ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பரிந்து மள்குவது பரிமளம் [ தாமரை]

 ஒரு பெண்ணிற்குப் பரிமளா என்று பெயர் வைத்திருந்தால் அது அருமையான பெயர் என்பது உங்களுக்குத் தெரியுமே!  பரிமாளம் என்றால் தாமரை என்று பொருளாவதால் இது பொருளிலும் அழைப்பதற்கும் நல்லது ஆகும்.  இது எப்படித் தாமரையைக் குறிக்க எழுந்தது என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.

வடுப்பரியும் நாணுடையான் என்று குறளில் வருகிறது.  இங்கு அஞ்சுதல் என்பது பொருள். பையிலிருந்து காற்றுப் பரிகிறது என்பது காற்று வெளிப்படுகிறது என்று பொருளாகும். இன்னும் பலவாதலின் இது பல்பொருளொரு சொல்.

பரவுதற் கருத்தின் அடிச்சொல்லாகிய பர என்பதினின்று  பர> பரி என்று இச்சொல் அமைந்தது தெளிவாகும்.  பரவுதல் ஓரிடத்திருந்து இன்னோரிடம் சென்று வைகுதல் அல்லது இல்லாததாதல் என்று பொருளாம் என்பதால், பரி என்பதிலும் அப்பொருள் உள்ளது. அஞ்சுபவன்  தன் திடநிலையிலிருந்து மாறியே அச்சநிலையை அடைவதால் அங்கும் மாறுதற் கருத்து உள்ளது.

தாமரை இதழ்கள்  மூடியிருந்த மொட்டு நிலையிலிருந்து விரிநிலை எய்துவதால் இதுவும் இடமாற்றமே காட்டுகிறது.  ஆகவே பரிதல் என்பது ஈண்டும் பொருந்துவதாகும்.  ஆகவே பரிமளம் என்பதில் பரி என்பது பொருந்திவிட்டது.

இனி மளம் என்பது.  மள்குதல் என்ற வினைச்சொல் குறைதல் என்று பொருள் படும்.  பின் தாமரை இதழ் தன் விரிவு குறைந்து மூடிக்கொள்வதால்  மள் >  மளம் ஆகிறது.  மள்குதல் என்ற வினைச்சொல்லில் மள் என்பதே அடிச்சொல். கு என்பது வினையாக்க விகுதி. மள் என்பது மட்டம், மட்டுறல் என்பவற்றிலும் அடிச்சொல் என்பது காண்க.

விரிதலும் (பரிதலும் ) குறைதலும் உடையது அவ்விதழ்கள். ஆதலின் பரிமளம் என்பது தமரைக்குப் பொருத்தமான பெயராகிவிட்டது.

இவ்வாறு தாமரைக்கு மொழியில் ஏற்பட்ட இன்னொரு பெயர்,  அதனின்று பரியும் மணத்தைக் குறித்து,  பின்னர் பொதுவான மணமென்னும் பொருளில் வழங்கிவருகிறது.  தாமரையைக் குறிப்பது சொல்லாய்வில் போந்த தெளிவு ஆகும். எல்லாவகை மணங்களும் முதலில் விரிந்து பரவி பின்னர்ச் சுருங்கி ஒழிதலுண்மையின்,  அது மணத்திற்குப் பெயராகிவிட்டது. இதழ் விரித்தலும் சுருங்குதலும் மணம் விரித்தலும் சுருங்குதலும் ஒப்புமை உடைமையினால் இது நிகழ்ந்தது.

வேறு வகைகளில் விளக்கம் தருவதாயின் பின்னூட்டம் செய்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 11 செப்டம்பர், 2021

காக்கா காக்கை ஆனது

 கை என்று முடியும் சொற்களில் அஃது  இறுதியோ   (கை)  என்று ஆய்ந்தோய்ந்து பார்க்காமல் முடிவு செய்தல் சரியன்று.  சிலவேளைகளில்  கை என்று முடிந்தாலும் அது விகுதியன்று என்றே  முடித்தல் சரியாகும்.

மக்களால் காக்கா என்று  சுட்டப்படும்  இந்தப் பறவை, கா --- கா என்றே ஒலியெழுப்பி மக்களிடம் அப்பெயரைப் பெற்றது.   அதை விரும்பி  அதற்குச் சுற்றுச் சுவரின்மேல்  சோறிட்ட இல்லத்தரசிகளை யாம் பார்த்ததுண்டு.  யாம் வீட்டுக்குள் சோறுண்பது எப்படித்தான் இந்தக் காக்கைகளுக்குத் தெரிகிறதோ,  அவை கா   கா என்று   கத்தத் தொடங்கிவிடுகின்றன.  அவற்றுக்கு இரக்கப்படவேணும்தான்.

மக்கள் அதற்கு நிறத்தை அடிப்படையாகக் கொண்டு பெயரிடமால்,  அது செய்யும்  ஒலிகொண்டு பெயரிட்டமை,  ஓர் தீரமான அறிவுத்திறனையே   பளிச்சிடுகிறது.  பறவைகளை நிறத்தால் பாகுபாடு செய்தல் ஆகாது.  அப்படி மனிதன் செய்தல் அவன் புத்தி கெடுதலை நோக்கிச் சென்றிறங்கிவிடும் எனப்பாலதற்கு  முன்வரவுக் குறியாகிவிடும்.

காக்கா + ஐ >  காக்கை ஆகும்.  காக்கா என்ற ஒலிக்குறிப்பில் உள்ள ஆ என்ற கடைப்பாகத்தை எடுத்துவிட்டு   ஐ விகுதி புணர்க்க,   காக் + ஐ  >  காக்கை என்பதே சரி.  வாத்தியார் இதனை கா+ ஐ என்று பிரித்தால் சரியாகாது.  கா காஎன்பதை இணைத்து இடை ககர ஒற்று புணர்ச்சியினால் வந்ததெனினும், காக் என்று நிறுத்துவதே சொல்லியலுக்கு ஏற்றது.  இலக்கண்த்துக்கு,  காக்கா+ ஐ >  காக்கை என்றாக்கி  ஒரு கா கெட்டது என்று சொல்லிவிடலாம்.  சிலர் காக்கா >  காக்கை என்பதுடன் நிறுத்திக்கொள்வர்.

இதனைத் தாக்கி எழுதுங்கள்  பார்க்கலாம்.

தக்கை என்பதில் கை விகுதியா?   பகுதி எது?


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

நெய்தல் நிலம் - நெய்தல் என்பதன் பொருள்.

 

இன்று நெய்தல் என்ற சொல்லைக் கவனிப்போம்.

நெய் என்பது வெண்ணெய் என்படை உருக்கிக் கிடைப்பதாகும்.  இச்சொல்லின் அடிப்படைப் பொருள் உருகி ஒன்றாவது, கலப்பது, பிணைப்பது என்பனவாகும்.

நெய் > நெயவு > நெசவு  இதில் பஞ்சுநூல் கலந்து  துணி செய்யப்படுகிறது. கலப்பு, கலந்து ஒன்றாவது என்பது அடிப்படை.

நைதல் என்பதில் பொருள் நசுக்கப்பட்டு ஒன்றாவது அடிப்படைப் பொருள். இங்கு உருவம் அழிந்து வேறுரு உண்டாவதைக் குறிக்கிறது.

நெய் > நெய் + அம் >  நேயம்.  இது உள்ளங்கள் ஒன்று கலந்து நட்பு ஏற்படுவது குறிக்கப்படுகிறது.  இங்கு முதனிலை நீண்டு சொல் அமைந்துள்ளது.

நெய்தல் என்பது ஒரு திணையின் பெயராகவும் உள்ளது.  நெய்தல் நிலம் என்பதும் காண்க.  இந்நிலத்தில் கடல் பகுதியும் நிலப்பகுதியும் கலக்கிறது அல்லது இணைகிறது.

எனவே நெய்தல் - கடலும் நிலமும் கூடுமிடம் என்ற பொருள் தெளிவாகிறது.

நெரு என்னும் அடிச்சொல்லும் நெய் என்னும் அடிச்சொல்லும் தொடர்புடையன.  

( நெர்)  -  நெய்.     நெர் >  நெரு.      (  ஒப்பு:  விர் > விய்.)

நெர் > நெரு > நெருங்கு. > நெருங்குதல்.

இதனோடு ஒப்பு நோக்குக:

விர் >  விரி > விரிதல்,  விரிவு.

விர்  >  விய். > வியன்.

விரி > விரிசல்.      விய் > விசு > விசும்பு.  

விசு > விசு + ஆல் + அம் =  விசாலம்.

விர் > விருத்தம் ( ஒரு பாடல்)  விரிவான பாடல் 

அடிச்சொல்லை அல்லது மூலத்தைக் காட்டாமல் விரி> விரித்தம்> விருத்தம் எனினும் இழுக்காது என்பதறிக.  இகரம் உகரமாம் இடனுமாருண்டே.

மேலும் ஒப்பறிக:

மர் >  மய்

https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html


அறிக மகிழ்க.


மெய்ப்பு  பின்னர்.

[  தமிழ் மென்பொருள் சரியாக வேலை செய்யவில்லை.  அதனால் இந்த இடுகை சுருக்கமாகவே எழுதப்படுகிறது ]