சனி, 18 செப்டம்பர், 2021

உயரமான கட்டிடங்களில் வாழ்கிறவர்கள்

 







வான்பதி இதுவென லாமே அடுக்குகள்

கூன்சிறி திலவென   மேலே எழுந்தன

மேம்படு மக்களே வாழ்வோர் இவற்றினில்

தாம்பெறு இன்பினைப் பாடாக் கவிகளே.


உயரம்  மேவிய கட்டிட வாழ்வினர்

அயர்வு கொள்பொழு தொட்டிய பஞ்சணை

உயரத்  தெண்ணமே எட்டாது நெஞ்சினை

நயமே நாளுமே  உற்றன  காண்பிரே


வான்பதி -  ஆகாய நகரம்

கூன் - வளைவு

மேம்படு - சிறந்த

தாம் பெறு - தாங்கள் பெற்ற

மேவிய - உள்ள

வாழ்வினர் - வாழ்கிறவர்கள் 

அயர்வு - உறக்கம்

ஒட்டிய - படுத்து உறங்கிய

எட்டாது - இவ்வளவு உயர்த்தில் உள்ளோமே என்ற பயமோ எண்ணமோ

ஏற்படாது

நயமே -  நன்மைகளே

நாளுமே - தினமும்

உற்றன - ஏற்பட்டன


.

ஐயப்ப மகிமை miracle

 பிப்ரவரி 2021 வாக்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்,  கொதிக்கும் நீரையோ எண்ணெயையோ  ஐயப்ப பற்றர்கள் தங்கள் மீது வீசிக்கொள்கிறார்கள். யாரும் பாதிக்கப்படவில்லை என்று படத்தின்மூலம் தெரிகிறது.  இப்பற்றின் மகிமையை இஃது பறைசாற்றுவதாக இருக்கிறது.



இது எங்கு நடந்தது என்று தெரியவில்லை. பதிப்புரிமை உள்ளவர் எங்களைத் தொடர்பு கொண்டால், அவர்கள் வேண்டுகோள்படி இது நீக்கப்படலாம். குறுஞ்செய்தி அனுப்பவும்.  அறிந்தோர் பின்னூட்டம் செய்வீராக.

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

முதியோர்க்கு வழிதந்து உதவுங்கள்

 கொஞ்ச காலமாகவே கோயில்களில்  முதியோருக்காக நல்ல வசதிகள் செய்துதரப்படுகின்றன. இங்கு காணப்படும் ஒரு படத்தில், ஒரு முதியவர் நாற்காலியில் அமர்ந்தபடி கோவிலில் சாமி கும்பிடுகிறார். பேருந்துப் பயணத்தின்போதும் தொடர்மின்வண்டிப் பயணத்தின்போதும் முதியவர்கள் அமர்ந்து பயணம் செய்ய  இளையோர் வழிவிட வேண்டுமென்னும் சட்டம் அல்லது ஏற்பாடு சிங்கப்பூரில் இருக்கிறது.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகத் தொடக்கத்தில் உழைத்தவர்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது ஒரு சித்தாந்தமாகவே  இங்குத் தொடர்வது பாராட்டுக்குரியதாகும்.