ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

பிறந்தநாள் கொண்டாடிய திருமதியும் கணவரும்

 


தம்மில்தாம் மனம்பதிந்து

தம்பதிகள் தாம் இணைந்து

செம்மகிழ்வில் நனிநெகிழ்ந்து

சேர்ந்தயலார் கரையணைந்த

மம்மரிலா மண இணையர்

நமர்புகழும் ஓர்மனையர்


திருமதி ரோஷினி பிறந்த நாளில்

அவருக்கும் கணவர் பிரகாஷுக்கும்

எங்கள் வாழ்த்துகள்.


தம்மில்தாம் மனம்பதிந்து -  தாம் மனவொற்றுமையுடன்,

தம்பதிகள் - இவ்வாறு மனம் பதிந்து "தம்-பதி"களாக இணந்துவிட்ட,

செம்மகிழ்வு -  சீரான மகிழ்ச்சி.

நனி -  நன்மையான,   நெகிழ்ந்து -  அன்புகொண்டு

அயலார் கரை அணைந்த -  அயல் நாட்டில் சென்று வாழும்,

மம்மர் இல்லா மண இணையர் -   தம்முள் பேதமற்ற திருமணம் ஆன

சோடிகள்,

நமர் புகழும் -  நம் உறவினர் நட்பினர் உயர்த்திப் பேசும்,

ஓர்மனையர் - இல்லறவாசிகள்.

இவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து என்றபடி.

சனி, 18 செப்டம்பர், 2021

இரணியன் - பொருள் வலியோன்

 இரணியன் என்பது ஒரு பெயர். இப்பெயரை ஆராய்ந்தால்,  அதை " இரு + அணியன்"  என்று பிரித்துக் காணலாம்.

இரு -  பெரிய.

அணி -  அழகு.

அன் - ஆண்பால் விகுதி.

ஆகவே  இவன் பெரிய அழகன் என்பது பொருளாகிறது.


இன்னொரு வகையில் பார்ப்போம்.

இரு - பெரிய.

அண் -  அருகில் இருப்பவன்.

இ  -  இடைநிலை.

அன் -   ஆண்பால் விகுதி.

ஆகவே, இவ்வாறு நோக்கினால், அருகிலிருக்கும் பெரியவன்,  வலிமை வாய்ந்தவன் என்று பொருளாம்.


இன்னொரு வகையில்:

இர்  -   இருள்.  கரிய நிறத்தோன்.

அண் -  அருகில் இருத்தல்.

இ - இடைநிலை.

அன் -  விகுதி:  ஆண்பால்.

கரிய நிறமாய் அருகில் இருப்பவன்.


இரு என்பதை  இரண்டு என்று பொருள்கொண்டு,  இருவரின் வலிமை பொருந்தியவன் என்றும் சொல்லலாம்.

அணியன் என்ற சொல்லின்முன்  இரு என்பது ஈர் என்று திரியும் என்று கூறினாலும், பின் அது இர் இரு என்றே குறுகலும் உடைத்தாதலின், இந்த வாதத்தில் பயனில்லை.

இச்சொல் தமிழ் மூலமுடையதாயினும் பிற வழிகளிலும் பொருள்கூற இயல்வது  ஆகலாம்.

அறிக மகிழ்க.






ஆலயத்தில் ஐயப்ப பூசை

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறாள் ஔவைப்பாட்டி. அவ்வாறு செய்யாமல் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் காலையில் சென்று மதுவருந்துவதும் வெறுக்கத்தக்கது ஆகும்.  இவ்வாறு செய்வோர் குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு குற்றவழக்குகளிலும் மாட்டிக்கொள்கின்றனர். பண்டை நாட்களில் இறைப்பற்று நிகழ்வுகளில் மக்களை அரசர்கள் ஊக்குவிக்கக் காரணமே,  ஒரு மனிதனின் வாழ்வில் எப்போதும் செயல்நேர்மை கடைப்பிடிக்கும் வழிகள் போற்றப்படுதல் வேண்டும்  என்பதுதான். துயர்களுக்கு அயர்வு கொடுக்கவேண்டுமெனில் இறைப்பற்று போற்றுவது இன்றியமையாததே  ஆகும்.

ஐயப்ப பற்றர்கள் விருந்தோம்பலிலும் சிறந்து விளங்குகின்றனர். 







 இந்தக் காணொளி எங்கு  எடுக்கப்பட்டது என்றோ எப்போது என்றோ தெரியவில்லை.  ஐயப்ப பற்றர்கள் செய்த ஒரு பூசையின்போது எடுக்கப்பட்டது என்பது புரிகிறது. உங்களுக்குத் தெரிந்தால் பின்னூட்டம் செய்யுங்கள்.  இதை எடுத்தவர் குறுஞ்செய்தி அனுப்பி இதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.  இறைப்பற்றினைப் பகிர்ந்துகொள்ளுவோம்.

அனுப்பிவைத்தவர்:  திருமதி லீலா சிவா.