந்த கடைக்குறை ஆகிக் கோ ஆனது.)   பொருள்: கொள்ளப்பட்டது,  மாடு. மாடு முதலிய வளர்த்துச் செல்வனாகித் தலைவனானவன்,  கோ - ஆட்சியன் ஆயினான்.  இவ்வாறு ஒரே அடிச்சொல்லே  அரசனுக்கும் மாட்டுக்கும் வந்தது.

இடு ஐயன் - இடையன்

மாடு ஆடு வளர்ப்பினால் செல்வநிலை பெற்று, பிறருக்குக் கட்டளை இட்டவனே இடு + ஐயன் > இடையன் ஆனான்.   கட்டளை இடும் தலைமகன். இடையிலிருப்போன் என்பதன்று. இடுதல் என்பது:  பிறர்க்கும் உணவிடுதல், ஊதியம் இடுதல் எனப் பிற இடுதல்களையும் தழுவுவது இச்சொல்.

இதனை அடுத்தடுத்து மேலும் அறிவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின். 

குறிப்பு: 

சில கூடுதல் விவரங்கள்:  

சந்நிதி  https://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_16.html


சனி, 23 அக்டோபர், 2021

வீட்டுக்குள் குளம் அமைத்துக்கொள்ளுங்கள்.

 இது கொவிட் தொற்றுக் காலமாக விருப்பதால்,  வீட்டினுள் பூட்டிக்கொண்டு வாழவேண்டிய நிலையில் பலர் உள்ளனர்.  நேரம் போவதற்குத் தொலைக்காட்சி பார்க்கலாம்.  வானொலி கேட்கலாம். கணினியில் வரும் செய்திகள் வாசிக்கலாம்.  ஆனால் இன்னொன்றும் செய்யலாம்.  அதுதான் ஒரு சிறிய  குளம் அமைத்து, அதனைச் சூழச் செடிகொடிகள் வளரவிட்டு இயற்கையைப் போற்றி மகிழ்வது.  பார்ப்பதற்கு வீடு குளிர்ச்சியாக இருக்கும்.

திரு கரு-ஜீ  அவர்கள்,  இப்போது ஒரு குளம் அமைத்துக்கொண்டு உள்ளார்.  விரைவில் நல்ல செடிகொடிகள் தொட்டியைச் சூழ  அமைப்புறும்.  செழித்து வளரும். அது முழு அமைப்பை அடைந்த பின்னர் இன்னொரு படத்தை எடுத்து உங்களுக்குத் தருவோம்.  இப்போது தொடக்கநிலைக் குளத்தைக் கண்டு, தோன்றியபடி நீங்களும் பின்பற்றலாமே.  செலவு ஒன்றும் அதிகம் ஆகாது.

நாய் வளர்ப்பவராக இருந்தால்,  அது குளத்தில் போய்ப் பாய்ந்துவிடாமலும் செடிகொடிகளைக் கடித்துவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டிய கூடுதல் வேலையும் உங்களுடையதாகிவிடும்.

வாழ்த்துக்கள்.