திங்கள், 27 செப்டம்பர், 2021

வருந்திய நாய்க்குட்டியை அழைத்துக்கொள்ளுதல்.


 வருத்தமோ கொண்டாய் குட்டி?

வந்துநான் அமர்ந்தேன் ஒட்டி!

அருத்துவேன்  பாலும் சோறும்,

அருகில்நான் அமர்ந்து விட்டேன்.

திருத்தமாய் முடியைச் சீவி

சீரிலே உன் தாய்   ஆக,

ஒருத்தன் நான்  போதும் வாவா

உண்மையில் நானுன் அன்பன்.


உணராத மொட்டை  ஞாலம்

ஓயாத கலகம் நீளம்!

அணர்தரு அன்பே  இல்லார்

அழிபோரை நடத்திக் கொள்வார்!

துணிவற்ற மனிதர் வேண்டாம்.

 தூணாக நிற்பேன்  வாவா!

தனியன்பு தழைக்க வாழ்வாய்

தயங்காமல் அடுத்து வாவா.!


----- என்று நாய்க்குட்டியை அழைக்கிறார் இந்த மூத்த குடிமகன்.


அரும்பொருள்:

அருத்துவேன் -  அருந்தச் செய்வேன்.

அருந்து - தன்வினை.  அருத்து -  பிறவினை.

சீரிலே உன் தாய் - உன்னைச் சீராட்டுவதிலே உன் தாய்போல

ஞாலம் -  உலகம்

மொட்டை - பண்பு இல்லாத

நீளம் - நீளமான,  தொடரும்

அணர்தரு --  உயர்வுதருகின்ற.

அணர்தல் -  மேலெழல்.  அடிச்சொல்:  அண் ( நெருங்கு )

அழிபோர் -  அழிவு ஏற்படுத்தும் போர்கள்.

துணிவு அற்ற - மனத்துத்  திடம் இல்லாத

தூணாக -  பக்க பலமாக

தனியன்பு  -  ஒப்பிலாத அன்பு.


தொடர்புடைய இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_27.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html




ஒரு நாய்க்குட்டியின் வருத்தம்

வரவேற்கவில்லை எனை யாரும் --- நான்
வந்து சேர்ந்து நிற்கிறேன் பாரும்!
துறவே மேற்கொண்டேன் போலும்  ---- எனைத்
தூரம் நிறுத்திவிட்டார் ஓரம் கட்டிவைத்தார்     (வர)

நாய்க்குட்டி  ஆகினேன் குற்றமோ----நான்
நல்லபடியே குலைப்பேன் ஒருதலைமை மதிப்பேன்,
பேய்க்குட்டியாய் என்னைப் பிறழ - -- நினைத்துப்
பேதப்படுத்துவர்  தொலைவிற் கடத்துவர்  (வர)  



இங்கு அருஞ்சொற்கள் இல்லை.  பொருள் வேண்டுமாயின்
பின்னூட்டம் செய்யுங்கள்





 

தொடர்புடைய இடுகைகள்:


விருந்தாளியாய் வந்த நாய்க்குட்டி

 ஒடுங்கி நின்றால் பூனைக் குட்டி

ஓங்கி எழுந்தால் நாயின் குட்டி!

பார்வையில் மயங்குறவே

பரமன் படைத்ததம்மா!

சீர்மேவும் அன்புதரு சின்னதொரு   குக்கல்குட்டி

சிந்தனையோ சேர்ந்திட்ட எசமான் நன்மைபற்றி!

இன்னுயிர் பொன்னுக்குட்டி இனிதாய்  வாழ்கவே.





படம்:  திரு.   க-லா  பழ,  ரூபன் அவர்கள். 


மற்ற தொடர்புடைய இடுகைகள்:


https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_78.html