புதன், 25 ஆகஸ்ட், 2021

விலாசம் என்பதென்ன? பெயர் என்பதென்ன?

 ஒரு  மனிதனுக்குப் பெயர் என்பது மிக்கத் தேவையானது ஆகும். இதனாலே பெயர் என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் நாளடைவில் மக்களிடையே ஏற்படுவதாயிற்று.  பெயர்தலாவது ஓரிடத்தினின்று இன்னோரிடம் செல்லுதல். இதிலடங்கிய கருத்தை, ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனைப் பெயர்த்து அல்லது வேறுபடுத்தி அறிய உதவுவது என்று விரிவுபடுத்தினர். எவ்வளவு சிறிய இடமாயினும் ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து அப்பால்தான் இருக்கமுடியும். ஒருவனின் கால்வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னொருவன் கால்வைக்கமுடிவதில்லை. அதற்குப் பக்கத்தில் கால்வைக்கலாம், இதன் காரணமாகப் பெயர்த்தறிதல் என்பதைத் தமிழன் கூர்ந்துணர்ந்துகொண்டான். இடப்பெயர்வு போன்றதே மனிதக் குறிப்பின் பெயர்வும் ஆகும்.  ஆதிமனிதற்கு மிகுந்த அறிவு இருந்தது என்பது இதனால் புரிந்துகொள்ளமுடிகிறது. The space occupied by an individual  on ground can only be taken up by one person at a time. Different persons occupying the same place at different times must be differentiated. 

ஒருவன் தன் வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் வாழ்கிறான்.  இன்னொருவன் அதற்கு  அடுத்துக் கட்டுவான்.  இப்போது உள்ள அடுக்குமாடி வீடுபோல், அதே இடத்தில் முற்காலங்களில் வீடமைக்கும் வழக்கமோ திறனோ வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டைப் பெயர்த்தறிதல் நடைபெறவே செய்தது.  வீட்டுக்கும் பெயரிட்டுக் குறித்தான். அந்தப் பெயர்,  அழகாக, "நீவாசம்" என்றோ  " அக்காவீடு" என்றோ இருந்திருக்கலாம். பெயர்ப்பலகை போடாமல் குறிப்பிட்டு அறிந்துகொள்வது  " அக்காவீடு"  என்பது.  மாமாவீடு என்பது வேறுவீடு.  இதன்மூலம், மாமாவீடு என்பது அக்காவீட்டிலிருந்து " விலக்கி"  அறியப்பட்டது.  விலக்குதலுக்கான இந்த சிந்தனைத் தெளிவு 'பெயர்" என்பதன் தன்மையை உணர்ந்ததனால் ஏற்பட்டதாகும். 

இவ்வாறு விலக்கி அறிய ஏற்பட்டதுதான் விலாசம் என்பது.  வில என்பது அடிச்சொல். ஆசு என்பது விலக்க ஆவதான பற்றுக்கோடு ஆகும்.  ஆகவே வில+ ஆசு+ அம் = விலாசம் ஆகும்.   நல்ல தமிழ்ச் சொல் என்று அறிந்து,  உங்கள் மாணவர்களுக்கோ கேட்பவர்களுக்கோ விளக்கிச் சொல்லுங்கள். பிற்காலத்தில் இது முகவரியைக் குறித்தது.  கடைகள் முதலிய இடங்களுக்கு இடப்படும் குறிப்புச்சொல்லையும் முன்நிறுத்தியது.  விலாசம் என்பதை விலாஸ் என்று பலுக்கினால் அது பிற சொல்லைப் போல் தெரியும்.  அன்று என்று அறிக.

ஆசு என்பது முண்டாசில் கூட இருக்கிறதே. முண்டு என்பது துண்டுத்துணி. முண்டு ஆசு முண்டாசு.

வில்லிருந்து அம்பு புறப்படுகிறது.  அம்பை விலகிச் செல்ல உதவுவதே வில். வில் என்பது இங்கு அடிச்சொல் -  பிரிந்து சொல்லுதல் குறிக்கும்.  இதிலிருந்து விலகுதல் என்ற சொல் ஏற்பட்டது.  விலாசம் என்பது இவ்வடியிற் பிறந்ததுதான்.

வில்லா என்ற இலத்தீன் சொல்லும் இதனோடு தொடர்புடைய இரவல்தான். வில்லாக்கள் தனித்தனியான மாளிகைகள்.

வங்காளத்தில் தாம் கண்ட வளையல்களை  வங்காளம் > பங்காள் > பேங்கள் என்று குறித்த ஆங்கிலேயனும் கெட்டிக்காரனே.

வில் ஆசு அம் என்பது வில்லாசம் என்று லகரம் இரட்டிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்,  ஒரு லகர ஒற்றை இடைக்குறைத்து விளக்கலாம்.  உங்கள் மனநிறைவுக்கு.  எம் சிந்தனையில் அது தேவையில்லை.

விலகி விலகி அமைந்த உடற் பக்க எலும்புகள் விலா என்ற பெயர் பெற்றன. ஒரு மனிதனிடமிருந்து ஏதேனும் பெற்றுக்கொண்டு அடுத்தவனிடம் சென்ற பொருள்  வில்> வில்+தல் > விற்றல் ஆனது.  வில் > விலை.  வில் பு அன் ஐ > விற்பனை.

ஒரு சொல்லமைவது,  அந்த அமைப்புச் செயலின் முன்நிற்போனையும் அவன்றன் சுற்றுச்சார்பினையும்,  அவன் சிந்தனையையும்  சிறிதளவு அவன் சார்ந்துள்ள மொழிமரபினையும் நிலைக்களனாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.  எடுத்துக்காட்டாக பெயர்தல் என்ற சொல் அவன் சிந்தைக்குள் வரவில்லை என்றால்,  "வேறு" என்பதையே அவன் எண்ணிக்கொண்டிருந்திருப்பான் என்றால், பெயர் இட்டுக்கொள்ளப்படுவதன்று, ஆடைபோல் உடுத்துக்கொள்ளப்படுவது என்று கருதிக்கொண்டிருந்திருப்பான் என்றால்  அவன் அமைக்கும் சொல்:  வேறுடை என்று வந்துவிடும். உடுத்தும் உடையைக் குறிப்பதால் சரியில்லை, அடை என்பதே சரி என்று அவன் மனைவி சொல்கிறாள் என்றால் அதை அவன் வேறடை என்று மாற்றிக்கொள்வான்.இதில் இன்னும் கருதுவதற்கு இடமுள்ளது. இத்துடன் நிறுத்துவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கசானா கஜானா (கருவூலம்)

கஜானா  காலி என்னும் தொடர் மக்களிடையே பெரிதும் வழங்குவதொன்றாம். இதை முன் ஆராய்ந்தவர்கள் இச்சொல் உருதுமொழியில் வழங்கித் தமிழுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.  உருதுமொழி தமிழ்நாட்டுக்கு வடபால் பேசப்பட்டது என்பதை நாம் அறிவோம்.  இது முஸ்லீம் மக்களிடையே வழங்கி வளர்ச்சி பெற்றது. இம்மொழியில் அரபுச் சொற்களும் பல உள்ளன.

கஜானா என்பதற்குத் தமிழில் தொன்றுதொட்டு வழங்கும் சொல்:  கருவூலம் என்பது.

பிற்காலத்தில் வழக்குக்கு வந்து வளர்ச்சியடைந்து இனியன என்றும் பேசுவோரால் பாராட்டப்படும் மொழிகள்,  தமக்கு வேண்டிய சொற்றொகுதிகளை முன்னரே வழங்கிவந்த பழைய மொழிகளிலிருந்து மேற்கொண்டன என்பது தெளிவு.  பழைய மொழிகளின் சொற்களை எடுத்துத் திரித்து தமக்கு வேண்டியவாறு ஆக்கிக்கொள்வதைத் தவிரப் புதுமொழிகட்கு வேறுவழியில்லை. 

மரித்தல், மரணம் என்ற சொற்களிலிருந்து "  மாரோ " என்ற சொல்லைப் படைத்துக்கொண்டமை போலவேயாகும்.  மாரோ - இறப்பைக் குறிக்கிறது. இதேபோல் ஈரானிய மொழியிலிருந்து எடுத்தாளும் வசதி அவைகளுக்கு இருந்தது.

கஜானா என்ற சொல்லை முன்னிருந்த மொழியிலிருந்து பெற்றனர். தமிழ் முதலியவை முன்னிருந்த மொழிகள்.

செய்த சேவைக்கோ, விற்கும் பொருளுக்கோ விலையைப் பெற்றுக்கொண்ட பின்,  பணத்தைப் பெட்டியில் போடுவர்.  

விற்பனையில் காசு ஆனால் அதைப் பெட்டியில் போடுவது வழக்கம். 

காசானா(ல்)  பெற்றுப் பெட்டியில் போடு என்பது குறுகி காசானாப் பெட்டி என்றானது.  காசானா என்பது பின்னர் மெருகேறி கஜானா ஆனது.  இவ்வாறு சேர்த்து வைக்கும் பெட்டி கஜானா ஆகி,  பெட்டிக்குக் கஜானா என்பதே பெயருமானது.   பணம் சேமித்த பெட்டி ஆனதால், சேமிப்புக்கும் அதுவே பெயரானது.

வறுத்த முந்திரிக்கொட்டை விற்றுக்கொண்டிருந்த ஒரு மலையாளிப் பெண்ணிடம் ஒரு வெள்ளைக்காரர்  என்ன இது என்று கேட்க,  விலையைக் கேட்கிறார் என்றெண்ணிய பெண்,  காசினெட்டு   ( காசுக்கு எட்டு எண்ணம்) என்றாள்.  அதுவே " காஷியுனட்"  என்று அதற்கு ஆங்கிலத்தில் பெயராகிவிட்டது என்பது நீங்கள் அறிந்திருக்கலாம். 

ஒம்னிபஸ் என்றால் இலத்தீனில் எல்லாருக்கும் என்பது பொருள். அதுவே பின் குறுகி பஸ் என்று ஆயிற்று. இச்சொல்லில் பஸ் என்பது ஒரு வெறும் விகுதி.

கசனா அல்லது கஜானா என்பது அழகான சொல்தான்.


அறிக மகிழ.

மெய்ப்பு பின்.




ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

திருவும் திருப்தியும் திரட்சியும்,

முன்னுரை:

 திருவென்பது தமிழில் உயர்வு என்று பொருள்தரும் சொல். ஆனால் இந்த உயர்வு என்னும் தன்மை அச்சொல்லுக்கு வந்ததற்குக் காரணம், நல்லது திரண்டுவருதல்தான். திருவென்பது ஓர் உருவற்ற, மனத்தால்மட்டும் அறியத்தக்க பண்பினைக் குறிக்கின்றது. ஆயின் திரட்சி என்பது உருவுள்ள ஒரு பொருள் தன்போல் உருவுள்ள பிறவற்றுடன் ஒன்று சேர்ந்து காட்சிதருதலையும் உற்றுணரத் தருதலையும் குறிக்கின்றது. எடுத்துக்காட்டு :  பாலில் நெய் திரளுதல்.  அல்லது மண்ணிற் பொன் திரளுதல்.  இவ்வாறு கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருந்தது முயற்சியால் திரட்சியாவதிலிருந்தே திருவில் உயர்வுக் கருத்துத் தோன்றியது.  திரட்சி என்பது அரும்பொருள் திரளுதல். பின் திருவென்பது அதற்கு உண்டான மதிப்பீடு ஆகும். இவற்றுக்கு அடிச்சொல் "திர்" என்பதே.  உண்மையில் திர் என்பதில் உகரம் சேர்ந்து திரு என்றானது சாரியை என்றே கூறவேண்டும். என்றாலும் அது அடியிலிருந்து ஒரு சொல்லுருவைத் தருவதால் அதை ஒரு விகுதி எனல் தக்கதாம்.

ஈறு,  விகுதிகள்:

திர் >  திரள் > திரள்தல். அல்லது திரளுதல். இங்கு ள் என்பதில் வரும் உகரம் (  ள் >ளு)  சாரியை ஆகும்.  திரள்+ சி = திரட்சி.

திர் > திர்+ உ > திரு.

ஒன்று மற்றொன்றாவதைத் திரிதல் என்பர்.

திர் > திரி  ( திர் + இ).

பெரும்பாலும்   அள் ( திரள் ),  திரு ( உ)  மற்றும் திரி ( இ ) என்பனவற்றை நாம் விகுதியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் திர் என்பது ஒரு வேர்  ஆகும். அடிச்சொல்லிலும் முந்தியதை வேர் என்று சொல்லவேண்டும், சொன்னால் வேறுபடுத்த எளிதாகவிருக்கும்.

வினையாக்கம்:

அள் என்பது வினையாக்க விகுதி.   வினையாக்கத்திற்கு உதவும் விகுதிகளை முன்பு பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  இப்போது இனியும் ஓர் உதாரணம் தருவோம்.  வறு என்ற அடியுடன் அள் சேர்ந்து வறள் ஆவதும், இவ்வேவல் வினை பின்னர் ~தல் விகுதி பெற்று வறள்தல் ஆவதும் காணலாம்.  வறு>  வறுத்தல் என்று வறு வினைப்பகுதியாக ஈண்டு வந்தது. வறட்சியே அடிக்கருத்தாயினும்,  வறள்தல் (வரளுதல்) என்பது நீரின்மைகொள்ளுதலைக் குறித்து பொருள் வேறுபட்டதையும் அறிக.

உருவிலதாய மதிப்பீடு

எந்த ஒன்றிலும் அதனால் மனமகிழ்வு தோன்றுமாயின், அது திருவினை வரப்பெற்றது எனலாம். அம் மனமகிழ்வே மதிப்பீடு  ஆகும். திருவென்பதே ஒரு ஸகர ஒற்று முன் தோன்றி,  ஸ்திரு> ஸ்திரி  > ஸ்ரீ  ஆனது. முன் இல்லாதது புதிதாக வருமாயின் அது தோன்றல். ஒன்று பிறவொன்றாகுமாயின் அது திரிதல்.  ஸ்திரி என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லும்  ஒரு தோன்றலும் பிறிது திரிதலும் உண்டான சொல்லாகும்.  ஸ் + திரு + இ என்று பிரித்துக் காட்டி இகரம் ஒரு விகுதி எனினும் இன்னும் தெளிவாகும்.  திருவென்பதன் ஈற்று உகரம் கெட்டு ஓர் இகரம் ஏறிற்று.  ஆகவே ஸ்திரீ என்னும் பெண் குறிக்கும் சொல்லில் பெண்ணின் உயர்வு  ஓர் உட்பொதிவு எனல் தக்கதாம்.

இவ்வுயர்வினைத் தமிழால் விளக்கினால் மட்டுமே அறியத் தருமென உணர்க.

மனமகிழ்வு என்பது நிறைவினால் உண்டாகும். எனவே ,மனநிறைவு திரு என்ற சொல்லிலே அமைந்தது அது உயர்வானது என்பதை நமக்குக் காட்டும். இச்சொல் முன்னர் திருத்தி என்றே இருந்தது சொல்லின் தெரிகிறது.  ஆயினும் திருத்தி எனல்,  ஓர்  எச்சவினை போலிருப்பதால் அதைத் திருப்தி என்று மாற்றியுள்ளமை அறியத்தகும்.

முடிவுரை

இந்தத் திருப்திச் சொல் சங்கததிலும் சென்றேறியுள்ளது.  அங்கும் இதே பொருளைத் தருகிறது.  இதுவேயன்றி, சங்கதத்துக்கு மனநிறைவு குறிக்கும் வேறு சொற்களும் உள்ளன.  பாலில் நெய்போல மனவுணர்வும் திரளும் தன்மை உடையது என்பதில் மாற்றுக் கருத்து இலது.  ஆயினும் உருவின்மையால் இத்திரட்சி மனத்தால்மட்டும் அறியத்தக்கது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்