புதன், 18 ஆகஸ்ட், 2021

வீட்டுக் கவிபாடி வெட்டிக்கிருமியை விரட்டி அடியுங்கள்.

 எப்போது வந்தாலும் தென்றல் தென்றல்

எப்போதோ வந்தாலும் சூறை வேறாம்

இப்போது வந்ததுவோ  நோயின் நுண்மி!

இதுநம்முள்  ஒட்டுவதால் நன்மை கம்மி.

நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே

நந்தமிழிற் கவிபாடி வாட்டம் இல்லாப்

பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின்

புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர். 


எப்போது வந்தாலும் தென்றல் தென்றல் - தென்றல் என்பது எப்போது வீசினாலும்  அது இனிமைதான்; முதல் சொல் தென்றல் என்பது தென்மென் காற்று என்பது.  இரண்டாவது தென்றல் இனிமைப் பொருளது.

எப்போதோ வந்தாலும் சூறை வேறாம் --- அடிக்கடி வராத புயல் என்பதில்

இனிமை இல்லை,  அது துன்பமே.  வேறாம் - இனிமையிலிருந்து வேறு படுவதாம்,  அதாவது துன்பமே.

இப்போது வந்ததுவோ  நோயின் நுண்மி! --  இக்காலத்தில் நம்மிடையே வந்துள்ளது  வைரஸ்

இதுநம்முள் ஒட்டுவதால் நன்மை கம்மி. --  இது  நம்மை ஒட்டிக்கொள்ளுமாயின் இதனால் நன்மை மிகக் குறைவு.  பிழைத்துவிட்டால் ஒருவேளை நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், அது ஒரு குறைந்த நலமே.  வழுக்கியும்  விழாதது போல.

நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே--  வருங்காலத்தின் நல்ல பொழுது உள்ளது; நீங்கள் வீட்டினுள்ளே இருந்து,

நந்தமிழிற் கவிபாடி -  நமது தமிழில் கவிகள் இயற்றி, 

 வாட்டம் இல்லா  - கெடுதல் இல்லாத,

 பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின்  - இவ்வுலகத்தில் பொன்னான பொழுதாய் அதை மாற்றிவிடுங்கள்.

வருங்கால மக்களுக்கு நல்ல கவிதைகளாவது கிடைக்குமே!

புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர். ---  புன்மை மகுடமாகிய கொரனாவைப் பொன் மகுடமாக மாற்றி இன்பம் சேருங்கள்.

புன்மை-- இழிவு.

புன்முடி - இழிமுடி, கொரனா.

( If a compose copy of this post is in circulation anywhere, it is an error. Please reload to obtain the correct output )






செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

பற்றும் பக்தியும்.

 பற்றுக பற்றற்றார் பற்றினை என்ற குறளை நாம் செவிமடுக்குங்கால், பக்தி என்ற சொல் நம் மண்டைக்குள் அந்நேரத்தில் புகுவதில்லை. இரண்டும் ஒரே சொல்லின் வெவ்வேறு வடிவங்கள் என்று நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. குளிர்நீர்க் கட்டிகள் இட்டு எலுமிச்சைப் பழச்சாறு அருந்தும்போது,  குளத்து நீர் நம் நினைவுக்கு வராததுபோலத்தான் இது.  இரண்டும் ( குளிர்நீர்க்கட்டியும் குளத்து நீரும் ) எல்லாம் தண்ணீரின் வடிவங்கள் தாம். பக்தி என்ற சொல், பற்று என்பது பயணித்துச் சென்று அடைந்த வடிவவேற்றுமையை உடையதாய் இலகுவது என்பதை உணரக் கொஞ்சம் முயற்சி தேவைப்படுகிறது.

பற்று என்பது பல்+து என்ற சொற்பகுதியும் விகுதியும் இணைந்த சொல்லாகும். பற்றுதல், பற்றிக்கொள்தல்  என்ற வினைகள் இச்சொல்லிலிருந்துதான் தோன்றின. இதன் மூலச்சொல் புல்லுதல் என்பது.  புல்லுதல் என்றால் பொருந்துதல்.  நல்வினைப் பயனால்,  இந்த முந்துவடிவங்கள் இன்னும் இழக்கப்படாது தமிழில் இன்றுகாறும் இலங்குகின்றன.

பற்று என்ற சொல், இகர விகுதி பெற்றுப் பற்றி >பத்தி என்றானது.   பத்தி என்பது நூற்புகவு பெற்றுள்ளது என்ற போதிலும் பற்றி என்பது தொழிற்பெயராய் எங்கும் காணப்படாமைக்குக் காரணம்,  பற்று என்பது நன்கு ஊன்றி வழக்குப் பெற்றுவிட்டமைதான். பத்தி என்பது ஒரு காலத்தில் பேச்சு வழக்கில் இருந்து மறைந்தது என்று தெரிகிறது.  இன்று யாரும் பத்தி என்றால் அது ஊதுபத்தியைக் குறிப்பதற்காக இருக்கும்.  பத்தி என்பது திருமுறைகளில் வந்துள்ளது.  அது பற்றி அல்லது பற்று என்பதன் பேச்சு வடிவத்திலிருந்து போந்ததே என்பது விளக்கவேண்டாதது ஆகும்.  சிற்றப்பன் என்று சொல்லாமல் சித்தப்பா என்றுதான் சொல்கிறார்கள். அதுபோல் பத்தி என்றுதான் ஒருகாலத்தில் சொல்லியிருப்பர். பற்று அல்லது பற்றி என்பது எழுத்து வடிவம் என்பது தெளிவு.

பத்தி என்பது பக்தி என்று மிடுக்கு வடிவத்தை அடைந்து இன்றும் வழக்குப் பெற்றுள்ளது.  இது ஒருவேளை வட இந்திய மொழிகளின் தாக்கமாகவே இருக்கவேண்டும்.  தமிழிலும் அது நல்ல வழக்குப் பெற்றுள்ளது. முதிர்ந்த உணர்வுநிலை முக்தி எனபது நீங்கள் அறிந்ததே.  அதுவும் இறையன்பில் முதிர்நிலையைக் குறிக்கிறது.  ஓர் அரசன் இறையன்பு முதிர்நிலை கொண்டதை  " ராஜமுக்தி" என்ற பெயரில் எம்.கே. தியாகராச பாகவதர் திரைப்படமாகத் தயாரித்திருந்தார்.  வட இந்திய ஆடை அணிந்திருந்தாலும் தமிழன் தமிழ்னே.

பற்று > பற்றியே இக்காலத்தில் பக்தி ஆகியுள்ளது.  மூலமொழி தமிழே ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வை: வசம்; வாய்: வசம்.

 மனிதராயினும் மற்ற விலங்குகள் ஆயினும் சில சூழ்நிலைகளில் வசமிழந்து தம்போலும் மற்றொரு பிறவிக்குப் பணிந்துவிடுகின்றன(ர்) . இதை வசம் என்று முன் கூறும்வழியே கூறுகிறோம்.

வசம் என்ற சொல்லுக்கு வை என்பதே அடிச்சொல்.

வை -  சொல்லாக்க நெறி நிற்குங்கால் வய் என்று வரும்.

வய் >  வய்+ அம் > வயம்.

யகர சகரப் போலியால்  வயம் > வசம் ஆகும்.  ( ய - ச).  வாயில் -  வாசல் போல.

வை என்பது மேற்குறித்தவாறு வய் என்று ஒலியொற்றுமைத் திரிபு அடையாமல் வை என்றே நின்று  அம் விகுதி பெறுவதுமுண்டு.  அப்போது:

வை > வை+ அம் > வையம்  ஆகும்.  அப்போது வைக்கப்பட்டதான உலகம் என்று பொருள்படும்.  இறைவனால் வைக்கப்பட்டது,  இயற்கையால் வைக்கப்பட்டது என இருவகையாகவும் பொருள்தெரித்துக் கொள்ளலாம்.  தெரிதல்> தெரித்தல் (பிறவினை).  தெரித்தல் என்பது தெரியும்படி செய்தல். தெரிவித்தல் - பிறர் தெரிந்துகொள்ளுமாறு செய்தல்.

வையம் என்பது அம் விகுதி கொள்ளாமல் அகம் என்னும் விகுதி பெற்று வையகம் என்றும் வரும்.

ஒரு பொருளை ( பழத்தை ) எடுத்துக் குரங்கினிடம் வைத்தால்,  பழம் குரங்கின் வசமானது என்க.   ஆகவே வசமென்பது  ஒன்றன்பால் அல்லது ஒருவன்பால் வைக்கப்பட்ட நிலை.  தானே தன்னை வைத்துக்கொள்வதும் பிற ஆற்றலால் வைப்புறுவதும் அடங்கும்.

உயிர்கள் ஓரு கவர்நிலையில் வைக்கப்பட்டுக் கிடக்கும் பருவமே வசம்+தம் ஆகும்.   இங்கு தம் என்பது து+ அம் கலவை விகுதி.   வசம் + து + அம்.  வசத்ததாகி அமைதல்..   வசம் +து : வசத்தது (ஆகி)  அம் - அமைதல், விகுதியும் ஆகும்.  து  இடைநிலை எனினுமது. 

மாலை நேரம் உயிர்களை வயப்படுத்துகிறது. வயந்த ( வசந்த) காலமும் வயம் செய்கிறது. 

இனி வாய் என்ற சொல்லாலும் இதையே விளக்கலாம்.

வாய்  - இது இடம் குறிக்கும்.  எ-டு: தோற்றுவாய் :  தோன்றுமிடம்.

ஓரிடத்து வைப்புற்றுக் கிடத்தலே வாய் + அம் >  வய் + அம் > வயம்.

சாவு + அம் என வந்து குறுகிச் சவமானதுபோல,   வாய் + அம் > வயமென்றும் குறுகுதற் குரித்தேயாம்.

வை, வாய் என்பன ஏனை மொழிகளிலும் பரவியுள்ளது. இதனை இன்னோரிடுகையில் பார்ப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.