திங்கள், 21 ஜூன், 2021

கால் - நீட்சிக்கருத்து உருளையை மாறுகொண்ட சொல்.

 இன்று  கால் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோ.

காலுதல் என்பது ஒரு வினைச்சொல். அது நீண்டு ஓடிக் கீழிறங்குவதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக,  ஒரு நீர்வீழ்ச்சியில் நீரானது நீண்டு ஓடிவந்து மேடான நிலத்திலிருந்து கீழிறங்குகிறது. " மலையினின்று கான்றொழுகும் நீர்"  என்று இதைக் குறிப்பர். சூரியனிலிருந்து கதிர் கீழிறங்குதலும்  " பகல் கான்று எழுதரும் பரிதி " என்பர் ( பெரும்பாணாற்றுப் படை 2).  இவற்றில் நீங்கள் கால் என்பதன் நீட்சிக் கருத்தை அறிந்துகொள்ளலாம்.

கால் - கான்று என்பது வினை எச்சம். கான்ற என்பது பெயரெச்சம். கான்றது, கால்கின்றது, காலும் என்பன இறந்தகால, நிகழ்கால, எதிர்கால முற்றுவினை வடிவங்கள்.

மனிதனின் காலும் விலங்குகளின் காலும் உடலிலிருந்து வெளிப்பட்டுக் கிழிறங்குவன. இங்கும் நீட்சிக் கருத்தே காண்கிறோம்.

காற்றும் நீண்டு வீசுவதுதான்.  கால் என்ற பெயர்ச்சொல்லிலிருந்து கால்+து > காற்று என்று சொல் அமைகிறது. நேரம் என்பது குறுகிய காலம்.  ஆனால் கால் > காலம் என்பது நீண்டு செல்லும் பொழுது ஆகும்.

காலம் என்பது எதற்கும் காத்திருப்பதில்லை. அது ஓடிவிடுகிறது.  நேற்றைப் பொழுது இப்போது எங்கே?  அது தொலைந்துவிட்டது.  யாரிடமாவது வீண்வாதம் செய்துகொண்டிருந்திருந்தால், காலம் ஓடியிருக்குமே.... அந்தக் காலம் போனது போனதுதான்.  இதனால் ஆங்கிலப் பழமொழி Time and tide waits for no man " காலமும் கடற்பெருக்கும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை"  என்று வருகிறது.   அம் விகுதி பெறாமல் கால் என்ற அடிச்சொல்லும் காலம் குறிக்கும்.

" நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா"  

என்ற ஒளவையின் பாடலில் கால்  என்பது செய்த காலம் அல்லது பொழுது என்னும் பொருளில் வருகிறது. இங்கு இது ஓர் உருபு ஆகும்.

பேச்சுமொழியில் கால் என்பது வரும்.  " அவரு வந்தாக்க எங்கிட்ட சொல்லு: என்பது  உண்மையில் வந்தக்கால் என்பதே ஆகும்.  எழுத்துமொழியை நோக்க "வந்தாக்க" என்பது சிதைவு.  கால் என்பது  ~க  என்று சிதைந்துவிட்டது.  கா என்னும் எழுத்து க என்று குறுகியும் கால் என்பதில் லகர ஒற்று கடைக்குறையாகியும் வந்தன.  நம் பழைய இலக்கணங்கள் இவற்றைக் கண்டுகொள்ள மாட்டா.  தமிழின் எல்லா நூல்களும் கிடைக்காமல் போய்விட்டால்,  க என்ற எழுத்தை வைத்துக்கொண்டு அது கால் என்பதன் திரிபு என்று கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. எந்த ஆய்வாளருக்கும் கடினமே.

வண்டிக்கால்கள்

வண்டிகளுக்கு ஒரு காலத்தில் சக்கரம் இல்லை. அதை தாங்கிக்கொள்ள நாலு அல்லது இரண்டு கால்கள்  வண்டிகட்கு  இருந்தன.  இவை வண்டிக் கால்கள் அல்லது சகடக் கால்கள்  எனப்பட்டன.  பின் வண்டி "அறிவியல்"  வளர்ந்து,  உருளைகள் வந்த காலத்திலும் அந்த உருளைகளைக் கால்கள் என்றே குறித்தனர்.  நீட்சிக்குப் பதிலாக வளைவு வந்துவிட்டாலும் பெயர் அதுவாகவே இருந்தது.  நாலடியாரில் இது " சகடக் கால்" என்று குறிக்கப்பட்டது.  இப்போது வண்டிக்கால் என்றாலும் அது மாட்டுவண்டி குதிரை வண்டி முதலியவற்றின் உருள்சுற்றிகளையே குறிக்கின்றனர்.  உந்துவண்டியின் ரோடாக்கள் அவ்வாறு குறிக்கப்படுவதில்லை. 

ரோடா என்பது பக்கப் பட்டியலில் உள்ளது.  கண்டுகொள்க.

நீட்சிக்கருத்துடைய கால் என்ற சொல்,  நாளடைவில் உருட்சிப்பொருளைக் குறிக்க வளர்ந்தது உண்மையில் ஒரு பொருள்திரிபே ஆகும்.   ஆனால் இயல்பாகவே இரு பொருளையும் குறித்தது என்று அகரமுதலி வரைவோர் அலட்டிக்கொள்ளாமல் பட்டியலிட்டனர். யாரும் ஏன் என்று விளக்கினார்கள் இல்லை. மரப்பட்டையைக் குறித்த சீரை என்பது சீலை என்று திரிந்து அணியும் நீள்துணியைக் குறித்ததும் இவ்வாறானதே என் க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ஞாயிறு, 20 ஜூன், 2021

நம் இனிய நேயர்கள்

 உழையென் றுழைத்தோர் இடுகைமுன் வைத்துப்

பிழையொன் றிருந்தாலும் பேசார்----- குழைவின்றி

நம்நேயர் சென்றிடுவார் நன்றல சுட்டாரே

எம்நாளும் செல்லும் இனிது. 


உழையென் றுழைத்து -  கடினமாக வேலைசெய்து;

இடுகை முன் வைத்து -  ஓர் இடுகையை வெளியிட்டு;

பிழையொன் றிருந்தாலும் =   பிழை ஒன்றோ காணப்பட்டாலும்;

பேசார் -  தம்முள் அதுபற்றிப் பேசிக்கொள்ள*  மாட்டார்கள்

குழைவின்றி  -  மன வருத்தம் இல்லாமல்;

நம் நேயர் சென்றிடுவார் -   நம்  வலைத்தள அன்பர்கள் போய்விடுவார்கள்;

நன்றல -  அப்பிழைகளை;

சுட்டாரே - எழுதியவரிடம்  எடுத்துக்காட்ட மாட்டார்கள்:

எம் நாளும் - எங்கள் காலமும் 

இனிது செல்லும்-   கசப்பு இல்லாமல்  போகும்.

( பின்  என்றாவது அதைக் கண்டு திடுக்கிட்டுத் திருத்துவோம் )

என்றபடி

மெய்ப்பு பின்னர்.

* இந்தக் குறியிட்ட பதங்கள் அழிக்கப்பட்டு,

கண்டு மீண்டும் புகுத்தப்பட்டன. 21062021   1033

Remarks: Hacked . restored 

சகடு, சகடை, சாகாடு,( வண்டிகள்)

சக்கரம் என்ற சொல் ஆய்ந்து தெளிவுறுத்தப்பட்டது.  அதற்கான இடுகையை இங்குக் காணலாம்:

 சக்கரம் , இரதம் :

https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_28.html

சக்கரம் :

https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_28.html

சக்கரம் என்ற தமிழ்ச்சொல் அயலிலும் சென்று வழங்குவது.  சக்கரதாரி -  சக்கரத்தைத்  ஆயுதமாகத் தரித்தவர்.   தரி - தரித்தல்  > தாரி. முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

தரித்தல் என்பது அணிதல் என்று பொருள்படும்.  தரித்தல் என்பது அணிதல் என்பதே வழக்கில் பொருள் என்றாலும் ஒருவன் ஒன்றைத் தரிக்குங்கால்,  அவன் அதில் காட்சியளிக்கிறான்,  காட்சி அளித்தல் - காட்சி தருதல்.  எனவே தருதலுக்கும் தரித்தலும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்ளலாம்.  தரு > தரி .தரித்தல் எனச் சொல் பிறந்தது.

சகடம் என்பது சகடு என்றும் அம் விகுதி இல்லாமல் இன்னொரு வடிவத்தில் தோன்றும்.  

மடி - மரி என்ற திரிபு விதிப்படி, டகர ரகரம் ஆகும்.

அரு என்பது அடுத்துச் செல்லுதலுடன் பொருள் தொடர்பு கொண்டது.   அருகில் என்பது அடுத்து என்று பொருள்தருதல் அறிக.  அருகுதல் என்றால் குறைதல் என்று பொருள்தரும்.  அடுத்துச்செல்லுங்கால் செல்பவனுக்கும் சென்றடையும் தொலைவுக்கும் உள்ள இடைவெளி அருகுகிறது  அல்லது குறைகிறது என்பதை அறியவும். டு - று பொருள் அணிமையும் தழுவலும் காண் க.  தொலைவு குறுகுதல் அடுத்தல் என்பது குறிக்கும்.

எனவே சக்கரம்  ( சறுக்கரம் ) ,  சகடம்  ( சறுக்கடம் )   என்பவற்றோடு  சகடு என்பதன் அணுக்கம் காண்க.  சறுக்கு +  அடு என்பதில் அடு என்பதில் விகுதி இல்லை.  அடுத்தல் என்ற பொருளில் முதனிலைத் தொழிற்பெயர் .  இனி அடு என்பது ஐ தொழிற்பெயர் விகுதி பெற்று முடியவும் பெறுமாதலின்,  சகடை என்ற சொல்லும் ஆகி வண்டியையே குறித்தது.  

இனிச் சகடு என்பது சாகாடு என்றும் சகரம் நீண்டும்  அடு என்பது முதனிலை நீண்டு ஆடு என்றும் பெயராம். இச்சொல் வந்த குறள் நீங்கள் அறிந்ததே.

" பீலி பெய் சாகாடும் அச்சிறும்..." (குறள்).

ஊர்தி தொடர்பான இச்சொற்கள் பல்வேறு வடிவங்களில் மொழியில் தோன்றுதலானது, இவை பழங்காலத்தில் பெரிதும் வழங்கப்பட்டன என்பதையே காட்டுகிறது.

வண்டி என்ற சொல் வளைந்த உருளையைக் கொண்டதாகிய ஊர்தி என்ற பொருளைத் தருவது.  வள் -  வளைவு.  வள் + தி >  வண்டி.  ஒப்பு நோக்குக:  நள்+து > நண்டு. ( இதற்கும் ஓர் இடுகை விளக்கம் உள்ளது).

வளைவு :  வண்டி என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு:  

வாங்கு + அன் + அம் > வாங்கனம் > வாகனம்.  

வாங்கு என்பது  வளைவு,   வாங்கரிவாள்,   வாங்குவில் தடக்கை ( பு.வெ.மாலை).

சகடம் வண்டி இந்தச் சொற்களில்  பின்னது  காலத்தால் பிற்பட்ட சொல் என்க. வளைசுற்றி  அல்லது உருளை என்பது பின்னரே அவ்வுருவை அடைந்த பொருள்.  சகடம் என்பது  தாங்குருளை  சுற்றுருவை    அடையுமுன் இருந்தது.  சுற்றுரு முழுமையுடன் அதன் பயன்பாடும் வளர்ச்சி  அடைந்தபின் சிலகாலம் செல்ல,   சகடம் என்ற சொல் பேச்சுவழக்கிறந்து விட்டது. அதன் பொருளை வண்டி என்ற சொல்லே உணர்த்திற்று. வாழும் சொல் வண்டி எனினும் இற்றை நிலையில் அது நீடிக்குமா என்று தெரியவில்லை. நீடிக்கவேண்டும் என்பது எம் அவா.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.