வெள்ளி, 1 அக்டோபர், 2021

மார்த்தாண்ட(ன்) பூபதி என்ற சொல்.

 இதுபோழ்து மார்த்தாண்டன் என்பதைப் பார்த்து,   பின்னர்  பூபதி என்பதையும் மற்றோர் இடுகையிற் காண்போம்.

மருவுதல் வினைச்சொல்.

மரு என்பது பகுதி.  வு என்பது வினையாக்க விகுதி.   ~தல் என்பது தொழிற் பெயர்  விகுதி என்பது நீங்கள் அறிந்ததே.

மரு >  மார்.     

இதுபோல் திரிந்த வேறு சொற்கள்:

கரு > கார் >  ..     (கார்காலம்,  கார்மழை,  கார்த்திகை.)

ஓரு >  ஓர்        ..     (  எண்ணுப்பெயரும் இவ்வாறே  திரியும்.

இரு >  ஈர்.        ..    (  இரண்டு என்ற எண்ணுப்பெயர்  )

பெரு >  பேர்    ..   (  உயிர்வரத்  திரிதல்,   பெரு ஆசான் -   பேராசான்)

துரு >  தூர்  ...       ( எதையும் துருவிச் செல்ல, இறுதியில் அல்லது அடியில்              `                                    இருப்பது தூர்

பரு  >  பார்            (பருவதத்தின் அரசி பார்வதி )


மார்த்து   -   மருவுதல் உடையது  என்று பொருள்.

பிற அரசர்கள் வந்து ஒரு பெரிய அரசனைத் தழுவிச் செல்வர்.  அது அடிபணிதலோ,  கப்பம் கட்டுதலோ என, ஏற்புடையவழி நடைபெறும்.

ஆகவே,  மரு > மார் > மார்த்து..  ( மருவுதல் , மருவித்தல் என்று தன்வினை பிறவினைகளை அறிந்துகொண்டால்,   மருவித்து என்பதன் திரிபே "மார்த்து" என்பதறிக.  மற்றவர்கள் தன்னைத் தழுவி அரசு நடாத்துமாறு  இயங்கிப் புகழடைந்தவன் )

ஆண்டன்,  ஆண்டவன், ஆண்டான், ஆண்டி என்பன ஆள்தல் அடிபடையில் எழுந்த சொற்கள்.  ஏற்புடையவாறு  அரசனையும் கடவுளையும் குறிப்பன

மார்த்து  ஆண்டன் >  மார்த்தாண்டன்.

பிற பின்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


வியாழன், 30 செப்டம்பர், 2021

அத்தான் என்ற சத்தான சொல் அமைதல்

 அத்தான் என்ற சொல்லை  அதிகமாகப் பயன்படுத்தியவர்கள்  திரைத்துறையினரா அல்லது மனைவியாகி இல்லறம் நடாத்தியவர்களா என்பது தெரியவில்லை. இந்திய மக்கள் பெரும்பாலும் அகமண முறையைப் பின்பற்றிக் குடும்பமானவர்கள் என்று தெரிகிறது.  ஆனால் இந்த மணமுறை எவ்வளவு காலமாகப் பின்பற்றி வரப்பட்டுள்ளது என்பதைப்  பற்றிய ஆய்வு  செய்யப்பட்டு  நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்று  தெரிகிறது.  இவற்றில் காணப்படும் ஆய்வு முடிவுகளைக் கொண்டு,  அத்தான் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பதை விளக்க முடியாது.  இதற்குக் காரணம்,  இந்நூல்கள் சொல்லாய்வு நூல்கள் அல்ல.

மேலும் அத்தான் என்பது தமிழ்ச்சொல்லாக உள்ளது.

இது அமைந்த விதத்தை மிக்கச் சுருக்கமாகவே விளங்கவைத்துவிடலாம்.

புருடனை அத்தான் என்று அழைத்தாலும்,  புருடன் அல்லாத  ஆனால்  முறை உள்ள ஆண்மகனையும் அவ்வாறு அழைக்கலாம் என்று தெரிகிறது.  திருமணம் ஆகாத பெண்ணாய் இருந்தால்,  திருமணம் செய்துகொள்ளும்  முறை உள்ளவரையும் அவ்வாறு அழைக்கலாம் என்று தெரிகிறது.

இதப் பற்றி நீங்கள் அறிந்ததைப் பின்னூட்டம் இடுங்கள்.

அத்தை என்ற சொல்லிலிருந்து அத்தான் என்ற சொல் அமைந்திருக்கலாம் என்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேரகராதி கோடிகாட்டுகிறது. அத்தன் என்ற சொல் அப்பனைக் குறிப்பதால்,  அத்தை என்பது அதன் பெண்பால் சொல் என்பது பொருந்துவதாகிறது.

அத்தன் என்பது தகர பகரத் திரிபுண்மையால் அப்பன் என்று மாறுகிறது. மேலும் தகர சகரத் திரிபுண்மையாலும் அச்சன் என்று மாறுதலுடையதாகிறது.   வாயில் வாசல் என்று யகர சகரத் திரிபுண்மையால் அத்தன் என்பதும் அய்யன் என்று மாறுவதுடைத்தாகிறது.  அத்தனை அய்யன் ( ayya )  என்றழைக்கும் முறை மலாய்க்காரர்களிடமும் உள்ளது.   ஆனால் அன் விகுதி இல்லாமல் அய்யா என்று குறிப்பர்.

தகரத்துக்கு  டகரம் பரிமாற்றமானால்,  அத்தன் > அட்டா > டாடா > டாடி > டாட் என்று வந்துவிடும்.  வெள்ளைக்காரனும் இந்தியாவுக்கு வந்த காரணத்தால் திரிபுகளில் அவனும் பங்காளி ஆகிவிடுகிறான்.  த் என்ற ஒலியை ட என்று அழுத்தி உளைப்பது ஆங்கிலருக்கு வழக்கம்.  சிதம்பரம் என்பது சிடாம்ப்ரம் என்றன்றோ ஒலிக்கின்றனர். சிதம்பரம் பெரியசாமி  ( imagined name )   என்பதும் சிடா பெரி என்று ஆங்கிலம்போல் ஆகிவிடுகிறது.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

 

கோவிட் தகவல்

 [Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 30]


செப்டம்பர் 29, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,335 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 197 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.1%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.6%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.2%

- உயிரிழந்தோர்: 0.1%

  

செப்டம்பர் 28 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 82%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


செப்டம்பர் 29 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 2,268 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh290921